புதன், 27 அக்டோபர், 2021

கொடநாடு: சசிகலா கொடுத்த குறிப்புகள்... எடப்பாடி மீது கொலைச் சதி வழக்கு?

கொடநாடு:  சசிகலா கொடுத்த குறிப்புகள்... எடப்பாடி மீது கொலைச் சதி வழக்கு?

மின்னம்பலம்  :  கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் அடுத்த கட்ட விசாரணையில் முதன் முறையாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நோக்கிய நகர்வுகளில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது, 2017 ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி நள்ளிரவு நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த கொடநாடு பங்களாவில் கொலை கொள்ளைகள் அரங்கேறியது.


நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி மாறியதும் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, கொடநாடு வழக்கும் சூடு பிடித்தது, கொடநாடு வழக்கில் கூடுதல் விசாரணை வேண்டாம் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரும் இந்த வழக்கில் ஒரு சாட்சியுமான அனுபவ் ரவி என்பவர், உச்ச நீதிமன்றம் வரை நீதிமன்றம் சென்றார். ஆனால் உச்ச நீதிமன்றம் கூடுதல் விசாரணை செய்யலாம் என்று கூறிவிட்டது. எடப்பாடி ஆளுநரை சந்தித்து மனு கொடுத்து கூடுதல் விசாரணைக்கு எதிராக போராடினார்.
கடந்த ஆட்சியில் எடப்பாடிக்கு நம்பிக்கையாக இருந்தவரும், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலினை (சட்டமன்ற காவலர் போர்வையில்) வெளியில் தூக்கிப்போட்டவருமான அப்போதையை டிஐஜி சுதாகரைத்தான் மேற்கு மண்டல ஐஜியாக பதவி உயர்வு கொடுத்து கொடநாடு வழக்கை விசாரிக்கும் பொறுப்பை ஒப்படைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

ஐ.ஜி. சுதாகர் கொடநாடு எஸ்டேடுக்கு சென்று இடம் சூழல் பற்றி ஆய்வு செய்தார். அங்கிருந்த தொழிலாளிகள் மற்றும் மேனேஜர் நடராஜனிடம் விசாரணை நடத்தினார். சேலத்தில் விபத்துக்குள்ளாகி மரணமடைந்ததாக கூறப்படும் ஓட்டுநர் கனராஜின் சகோதரர் தனபாலிடமும் விசாரணை செய்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக் கண்ணன், ஐஜி சுதாகர் மற்றும் எஸ்.பி, ஐஒ போன்ற அதிகாரிகள் கொடநாடு பங்களாவுக்குள் சென்று சுமார் இரண்டு மணி நேரம் விசாரணை செய்தனர். அப்போது ஏடிஜிபி தாமரைக்கண்ணன், ‘மொத்தம் மூன்று அறைகள் உடைக்கப்பட்டுள்ளன. ஆனால் எஃப். ஐ. ஆரில் இரண்டு அறைகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதே எப்படி?’என்று கேட்டிருக்கிறார். அதற்கு கொடநாடு எஸ்டேட் மேனேஜர், ‘ஆமாம் சார். நாங்கள் மூன்று அறைகள் என்றுதான் சொன்னோம். அவர்களும் பார்த்தார்கள். அப்போது விசாரணை அதிகாரிகளாக இருந்த போலீஸார்தான் இரு அறைகள் என்று எழுதியுள்ளார்கள்’என்று உண்மையை உடைத்தார்.

அதன் பிறகு கொடநாடு எஸ்டேட் மேனேஜர் நடராஜன், ஐஜி சுதாகர், ஏடிஜிபி தாமரைக்கண்ணன் மூவரும் ஒரு அறையில் உட்கார்ந்து பேசியுள்ளார்கள். அப்போது, ‘இந்த வழக்கில் நல்ல முன்னேற்றம் உள்ளது. நீங்கள் இன்னும் ஒத்துழைப்பு கொடுத்தால் வழக்கு இன்னும் சிறப்பாக இருக்கும்’ என்று ஐஜியும் ஏடிஜிபியும் கூறியுள்ளார்கள். அதற்கு கொடநாடு எஸ்டேட் மேனேஜர் நடராஜன், ‘ சார்... இந்த விசாரணையில போலீஸுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கணும்னு சின்னம்மா சொல்லியிருக்காங்க’என்று தெரிவித்துள்ளார்.

அந்த ஆலோசனையின் போது போலீஸ் அதிகாரிகள் நடராஜனிடம், ‘ கொள்ளை போன அறைகளில் என்ன இருந்தன என்பதெல்லாம் சசிகலாவுக்கு நன்றாகத் தெரியும். அவரிடம் சில தகவல்களை கேட்டு சொல்லுங்கள் இல்லையென்றால் அவர்களை இது தொடர்பாக பிரஸ்மீட் வைக்க சொல்லுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

இந்தத் தகவலை சசிகலாவிடம் கொண்டு சென்றிருக்கிறார் மேனேஜர் நடராஜன். இதையடுத்து சசிகலாவும் சில குறிப்புகளைக் கொடுத்து போலீஸ் அதிகாரிகளிடம் கொடுக்கச்சொல்லியுள்ளார். அந்த குறிப்புகளுக்குப் பிறகுதான், போலீஸ் விசாரணை வேகம் எடுத்துள்ளதாகச் சொல்கிறார்கள் அதிமுக வழக்கறிஞர்கள்.

இதுகுறித்து கொடநாடு விசாரணை வட்டாரத்தில் மேலும் நாம் துருவியபோது, “சம்பவம் நடந்தபோது வழக்கு சம்பந்தமாக டவர் லொக்கேஷன் மற்றும் செல்போன் அழைப்பு விவரங்கள் பெற்றும் அதை வழக்கில் இணைக்கவில்லை. அதைக் கண்டுபிடித்து விசாரித்து வருகிறார் ஐஜி சுதாகர்.

கொடநாடு பங்களாவிலிருந்து எடுத்துவரப்பட்ட ஆவணங்கள் அடங்கிய பையை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சில காலம் ஓட்டுநராக இருந்த கனகராஜ்தான் சேலம் இளங்கோவனிடம் கொடுத்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. மேலும் வழக்கு விசாரணையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடநாடு சம்பவத்திற்கு சதிவேலைக்கு 120(b)க்கு உடந்தையாக இருந்துள்ளார் என்றும், தமிழக கூட்டுறவுச் சங்கத் தலைவர் இளங்கோவன் உடந்தையாக இருந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் கனகராஜ் அண்ணன் தனபால்,(விபத்து நடக்கும் முன்பு சித்தி வீட்டில் தங்கி சித்தி மகன் ரமேஷ் பைக் எடுத்துப்போய் விபத்துக்குள்ளானது) ரமேஷ் இருவரும் விசாரணை துவக்கத்தில் ஆர்வமாக ஒத்துழைப்பு கொடுத்தவர்கள், தற்போது ஏதோ காரணத்திற்காகச் சேலத்தில் உள்ள முக்கிய சாட்சிகளையும் கலைக்க முயற்சி செய்துள்ளனர்.

தனபால் மற்றும் ரமேஷ் இருவரும் பின் வாங்கியுள்ளதால், நேற்று அக்டோபர் 25ஆம் தேதி, மாலை இருவரையும் பிடித்து வைத்துள்ளார்கள் விசாரணை போலீஸார். சில காரணங்களுக்காக பாதுகாப்பில் வைத்துள்ளோம்” என்கிறார்கள்.

வழக்கின் கூடுதல் குற்றப் பத்திரிகையை நாளை 27ஆம் தேதி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும், ஆனால் விசாரணை நீடித்துக்கொண்டிருப்பதால் காலக்கெடு கேட்டு போலீஸ் சார்பாக மனுசெய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

-வணங்காமுடி

கருத்துகள் இல்லை: