சனி, 14 ஆகஸ்ட், 2021

பனை மரங்களை வெட்ட தடை.. ரேஷன் கடைகளில் வெல்லம் வினியோகம்.. பல வருட கோரிக்கையை நிறைவேற்றிய திமுக அரசு

Veerakumar  -   Oneindia Tamil News  :   சென்னை: பனை மரங்களை பாதுகாக்கவும், பனைமர விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்கவும் தமிழ்நாடு அரசு அதிரடி திட்டங்களை வேளாண் பட்ஜெட்டில் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு வரலாற்றில் முதல் முறையாக விவசாயத்துக்கு தனி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார்.
அப்போது வேளாண் துறை சார்ந்த பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில் முக்கியமானது பனை மரம் சார்ந்த அறிவிப்புகள், இதோ பட்ஜெட் உரையிலிருந்து:
தரிசு நிலங்களை பரிசு நிலங்களாக்கி சாகுபடி பரப்பு உயர்த்தப்படும்.. வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு!
பனைமரம் நமது மாநில மரம். பதநீரை காய்ச்சி இனிப்பான தின்பண்டம் தயாரிக்கும் குறிப்பு பழைய கால கல்வெட்டில் கூட இருக்கிறது. பனைமரம் தனது ஒவ்வொரு உடல் பாகத்தையும் மனிதகுலத்துக்கு வழங்கும் கற்பகத்தரு! பனை ஓலைகள், தோரணம் கட்ட, பெட்டி உள்ளிட்ட பொருட்கள் செய்யப் பயன்படுகிறது. பாய் தயார் செய்யலாம். பச்சை மட்டை வேலி அமைக்க பயன்படுத்தப்படுகிறது. நாரெடுத்து பிரஷ் செய்ய பயன்படுத்தப்படுகிறது அதன் மட்டை. பனங்காய் உண்பதற்கு இனிய பழம் தருகிறது. கீழே போடும் பனங்கொட்டை, கிழங்காக மாறி உணவுப் பொருளாக பயன்படுகிறது. பனை மரத்தின் பாளை, பதநீர் பெறுவதற்கு பயன்படுகிறது.
நடு மரம் வீட்டில், உத்திரம் அமைப்பதற்கு பயன்படுகிறது. பனை மரத்தின் வேர் மழை காலங்களில் நடைபெறும் மண்ணரிப்பைத் தடுக்க பயனுள்ளதாக இருக்கும். பனை ஓலை எழுதப் பயன்படும். பனை ஓலையை பயன்படுத்தி எழுதியுள்ளது பழைய கால பயணக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. பனை விதை, கன்றுகள் சப்ளை பனை விதை, கன்றுகள் சப்ளை அரசு நிர்வாகத்தில் ஓலை நாயகம் என்பவர் இருந்திருக்கிறார்.

பனை இலைக்கு மடல் என்ற இன்னொரு சொல்லும் உண்டு. தமிழகத்தில் பனை மரம் சாகுபடி பரப்பு வெகுவாக குறைந்து வருவதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு தற்போதுள்ள பனைமரங்களை பாதுகாப்பதோடு கூடுதலாக பனைமரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நடப்பாண்டில் 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகளையும், ஒரு லட்சம் பனை கன்றுகளையும், மானியத்தில் வழங்க நடவடிக்கை மேற்கொள்வோம்.
வேலிக் கரைகளிலும், சாலை ஓரங்களிலும் பனை மரங்களை வளர்க்க மீண்டும் நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் அதிகம் விரும்பும் பொருட்களாக பனங்கற்கண்டு, கருப்புக்கட்டி போன்ற பொருட்களை பனை மரங்கள் வழங்குகின்றன. அவற்றை கலப்படமில்லாமல், மக்களிடம் கொண்டு சென்று சேர்த்தால் மிகுந்த வரவேற்பு பெரும். பனை ஆராய்ச்சி, பயிற்சிகள் பனை ஆராய்ச்சி, பயிற்சிகள் எனவே, பனைமரங்களை போற்றி பாதுகாக்கும் பணியை அரசு கவனமாக மேற்கொள்ளும்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கிள்ளிகுளம் வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் பனைமரம் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு, முக்கியத்துவம் கொடுக்கப்படும். நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தரமான பனை வெல்லம் தயாரிப்பு குறித்து விவசாயிகளுக்கு உரிய பயிற்சியும் வழங்கப்படும். பனை கருப்புக் கட்டி தயாரிக்க நவீன இயந்திரங்களை கொள்முதல் செய்ய மானியம் வழங்கப்படும்.

ரேஷன் கடைகளில் பனை வெல்லம் மதிப்புக் கூட்டுப் பொருட்களான பனை வெல்லத்தை, பனை வாரியம், வேளாண் கூட்டுறவு சங்கங்கள் ஒருங்கிணைந்து, நியாயவிலைக் கடைகள் மூலமாக வினியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். நீர்நிலைகளின் காவலன் எனும் பனை மரங்களை வேரோடு வெட்டி விற்பனை செய்யவும், செங்கல் சூளைக்கு பயன்படுத்தும் செயல்களையும் தடுக்க, இந்த அரசு உத்தரவு பிறப்பிக்கும். தவிர்க்க முடியாத காரணங்களால், பனை மரங்களை வெட்ட தேவை ஏற்பட்டால், மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும்.

பனை மேம்பாட்டு இயக்கம் மூன்று கோடி ரூபாய் செலவில் மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் அறிவித்தார். மிக நீண்ட கோரிக்கை நிறைவேறியது மிக நீண்ட கோரிக்கை நிறைவேறியது பனை மரம் என்பது அதன் உடலின் ஒவ்வொரு பாகத்தையும் மக்களுக்கு பயனாக அளிக்கக்கூடியது. கிராமப்புற பொருளாதாரத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இப்போது பனைமரங்கள் வேகமாக வெட்டப்பட்டு வருவதாலும், பனையேறுவதற்கு ஆட்கள் கிடைக்காததாலும், பனை வெல்லம், பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்றவற்றின் விலை அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் பனைத்தொழில் செய்தால் மிகுந்த லாபம் பெற முடியும். ஆனால், தமிழகத்தின் பாரம்பரியமான பனைமரத் தொழிலை விட்டுவிட்டு, பலரும் தென்மாவட்டங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு வேலை தேடி புலம்பெயரும் நிலைமை உருவானது.

தமிழர்களின் ஒரு பாரம்பரிய தொழில் அழிவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது என்ற குரல்கள் நீண்ட காலமாக பலராலும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. டாஸ்மாக் மதுபானத்தை விற்பனை செய்யும் அரசு, பனங்கள்ளை ஏன் விற்பனை செய்ய அனுமதிப்பதில்லை என்ற தர்க்க ரீதியான கேள்விக்கு எந்த அரசும் இதுவரை பதில் சொல்லவில்லை.
 இந்த சூழ்நிலையில்தான் பனைமரம் வளர்ச்சிக்காக சூப்பர் நடவடிக்கைகளை அறிவித்துள்ளது திமுக அரசு. பனை மரத்தை வெட்டுவதற்கு கலெக்டர் அனுமதி தேவை என்பது அதன் அழிவை உடனடியாக தடுத்து நிறுத்த உதவும். அதேநேரம் ரேசன் கடை வாயிலாக பனை வெல்லம், சப்ளை செய்யப்படும் என்ற அறிவிப்பு காரணமாக பனைத்தொழில் காலப்போக்கில் பெருகி வளர்ச்சி அடையும். மேலும், சர்க்கரை போன்ற பொருட்களுக்கு மாற்றாக பனை பொருட்களை உண்பது, உடல் ஆரோக்கியத்தை காக்கும், என்பது தான் இந்த அறிவிப்பின் முக்கிய சாராம்சம்.

கருத்துகள் இல்லை: