திங்கள், 9 ஆகஸ்ட், 2021

தமிழ்நாடு கடன் சுமை ரூ.5.70 லட்சம் கோடியாக உயர்வு- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

 மாலைமலர் :பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்களிடம் இருந்து தேவையான அளவுக்கு வரி வசூல் செய்தால் மட்டுமே அரசின் திட்டங்களை செயல்படுத்த முடியும் என நிதியமைச்சர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின்  கடன் சுமை ரூ.5.70 லட்சம் கோடியாக உயர்வு- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்
நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்ட நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
சென்னை:
தமிழ்நாட்டின் அரசு  நிதி நிலை குறித்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெள்ளை அறிக்கை வெளியிட்டார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில்  வருகிற 13-ந்தேதி தி.மு.க. அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
அதற்கு முன்னதாக கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை, வரி வருவாய் வீழ்ச்சி குறித்த தகவல்களை உங்களிடம் தெரிவிக்க இந்த அரசு கடமைப்பட்டுள்ளது. முதல்- அமைச்சரின் வழிகாட்டுதல்படி 3 மாதங்களாக உழைத்து இந்த அறிக்கையை தயாரித்து உள்ளோம்.


ஆந்திரா, பஞ்சாப் போன்ற மாநிலங்களின் பட்ஜெட் அறிக்கையை ஒப்பிட்டு பார்த்தும் 2001-ம் ஆண்டு நிதி அமைச்சர் பொன்னையன் தாக்கல் செய்த பட்ஜெட்டை பார்த்தும் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.

ஆந்திரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பட்ஜெட் உரையை விட அ.தி.மு.க. அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் முழுமையான, தெளிவான விவரங்கள் இடம் பெறவில்லை.
அரசு வெளிப்படை தன்மையுடன் செயல்படக்கூடியது என்பதை நிரூபிக்கும் வகையிலும், தேர்தல் அறிக்கையில் நாங்கள் கூறியபடியும் இந்த அறிக்கையை வெளியிட்டு இருக்கிறோம்.
பொதுவாக ஒரு அரசுக்கு அடிப்படை வருவாய் இல்லாமல் இருந்தாலும் குறிப்பிட்ட செலவினங்களை குறைக்க முடியாது.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது வருவாய் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது ரூ.17 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறை இருந்தது.

அவரது மறைவுக்கு பிறகு அடுத்த 5 ஆண்டில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடியாக அதிகரித்து உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக இது போன்ற நிலை ஏற்பட்டது என்று கூறினாலும் மற்ற மாநிலங்களுக்கு இது போன்ற சரிவு ஏற்படவில்லை.

அ.தி.மு.க. ஆட்சியில் வருவாய்க்கு அதிகமாக திருப்பி செலுத்த முடியாத அளவுக்கு கடனை வாங்கி குவித்துள்ளனர். அதன்படி தற்போது தமிழக அரசுக்கு ரூ.5 லட்சத்து 70 ஆயிரம் கோடி பொதுக்கடன் வைத்துள்ளது.

அந்த வகையில் ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் ரூ.2 லட்சத்து 63 ஆயிரத்து 976 கடன் உள்ளது.

அதில் இருந்து தமிழ்நாடு  மீண்டு வருவதற்கான நடவடிக்கைகளை தொடங்கி உள்ளோம்.

வரி வருவாயை பொறுத்த வரையில் 4 வழிகளில் அரசுக்கு வருவாய் கிடைக்கின்றன. வரிகள் மூலம் ஈட்டப்படும் வருவாய், வரி இல்லாத வருவாய், 3-வதாக மத்திய அரசு மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கும் வரி வருவாய் ஆகும். 4-வதாக திட்டங்கள் மூலம் கிடைக்கும் வருவாய்.

அதிமுக

இந்த 4 வழிகளிலும் கிடைக்கும் வருவாயை திரட்டுவதில் அ.தி.மு.க. அரசு வீழ்ச்சியை சந்தித்து வந்திருக்கிறது. குறிப்பாக கடந்த 15 ஆண்டுகளாக வாகன வரி உயர்த்தப்படாமலேயே உள்ளது. சொத்து வரிகளும் மாற்றி அமைக்கப்படவில்லை.

இது போன்ற அனைத்து துறைகளிலும் உரிய வரிகள் விதிக்கப்படவில்லை.

என்னை பொறுத்தவரை ‘ஜீரோ’ டேக்ஸ் என்பது அர்த்தம் இல்லாதது ஆகும். சரியான நபர்களிடம் இருந்து வரி வசூல் செய்ய வேண்டும்.

பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்களிடம் இருந்து தேவையான அளவுக்கு வரி வசூல் செய்தால் மட்டுமே அரசின் திட்டங்களை செயல்படுத்த முடியும். ஏழை, நடுத்தர மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களையும் செயல்படுத்த முடியும்.

சாமானிய மக்களிடம் வரி வசூல் செய்வதை விட பெரும் பணக்காரர்களிடம் வரி வசூல் செய்வது பல்வேறு நாடுகளிலும் உள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் இது போன்று வரி வசூல் முறை வெற்றி பெற்றுள்ளது.

தமிழக மின் வாரியத்துக்கு மாநகராட்சி செலுத்த வேண்டிய மின் கட்டணங்கள் பல கோடி அளவுக்கு பாக்கி உள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் தமிழகத்தில் பல்வேறு மாநகராட்சி, பொதுத்துறை நிறுவனங்கள், மின்வாரியத்துக்கு பாக்கி வைத்துள்ளதால் புதிய மின்வாரிய பணிகளை தொடங்க முடியாத நிலை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்

கருத்துகள் இல்லை: