செவ்வாய், 10 ஆகஸ்ட், 2021

தமிழ்நாட்டின் திமுகதான் ஈழத் தமிழருக்கு விடிவைத் தேடித் தரும்: கொழும்பு கலைஞர் நிகழ்ச்சியில் ரவூப் ஹக்கீம் அதிரடி

Mathivanan Maran   -   tamil.oneindia.com  :கொழும்பு: திமுகதான் தமிழ் பேசும் மக்களுக்கும் ஈழத் தமிழருக்கும் விடிவைத் தேடித் தரும் என்று கொழும்பில் நடைபெற்ற மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 3-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கலைஞர்  நினைவாலயத்தின் ஏற்பாட்டில் 3-வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு கொழும்பு பிரைட்டன் ஹோட்டலில் கடந்த 7-ந் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமை வகித்தார். பிரதமர் மஹிந்த ராஜபக்சேவின் இந்து சமய விவகார ஆலோசகர் கலாநிதி பாபு சர்மா ராமச்சந்திர குருக்கள், மலையக மக்கள் முன்னணியின் துணைத் தலைவர் முனைவர் சிவலிங்கம் சதீஷ்குமார் ஆகியோர் நினைவஞ்சலி உரையாற்றினர்.
இந்த நிகழ்ச்சியில் ரவூப் ஹக்கீம் பேசியதாவது: கலை, இலக்கியம், அரசியல் என்று மூன்று துறைகளிலும் அகலக் கால் பதித்து இன்று நாம் எல்லோரும் வியக்கின்றளவு பெரும் தடயத்தை விட்டுச் சென்றிருக்கும் முத்தமிழ் அறிஞர் கலைஞரின்  இந்த நினைவு வைபவத்தில் வெறுமனே அவரின் நினைவுகளை மீட்டிப் பார்ப்பது என்பது மாத்திரமல்ல, அவர் நிலைநாட்டி விட்டுச் சென்றிருக்கின்ற சாதனைகளையும் நாங்கள் இன்று கொண்டாடுகின்றோம்.

இது இரங்கல் நிகழ்ச்சி அல்ல. அவரை கொண்டாடுகின்ற நிகழ்ச்சியாகும். அவர் மறைந்து மூன்று வருடங்கள் கடந்தோடி விட்டாலும், இன்னும் பத்துக் கோடி தமிழர்களின் மனங்களில் ஆழப் பதிந்த பெயராக இருக்கின்ற முத்தமிழ் அறிஞரை பற்றிப் பேசுவதென்றால், எங்கு தொடங்குவது?
எப்படி முடிப்பது என்பது தான் சிக்கல். கலை, இலக்கியம், அரசியல் ஆகிய மூன்று துறைகளிலும் உச்சம் தொட்ட அரசியல்வாதிகள் என்று தேடப்போனால் ஒரு சொச்சம் தான் எங்களால் தேடி எடுக்க கூடியதாக இருக்கும். அதனுள் எத்தனை பேர் வருவார்கள் என்பது தெரியாவிட்டாலும், அதில் உச்சாணியிலிருக்கும் ஒருவராக கலைஞர் நிச்சயமாக இருப்பார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.

கலைஞருடைய அரசியலை இறுதியில் தான் பேசலாமென நினைக்கின்றேன். முதலில் அவருடைய கலை, இலக்கியத்தை பற்றிப் பேசுவோம். கலை, இலக்கியம் என்று வருகின்ற போது கலைஞரை தவிர்த்து விட்டு கடந்த நூற்றாண்டின் கலை, இலக்கியத்தைப் பற்றிப் பேச முடியாது. அதில் எந்த சந்தேகமும் கிடையாது. அவருடைய எழுத்துக்கள் மற்றும் படைப்புக்களை பற்றி நிறையப் பேசலாம். என்னைப் பொறுத்தமட்டில் குறளோவியம் தந்தவர், அதிலும், திருக்குறளை பகுத்தறிவு வழி நின்று எங்களுக்கு பகுப்பாய்வு செய்து தந்த அவருடைய மொழி நடை - கருத்தாழமிக்க உரை நடை மிகவும் ஆழமானதும் விரிவானதுமாகும்.

அவ்வாறுதான் தொல்காப்பிய பூங்கா. தமிழில் இலக்கணத்தை எளிமைப்படுத்தித் தருவதில் அவர் சாதித்த பெரிய சாதனை அதுவாகும். அதைபோல ஏராளமான கலைப் படைப்புக்களை அவர் தந்துள்ளார். தென்பாண்டிச் சிங்கம், பொன்னர் சங்கர், நெஞ்சுக்கு நீதியின் பாகங்கள், பகுத்தறிவு இயக்கம், சுயமரியாதை இயக்கம் இவற்றினுடைய பின்னணியை இந்த பாகங்களிலும் தாராளமாக எங்களுக்கு தந்ததில் கலைஞருடைய பங்களிப்பு சாமான்யமானது அல்ல.
கலைஞரை பற்றி பேசப் போனால், அவர் தீவிர அரசியலுக்கு வருவதற்கு முன்னரான அவருடைய கலை துறை ஈடுபாட்டைப் பற்றிப் பேசாமல் அது ருசிக்க மாட்டாது.

அவருடைய நாடகங்களை எடுத்துகொள்வோமானால், மனோகரா, சாக்ரடீஸ், சேரன் செங்குட்டுவன் ,என்று ஏராளமானவை உள்ளன. அவற்றின் வசனங்களிலுள்ள வசீகரம் இன்றும் எங்களுடைய மனங்களில் நிழலாடுகின்றன.
மனோகரா நாடகத்தில் புருஷோத்தமன் தர்பாரில் தனயன் மனோகரா தன்னுடைய தாயை வஞ்சித்த தகப்பனுக்கு எதிராக பேசுகின்ற வசீகர வசனங்களை பேசி தன்னுடைய கலை வாழ்வை ஆரம்பித்த கலைஞர்கள் இங்கு இந்தக் கூட்டத்திலும் இருக்கின்றார்கள்.
இன்று தமிழ் கூறும் நல்லுலகின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும், பாடசாலை மேடைகளிலும் அதை நகல் எடுத்து நடிக்காத சிறுவர்களே இல்லை என்றளவுக்கு அது பிரபல்யமானது. அந்தக் கலைஞரைத் தான் இன்று நாங்கள் கொண்டாடுகின்றோம்.
இந்தப் பின்னணியில் அவருடைய கொள்கைகளை தன்னுடைய கலைப் படிப்பினூடாக தமிழர்களின் இரத்த நாடி, நாளங்களிலும் உணர்ச்சி நரம்புகளிலும் ஊட்டிய பெரும் மேதைக்காகத் தான் இன்று நாங்கள் மேடைபோட்டுப் பேசுகின்றோம். அவருடைய மேதாவிலாசத்தைப் பற்றி நிறையக் கதைக்கலாம். அது ஓரிரு வரிகளில் கதைத்து முடிக்கின்ற விவகாரமும் அல்ல.

பகுத்தறிவுக் கொள்கை என்று வருகின்ற போது , அது நாஸ்திகம் என்று சிலர் நினைக்கலாம். கடவுள் மறுப்பு என்று நினைக்கலாம். ஆனால், அது அவ்வாறு அல்ல. சமூக நீதி என்று வருகின்ற போது சாதிக் கொடுமைகளைப் பற்றிப் பேசலாம்.
அதற்காக சுயமரியாதை இயக்கம் தொடர்ந்தது. அதனைத்தான் பெரியார் அடிக்கோடி தமிழன் தன்னுடைய இடுப்பிலே கட்டியிருந்த துண்டை தோளில் போட்டுவிட்டார்.
தமிழன் தோளில் போட்ட துண்டை கலைஞர் தலையில் தலைப்பாகையாகக் கட்டிவிட்டார் என்று தான் அவருடைய அரசியலை நாங்கள் பார்க்கின்றோம். அவருடைய சாதனைகள் யாவும் சாமான்யமானவை அல்ல.

 "முரசொலி" என்ற பத்திரிகையின் ஆசிரிய தலையங்கத்தில் எது வருகின்றது என்பதை பொறுத்துத்தான் தமிழ் நாட்டின் அரசியல் தீர்மானிக்கப்படுகின்றது என்றளவுக்கு வழிநடத்திய பத்திரிகையாளராக இருந்தார்.

70 வருடங்கள் கலை துறைக்கு பங்களிப்பு செய்தார். 60 வருடங்களுக்கு மேல் சற்றும் சளைக்காத சட்டமன்ற செயற்பாடுகள். 13 தடவைகளாக சட்ட மன்ற உறுப்பினர். 5 தடவைகள் முதல்வர். இவற்றையெல்லாம் அடைவதற்கு அவர் கொடுத்த விலை சாதாரணமான விலை அல்ல. அடைந்த அவமானங்கள் சாமான்யமானவை அல்ல. அவர் சுமந்த விழுப்புண்கள் இலகுவில் ஆறியவைகளும் அல்ல.

இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் அவர் மேடை ஏறினால், அவருக்கே உரித்தான மஞ்சள் நிறச் சால்வை, கறுப்புக் கண்ணாடி .அந்த அடையாளங்களோடு மேடையில் பேச ஆரம்பிக்கின்ற போது அவருடைய பாணியில் "என் உயிரினும் மேலான என் இனிய உடன் பிறப்புக்களே" என்று ஆரம்பிக்கின்ற போது அவையிலிருந்து எழுகின்ற கரகோஷம் வானைப் பிளக்கும். அப்படியொரு தொண்டர் படையை வசீகரித்த, வசப்படுத்திய ஒரு தலைவனாக இருந்ததால் தான் தோல்விகளை கண்டு அவர் அசந்துப் போய்விட வில்லை.
விழுந்தபோதெல்லாம் அவரை எழுப்பி நிறுத்துவதற்கு பாரிய தொண்டர் படை தயாராக இருந்தது.

தமிழகத்தின் மூலை முடுக்குகளிளெல்லாம் பெரியார் மற்றும் அறிஞர் அண்ணா தொடக்கம் வளர்க்கப்பட்டு வந்த பாரிய இயக்கத்தின் போராளிக் கூட்டம் இன்று மீண்டும் திராவிட முன்னேற்ற கழகத்தை ஆட்சிப் பீடம் ஏற்றி இருக்கின்றது.

நண்பர் தளபதி ஸ்டாலினை அவர் தன்னுடைய அந்திம காலத்தில் செயற் தலைவராக நியமித்த போது அதையும் ஏளனமாகப் பேசினார்கள். ஸ்டாலின் செயல் தலைவர் என்றால் , கலைஞர் செயல் இல்லாத தலைவரா என்று பேசினார்கள்.
ஆனால், சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருந்தாலும் கோபாலபுரத்திலிருந்து கோலோச்சுகின்ற கோமானாகத்தான்  கலைஞர்  கடைசி வரை இருந்துவிட்டுப் போனார் என்பது யாவரும் அறிந்த உண்மையாகும்.
எனவே இவர் பெருமைக்குரிய பல்துறை விற்பன்னராவார். எத்துறையை எடுத்துக் கொண்டாலும் அதில் உச்சம் தொட்டவர். எனவே தான் அவரை பிரித்து தமிழகத்தின் வரலாற்றை எங்களால் பார்க்க முடியாது.

அரசியலில் தலைமைப் பதவியை அறிஞர் அண்ணா மறைந்தவுடன் நாவலர் நெடுஞ்செழியன் தான் பதவிக்கு வந்துவிடுவாரோ என்றிருந்த நிலையில் அந்தக் கதிரை அவருக்குரியது என்று படிப்படியாக நிச்சயப்படுத்தப்பட்ட போது நெடுஞ்செழியனை ஒதுக்கிவிடவில்லை. அண்ணா சம்பத்தோடு முரண்பட்டதைப் போன்று நெடுஞ்செழியனோடு முரண்பட நினைக்க
வில்லை. அவர் நிலைமையை மிகவும் லாவகமாகக் கையாண்டார்.

40 வருட காலத் தோழர், கலை துறை நண்பர் என்ற அடிப்படையில் கூட இருந்த எம்.ஜி.ஆர். அவருக்கு தலைமை பதவி கிடைப்பதற்கு துணையாக நின்றார். துணையாக நின்ற எம்.ஜி.ஆர். தலைமை ஆசனத்தில் அமர்ந்து கோலோச்சிய மூன்றாவது வருடத்தில் அதிலிருந்து விலகிப் போனமை முதலாவது பேரிடியாக இறங்கியது. அவர் விலகிச் சென்று அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்று கழகத்தை கூறுபோட்ட பிறகு கழகம் நின்று நிலைக்குமா என்று பல பேர் நினைத்தார்கள்.

ஏறத்தாழ 13 வருட காலம் ஆட்சிக் கதிரையை நெருங்க  முடியவில்லை.
எம்.ஜி.ஆரை பொறுத்த மட்டில் மிகவும் ஜனரஞ்சகமான அவரது ஆட்சி
1977 ஆம் ஆண்டிலிருந்து அவர் மறையும் வரையில் தொடர்ந்தது.
அந்த சம காலத்தில் தான் இலங்கையின் இனப் பிரச்சினையும் உக்கிரமடைந்தது.

இந்தக் கட்டத்தில் தான் இலங்கை தமிழர்களின் உய்வுக்காக முதன்முதலில் தமிழக திராவிடர் கழகத்தோடு சேர்ந்து மிகப் பெரிய பேரணியை கலைஞர் 1977 கலவரத்திற்கு பின்னர் முன்னெடுத்தார்.
அதுவே முழு தமிழகத்தின் பார்வையையும் ஈழத் தமிழர்களின் பிரச்சினையின் பால் திருப்பியது.

தன்னுடைய சட்ட சபை ஆசனத்தைத் துறந்து 1983கலவரங்களுக்கு பின்னர் தமிழர்களை ஒடுக்க நினைத்தவர்களுக்கெல்லாம் சிம்ம சொப்பனமாக இருந்தவர் கலைஞர். அவரைப் பற்றிய விமர்சனங்களும் இல்லாமல் இல்லை. எண்பது வருட கால பொது வாழ்வில் விமர்சனங்கள் இல்லாமல் அரசியலில் ஈடுபட முடியாது. ஆனால், அந்த விமர்சனங்களை எதிர்கொண்டு மீண்டும் மீண்டும் தோல்விகளை கண்டு துவண்டு போகாமல், துணிச்சலுடன் எழுந்து நிற்கின்ற அந்த திராணி- இந்த பேரியக்கத்தை பலமாக வைத்திருக்கின்ற பெரும் சக்தி கலைஞரிடத்தில் இருந்தது என்பதற்கான நிறைய சான்றுகள் இருக்கின்றன.

எங்கெல்லாம் சுய மரியாதை இயக்கம் ஆரம்பித்த போது அவ்வியக்கத்தினூடாக வந்த படிப்பினைகள் சாதி வேறுபாடு தமிழகத்தில் கிராமம் கிராமமாக, ஒழுங்கை ,ஒழுங்கையாக இருந்துவந்த நிலையில் அவையெல்லாம் ஒழுங்கைகளின் பெயர்களால் ஓங்கி ஒழித்துக் கொண்டிருந்தன.
முதலியார் தெரு, பறையர் தெரு, மறவர்தெரு, நாயர் தெரு, பள்ளர் தெரு என்றெல்லாம் தெருவைத் தாண்டி வீடு வாங்க முடியாது.
அவ்வாறான சாதிக் கொடுமைகள் நிலவிய காலத்தில் சமத்துவபுரங்கள் அமைத்து அவற்றிற்குச் சாவு மணி அடித்தவர் கலைஞராவார். இதைத்தான் இன்று தமிழகமும், தமிழுலகும் கொண்டாடுகின்றன.
வெறும் நாஸ்திகர் என்பதல்ல.அவர் சமூக சமத்துவத்திற்காகப் போராடினார். பெண்ணுரிமைக்காகப் போராடினார்.

இந்திய அரசியல் சாசனம் தந்த டாக்டர் அம்பேத்கார் சமயத்தின் பெயரால் பெண்களின் உரிமைகள் மறுக்கப்படுவதையிட்டு சட்டம் இயற்ற முயன்றபோது, அதனை மத்திய சட்ட சபையினால் இயற்ற முடியவில்லை. உயர் வர்க்கத்தினர், உயர் சாதியினர் அதற்கு இடமளிக்கவில்லை.

ஆனால், கலைஞர் பெண்களுக்கான சொத்து ரிமை, சம உரிமையை பெற்றுக் கொடுத்து அமுல்படுத்துவதில் தமிழகத்தில் சாதனை படைத்தார். அருந்ததிகள் என்ற கூட்டத்தினர் கையிலும் தலையிலும் கழிவைச் சுமக்கின்ற தொழிலை கேவலமாகப் பார்த்து அவர்களுக்கு எதுவுமே இல்லாத நிலையில் 3 சதவீத ஒதுக்கீடு கொடுக்க வேண்டுமென்று தமிழகத்தில் சட்டமியற்றியவர் கலைஞராவார்.

இவ்வாறு அவருடைய சாதனைகளைப்பற்றி பட்டியலிடப் போனால் நீண்டு கொண்டே செல்லும். கலைஞருடைய போராட்டம் இன்னும் முற்றுப் பெறவில்லை. காலம் காலமாக இன்று வரையில் காணப்படுகின்ற சமூக ஏற்றத் தாழ்வுகள் எங்கள் அனைவரையும் ஆட்கொண்டிருக்கின்ற ஒரு சூழலில், இவற்றையெல்லாம் துணிகரமாக எதிர்த்து நின்று போராடுவதற்கு தனது கலைத் துறை ஆளுமையை - தன்னை எதிர்த்த மண்ணை தன்னுடைய அரசியல் திறமையை இவ்விதமாகச் சரிவர பயன்படுத்துவதில் வெற்றி கண்டவர்கள் வெகுசிலர் தான் இருக்கலாம். அதனால் தான் கலைஞரை நாங்கள் கொண்டாடுகின்றோம்.

மத்திய அரசில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் கலைஞரின் மகள் கனிமொழி மரபு ரீதியாக வருகின்ற ஆடற்கலைகளையெல்லாம் உயிர்பிக்கின்ற முயற்சியில் தனி இயக்கமமைத்து இன்று அதனை உற்சாகத்தோடு செய்து கொண்டிருக்கின்றார். பாரிய திராவிடர் கழகம் என்று இருக்கின்ற குடும்பத்தில் இருக்கின்ற பெரும் பெரும் புள்ளிகள் எல்லாம் கலைஞர், பெரியார், அண்ணா வழிநின்று அமைத்த பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்தப் பயணத்தில் ஈழத் தமிழர்களின் போராட்டத்தையும் மறக்கவில்லை ; மறக்கடிக்கப்பட்டதாக சிலர் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.

முதல்வர் தளபதி ஸ்டாலின் சகலரையும் ஒன்றிணைத்து இட ஒதுக்கீடு, ஆசன பங்கீடு என்று வருகின்ற போது தாராள தன்மையோடு நடந்து கொள்வதால் காங்கிரஸோடும், ஏனைய சிறு சிறு கட்சிகளோடும் அவருக்கு கீழுள்ள கூட்டணி மிக பலமாக இருக்கின்றது. தாராள, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லை என்றால் அது ஒரு போதும் சாத்தியமாகாது. கலைஞர் அதனை செய்து காட்டி இருக்கின்றார். நாட்டை துண்டாக்கிவிடுவார்கள், பிரிவினைவாதிகள் என்றெல்லாம் வடக்கில் எண்ணிக்கொண்டிருந்தார்கள்.

இதற்கு முடிவு கட்ட வேண்டுமென்பதற்காக கலைஞர் அன்னை இந்திராவை அழைத்தார். அண்ணாவின் உருப்படத்தை திரை நீக்கம் செய்வதற்கு தமிழகம் வந்த அன்னை இந்திராவிடம் நாங்கள் சர்ச்சைக்காரர்களோ சண்டைக்காரர்களே அல்லர். "உரிமைக்கு குரல் கொடுப்போம், உறவுக்கு கை கொடுப்போம்" என்ற கோஷத்தோடு அவரோடு இணைந்து மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்று நடத்தினார்கள்.
இங்கும் சில அரசியல் கட்சியினர் இதனை கையாள்கின்றனர். இதனை அறிமுகப்படுத்தியவர் கலைஞராவார்.


கருத்துகள் இல்லை: