சனி, 30 அக்டோபர், 2021

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சிக்கு தாவிய 7 எம்எல்ஏக்கள்

 மாலைமலர் : பாஜக தேர்தல் அறிக்கையின் 90 சதவீதத்தை நிறைவேற்றிவிட்டதாக பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை அகிலேஷ் யாதவ் கடுமையாக விமர்சித்தார்.
லக்னோ:  உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான தயாரிப்பு பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. வழக்கம்போல் அதிருப்தி தலைவர்கள் கட்சி தாவும் சம்பவமும் அரங்கேறத் தொடங்கி உள்ளது.
அவ்வகையில், பாஜகவைச் சேர்ந்த ஒரு எம்எல்ஏ, பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6 எம்எல்ஏக்கள் சமாஜ்வாடி கட்சியில் இணைந்துள்ளனர். கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில், அவர்கள் தங்களை சமாஜ்வாடி கட்சியில் இணைத்துக்கொண்டனர்.


இந்நிகழ்ச்சியில் பேசிய அகிலேஷ் யாதவ், முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கடுமையாக தாக்கினார். அத்துடன் பாஜகவும் காங்கிரசும் ஒரே மாதிரியானவை என்றும் கூறினார்.
பாஜக தேர்தல் அறிக்கையின் 90 சதவீதத்தை நிறைவேற்றிவிட்டதாகவும், மீதமுள்ள 10 சதவீத வாக்குறுதிகளை சில மாதங்களில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவையும் அகிலேஷ் யாதவ் கடுமையாக விமர்சித்தார்.

‘பாஜக தலைவர்கள் அதன் தேர்தல் அறிக்கை பக்கங்களை முழுமையாக புரட்டிப் பார்க்கவில்லை. தேர்தல் அறிக்கையில் என்ன இருந்தது என்பதை மறந்துவிட்டார்கள். 2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்துவதற்கான திட்ட வரைவு தயாரிக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் முதலில் குறிப்பிடப்பட்டிருந்தனர். இது தொடர்பாக விவசாயிகளுக்கு அவர்கள் உறுதியளித்தனர். அந்த வாக்குறுதி என்ன ஆனது?’ என அகிலேஷ் கேள்வி எழுப்பினர்.

கருத்துகள் இல்லை: