வெள்ளி, 29 அக்டோபர், 2021

ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் மீட்கப்பட்ட பெண் : யார்னே தெரியாத ரெண்டு பேர் வெள்ளத்துல குதிச்சு வந்தாங்க”

“யார்னே தெரியாத ரெண்டு பேர் வெள்ளத்துல குதிச்சு வந்தாங்க” : காப்பாற்றப்பட்ட இளம்பெண் நெகிழ்ச்சி!

கலைஞர் செய்திகள்  : ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட வெள்ளத்திலிருந்து யாரென்றே அறியாத இளைஞர்களால் மீட்கப்பட்ட இளம்பெண் தானும், குழந்தையும் காப்பாற்றப்பட்டது குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் குளித்துக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் குழந்தையுடன் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சிக்கிக்கொண்டார்.


காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, பெரும் பாறைகள் கொண்ட இடத்தில் சிக்கிக்கொண்ட அந்த தாயையும் குழந்தையையும் மீட்க இளைஞர்கள் சிலர் முயற்சி செய்தனர்.
 குழந்தையையும், தாயையும் பாதுகாப்பாக மீட்டு அழைத்து வரும்போது மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர்களில் இருவர் பிடிமானம் இல்லாமல் வெள்ளநீரில் விழுந்தனர்.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்கள் போராடி நீந்தி கரை சேர்ந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

வெள்ளப்பெருக்கின்போது தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது துணிவோடு போராடி தாயையும் குழந்தையையும் காப்பாற்றிய இளைஞர்களின் தீரமான செயலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியதோடு, அவர்கள் அரசால் சிறப்பிக்கப்படுவார்கள் என்றும் உறுதியளித்தார்.

இந்நிலையில், வெள்ளத்தில் மீட்கப்பட்ட இளம்பெண் செய்தித்தளம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவர், “கொரோனாவால் 2 ஆண்டுகளாக எங்கும் செல்லாத நிலையில் ஆனைவாரி முட்டல் நீர்வீழ்ச்சிக்கு சென்றோம்.

எனது அண்ணனின் 8 மாதக் கைக்குழந்தை சுஜினாஸ்ரீயை நான் வைத்திருந்தேன். குழந்தை அழுததால் தண்ணிரில் இருந்த மீன்களைக் காட்டிக்கொண்டே சென்றேன். திடீரென நீரின் மட்டம் அதிகமானது.

ஒருகட்டத்தில் நான் நின்றிருந்த பாறை தண்ணீரில் மூழ்கியதால் நான் மேலே ஏற முயன்றேன். ஆனால் அதிகமாக வழுக்கியதால் என்னால் கரைப் பக்கம் செல்ல முடியவில்லை. வேறு வழியின்றி அருகே இருந்த பாறை மீது கஷ்டப்பட்டு ஏறிப் பிடித்துக்கொண்டேன்.

என் அண்ணன் வருவதற்குள் யாரோ இரண்டு பேர் வெள்ளத்தில் குதித்து என்னையும், குழந்தையையும் மீட்டு மேலே அனுப்பினார்கள். நாங்கள் பாதுகாப்பாக மேலே ஏறியதுமே எங்களை காப்பாற்றிய இருவர் வெள்ளநீரில் தவறி விழுந்துவிட்டனர்.

அவர்கள் மீண்டும் பாதுகாப்பாக நீந்தி வந்ததும்தான் நாங்கள் நிம்மதியடைந்தோம். அவர்கள் அப்துல் ரகுமான், லட்சுமணன் என பின்னர் அறிந்துகொண்டோம். யாரென்றே தெரியாத எங்களுக்காக உயிரைப் பணயம் வைத்த அவர்கள்தான் கடவுள்.” என நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: