சனி, 14 ஆகஸ்ட், 2021

ராஜாஜிகளின் தடைகளை உடைத்து நெருப்பாற்றை நீந்தி கடந்துவந்த பராசக்தி

 Dhanasekar ManickaMurthy  ·   நெருப்பாற்றை நீந்திக் கடந்த கலைஞரின் பராசக்தி!
கலைஞரின் பராசக்தி என்று குறிப்பிடுவதற்கு முக்கியக் காரணம்,
 அதன் மிகப்பெரிய வீச்சுக்கு அந்தத் திரைப்படம் முன் வைத்த கலைஞரின் அரசியலும் அன்றைக்கு திமுகவைச் சேர்ந்த சிவாஜி கணேசனின் மிகச்சிறந்த நடிப்பும்தான்.
பராசக்தி திரைப்படத்தில் திராவிட அரசியலையும் அதன் சிந்தாந்தத்தையும் தன்னுடைய ஆழமான அனல் தெறிக்கும் அரசியல் வசனங்களின் மூலமாக மக்களிடம் கொண்டு சேர்த்தார் கலைஞர்.
கலைஞரின் மறைவுக்குப் பின்னர் பராசக்தியைக் குறி்ப்பிடாதவர் யாரும் இல்லை.
ஆனால், பராசக்தி வெளியிடப்படும்போது இருந்த சூழல், அந்தப் படத்திற்கு எதிரான உக்கிரமான எதிர்ப்பு, அது வெளியாவதற்கு எப்படி எல்லாம் போராட்டம் நடத்தப்பட்டது என்பது இன்றைய தலைமுறையினர் யாருக்கும் தெரியாது
பராசக்தியை வெளியிடக் கூடாது, அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று அன்றைய சென்னை அரசாங்க முதல்வர் மூதறிஞர் ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் அரசிடம் ஏராளமான புகார் மனுக்கள் குவிந்தன. திரைப்படம் பார்ப்பனர்களுக்கு எதிரானது என்ற கருத்து பரவியதால் அவர்களின் கட்டுபாட்டிலிருந்த நாளிதழ்களில் படத்திற்கு எதிராகக் கடுமையான கருத்துகள் எழுதப்பட்டன.


இதில் படம் எப்படி வெளியானது என்று தணிக்கைக் குழு மீது பார்ப்பன விமர்சகர்கள் கடும் தாக்குதல் தொடுத்தனர்.
அப்போது பரம்பி லோனப்பன் என்பவர் ரகசியம் என்று தலைப்பிட்டுக் கடிதம் ஒன்றை ராஜாஜிக்கு எழுதினார். யார் இந்த பரம்பி லோனப்பன்? அவருடைய லெட்டர் பேட்டில் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மற்றும் கொச்சின் மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன் இந்திய கத்தோலிக்க சங்கத்தின் தலைவர் என்றும் சென்னை மற்றும் திருவாங்கூர்- கொச்சின் மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களின் வழக்கறிஞர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருந்ததாவது:

என்னுடைய டைப்பிஸ்ட்டுக்குக்கூடத் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக ரகசியமாக நான் இந்தக் கடிதத்தை கைப்பட எழுதுகிறேன். சில நாட்களுக்கு முன்னதாக துரதிருஷ்டவசமாக பராசக்தியைப் பார்க்க நேரிட்டது. அந்தப் படம் இந்து மதத்தையும், பூஜைகளையும், கோயில்களையும் கிண்டல் செய்யும் ஒரு கம்யூனிஸ்ட் பிரச்சாரப் படமாக இருந்தது. அதில் வுறுமையின் கொடுமையினால் எத்தனை கொலை செய்தாலும் அது குற்றமில்லை. அப்பாவி குழந்தைகளுக்கு உணவு அளிக்க முடியாது போனால், அவர்களைக் கொல்வதும் தவறில்லை. தற்போதைய சமூக அமைப்பானது ஏழை மக்களுக்குக் கொடூரமானதாக உள்ளது. அரசு ஏழைகள் மற்றும் பிச்சைக்காரர்களிடம் கண்டுகொள்ளாத போக்கையே கடைப்பிடிக்கிறது.
சகோதரா் ஒருவர் தன்னுடைய சகோதரியை மானபங்கபடுத்தும் கொடூரமான காட்சி மனதைப் பாதிப்பதாக உள்ளது, அது பொது மக்கள் பார்ப்பதற்கான தகுதியான படம் அல்ல. எனவே, அரசு இந்தப் படத்தை பரிசீலித்து, மக்கள் மனதில் இது மோசமான பாதிப்பை ஏற்படுத்துமா என்பதை ஆராய்ந்து, படம் தொடர வேண்டுமா என்பதைப் பரிசீலிக்க வேண்டுகிறேன். நான் இதைச் சொந்த நலனில் இருந்து எழுதவில்லை. பொது மக்களின் நலனிலிருந்தே எழுதுகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

அதே சமயத்தில் இன்னொரு கடிதத்தை உப்பு மற்றும் எண்ணெய் வியாபாரி ஒருவர் ராஜாஜிக்குக் கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில் படம் முழுவதும் கம்யூனிஸ்ட் பிரச்சாரமும், நாத்திக பிரச்சாரமும் இருந்ததாகவும், பெண்களை இழிவாகக் காட்டும் காட்சிகள் இருந்ததாகவும் இதை எப்படி மத்திய தணிக்கை குழு அனுமதித்தது என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். இதே போன்று பி.எஸ்.சுப்ரமணியம் என்ற உர வணிகர் இன்னும் ஒரு நாள் கூட இத்திரைப்படத்தை அனுமதிக்க முடியாது என்று கோபத்தோடு மிகச் சுருக்கமாக தந்தி அனுப்பியிருந்தார்.

இதைத் தொடர்ந்து பி.இ.முருகேசன் என்பவர் சூளை சேவா சங்கம் என்ற காங்கிரஸ் ஆதரவு அமைப்பின் சார்பாக கடுமையான தொனியில் புகார் மனு ஒன்றை ராஜாஜிக்கு அனுப்பியிருந்தார். அத்துடன் (பின்னாளில் முதல்வராக இருந்த எம்.பக்தவச்சலம் மேலாண்மை இயக்குநராக இருந்த) பாரதி தேவி என்ற தேசிய தமிழ் நாளிதழில் படம் புரட்சியை உருவாக்கி விடும் என்று கட்டுரை எழுதி அச்சத்தைத் தெரிவித்திருந்தார். திராவிட நாடு பிரச்சினையை உருவாக்கி விடும் என்றும் அதில் எச்சரிக்கை விடுத்திருந்தார். இது போல பல கடிதங்களும் புகார் மனுக்களும் அன்றைய முதல்வர் ராஜாஜியை படத்தைத் தடை செய்ய நிர்பந்தித்தன.

சிலர், கடிதங்களில் பராசக்தி படத்தில் வரும் பூசாரி ஒரு முஸ்லிம் என்றும் அவரை திட்டமிட்டே இந்து பூசாரி வேடத்தில் நடிக்க வைத்து இந்து மதத்தைக் கேவலப்படுத்தியுள்ளார்கள். இதற்காகப் படத்தயாரிப்பாளர், நடிகர்கள், கதாசிரியர் ஆகிய அனைவருக்கும் பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்று கற்பனை கலந்த மதவாதத்துடன் நஞ்சைக் கக்கி இருந்தன.

அப்போது வந்துகொண்டிருந்த தினமணி கதிர் வார இதழ் பராசக்தி மீது கடுமையான தாக்குதல் தொடுத்திருந்தது. திரைப்படத்தின் முக்கிய நோக்கம் இந்துக் கடவுள்களை தாக்குவதுதான். அத்துடன் அரசையும் சமூகத்தையும் தாக்குவதாக உள்ளது என்று குறி்ப்பிட்டிருந்தது.
இதன் பிறகு பராசக்தி படம் வெளியான 10 நாட்களுக்குப் பின்னர் அன்றைய சென்னை அரசாங்கத்தின் உள் துறை அமைச்சகம் படத்தை தடை செய்வதற்கான வழிகளை ஆராய்ந்தது. இந்த முயற்சியில் அன்று மும்முரமாக ஈடுபட்டவர் இந்திய சிவில் சர்வீஸைச் சேர்ந்த ஓ.புல்லா ரெட்டி என்ற உயர் அதிகாரி. இவர் உள் துறை அமைச்சகத்தின் செயலர் ஆவார்.

புல்லா ரெட்டி சென்னை போலீஸ் கமிஷனர் ஜே.தேவசகாயத்திடம் வாய்மொழி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார். ஓர் உளவுத் துறை அதிகாரியை அனுப்பிப் படத்தைப் பார்த்துவிட்டு அதில் ஏதாவது ஆட்சேபிக்கக்கூடிய விஷயங்கள் உள்ளனவா என்பதைக் கண்டறிந்து வரக் கூறினார். ஆனால், உளவுத் துறையின் அறிக்கை படத்திற்கு சாதகமாகவே இருந்தது. இதற்குள் இப்பிரச்சினை தணிக்கைத் துறையையும் தாண்டி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்திற்கும் சென்று விட்டது.
இதனைத் தொடர்ந்து தணிக்கைத் துறை மீண்டும் படத்தைப் பரிசீலித்து படத்தில் அனுமதிக்கப்படாத மூன்று காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டது. அந்தக் காட்சிகள் அனுமதியின்றி சேர்க்கப்பட்டது கடுமையான விதி மீறல் என்று படக் குழுவினரிடம் பேசியது. அதற்காக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக எச்சரித்தது.

இதனை அடுத்து, படத்தயாரிப்பாளர்களான நேஷனல் பிக்சர்ஸ் மன்னிப்புக் கேட்டும் விளக்கக் கடிதமும் தணிக்கை குழுவிற்கு அனுப்பியது. இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட தணிக்கைத் துறையும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகமும் சட்ட நடவடிக்கையைக் கைவிட்டது. அமைச்சகம் எடுத்த முடிவை சென்னை அரசாங்கத்திற்குத் தெரிவித்தது. இதனால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலைக்கு சென்னை அரசாங்கம் தள்ளப்பட்டது. ஆனாலும் சென்னை அரசாங்கம் விடவில்லை. மறுபடியும் தணிக்கைத் துறைக்கு எழுதி தன்னை கலந்து பேசாமல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வெறும் எச்சரிக்கை மட்டும் என்ற அளவில் ஒரு தாராளவாத முடிவை எடுத்தது குறித்து தனது ஆட்சேபத்தைத் தெரிவித்தது.
அதன் பின்னர், அனுமதி பெறாமல் சேர்க்கப்பட்டதாகக் கூறப்பட்ட மூன்று காட்சிகள் நீக்கப்பட்டன. இது அனைத்து திரையரங்களுக்கும் தெரிவிக்கப்பட்டு காட்சிகள் நீக்கப்பட்டன (உதாரணமாக அம்பாள் வெறும் கல் என்ற வசனம் சைலண்டாக ஆக்கப்பட்டிருக்கும்).
இப்படி கிட்டத்தட்ட ஆறு மாத காலத்திற்கு எப்போது வேண்டுமானாலும் பராசக்தி தடை செய்யப்படலாம் என்ற நிலை ஏற்படுத்தப்பட்டது. இது அந்தப் படத்திற்கு ஒரு மிகப்பெரிய விளம்பரமாக மாறியது. அதன் பின்னர் பராசக்தி 200 நாட்களுக்கு அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றிகரமாக ஓடியது.
கலைஞரின் வாழ்க்கையைப் போலவே அவர் வசனம் எழுதி உயிர் கொடுத்த படமும் நெருப்பாற்றை நீந்திக் கடந்தது.
தகவல் ஆதாரங்கள் – திராவிட ஆராய்ச்சியாளர் எம்.எஸ்.பாண்டியனின் PARASAKTHI,Life and Times of a DMK Film. Economic and Political Weekly Annual No.March,1991.

கருத்துகள் இல்லை: