புதன், 11 ஆகஸ்ட், 2021

வேலுமணி ரெய்டில் கைப்பற்றப்பட்டது என்ன? விஜிலென்ஸ் அறிவிப்பு!

 மின்னம்பலம் : முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை மையமாக வைத்து நேற்று (ஆகஸ்ட் 10) 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது.
இது தொடர்பான அறிக்கையை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரபூர்வமாக நேற்று இரவு வெளியிட்டது.
அந்த அறிக்கையில், “முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வந்த புகார்களின் அடிப்படையில் ஆரம்பக்கட்ட விசாரணை நடத்தப்பட்டது.
இதன் விசாரணை அறிக்கை அரசுக்கும் சென்னை உயர் நீதிமன்றத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. உயர் நீதிமன்றம் இந்த விஷயத்தில் அடியாழம் வரை சென்று விசாரிக்க வேண்டும் என்று மேலும் விசாரணை நடத்த வழிகாட்டியது.
அதனடிப்படையில் நடத்தப்பட்ட மேல் விசாரணைகளின் அடிப்படையில் வேலுமணி மீதும் 16 நபர்கள் நிறுவனங்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.


அதன் அடுத்த கட்டமாக ஆகஸ்ட் 10ஆம் தேதியன்று மொத்தம் 60 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. கோவையில் 42 இடங்களிலும், சென்னையில் 16 இடங்களிலும், காஞ்சிபுரம், திண்டுக்கல் தலா ஒரு இடம் என 60 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

வேலுமணி, அவரது உறவினர்கள், நண்பர்கள், அதிகாரிகள், நெருங்கிய தொடர்புடையவர்களின் வீடுகள், அலுவலகங்கள், பண்ணை வீடுகள், தொழில் நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இந்தச் சோதனைகளின்போது 13 லட்சத்து 8 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கம், நிலப் பதிவுகள் தொடர்பான ஆவணங்கள், தொழில் நிறுவனங்களுக்கு இடையிலான பரிமாற்ற ஆவணங்கள், இரு கோடி ரூபாய்களுக்கான பிக்சட் டெபாசிட் ஆவணம், மாநகராட்சிகள் தொடர்பான அலுவலக ரீதியான ஆவணங்கள், ஹார்ட் டிஸ்க்குகள், குற்றவியல் ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இதுதொடர்பான புலனாய்வு விசாரணை தொடர்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறது.

இதற்கிடையே நேற்று இரவு தன் மீதான சோதனை முடிந்ததும் இரவு எம்.எல்.ஏ.ஹாஸ்டலில் இருந்து புறப்பட்டு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார் வேலுமணி.

-வேந்தன்

கருத்துகள் இல்லை: