வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021

100 நாள் வேலைத்திட்டம் - 150 நாட்களாக உயர்வு

 மின்னம்பலம்  :  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் 300 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று இன்றைய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது.
2021-2022ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன.
குறிப்பாகக் கிராமப்புற மக்களின் நீண்ட கால கோரிக்கையான 100நாள் வேலைத் திட்டத்தை 150நாளாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் இடம்பெற்றிருந்தது.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட அறிவிப்பில், “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி நாட்கள் 100 நாளிலிருந்து 150 நாளாக உயர்த்தவும்,
தினசரி ஊதியம் 273 ரூபாயிலிருந்து 300 ரூபாயாகவும் உயர்த்தவும் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும்.



1,622 கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை சேவை வழங்கப்படும். ரூ.400 கோடியில் தூய்மை பாரத இயக்கம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், 100 நாள் வேலைத் திட்டத்தின் பணி நாட்களும், ஊதியமும் உயர்த்தப்படும் என்ற அறிவிப்புக்கு கிராமப்புற பெண்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே காரிப்பட்டியில் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பெண்கள் இன்று காலை வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது பட்ஜெட் அறிவிப்பு வெளியானதும், உற்சாகமடைந்த அவர்கள் நடனமாடி, கைதட்டி வரவேற்றனர்.

-பிரியா

கருத்துகள் இல்லை: