வியாழன், 12 ஆகஸ்ட், 2021

மீனாம்பாள் - யார் இவர்? ரங்கூனில் வசதியான குடும்பத்தில் பிறந்த தலித் பெண்!

May be an image of 1 person

பாலகணேசன் அருணாசலம்  :  மீனாம்பாள் - யார் இவர்?
ரங்கூனில் வசதியான குடும்பத்தில் பிறந்த தலித் பெண்!
பட்டியலின இன தலைவர் #சிவராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டவர்..!
படுபுத்திசாலி பெண்.. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, இங்கிலீஷ் என பல மொழிகளை அறிந்தவர்.. பட்டம் பெற்றவர்..!
சென்னை பல்கலைக்கழக செனட்டின் முதல் தலித் பெண் உறுப்பினர்தான் மீனாம்பாள்..!
சென்னை கௌரவ மாகாணத்தின் 16 வருடங்கள் நீதிபதியாக பணியாற்றியவர்தான் மீனாம்பாள்..!
ஏஐஎஸ்சிஎஃப் எனப்படும் அகில இந்திய பட்டியல் சாதிகள் சம்மேளனத்தின் முதல் பெண் தலைவர்தான் மீனாம்பாள்..!
ஒரு தலித் பெண் அரசியலுக்குள் நுழைவதே கடினமான காலகட்டத்தில், இதுபோல இன்னும் பல பதவிகளை மீனாம்பாள் வகித்ததை,  வெகு சாதாரணமாக எடுத்து கொண்டு கடந்துவிட முடியாது..!
அப்போதிருந்த சமூக சூழலுடன் இவற்றை பொருத்தி பார்த்தால்தான், மீனாம்பாள் மேற்கொண்ட முயற்சிகளின் வலிகளையும் உணர்வுள்ளவர்களால் புரிந்து கொள்ள முடியும்..!

தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க,  ராஜாஜி படுமும்முரமாக  வேலை பார்த்து கொண்டிருந்த சமயம் அது..!
அப்போது முதன்முதலில் தி.நகரில் ஒரு கூட்டத்தை போட்டு, தலைமை உரையாற்றி, இந்தி திணிப்புக்கான முதல் எதிர்ப்பு போரையும் தமிழ்நாட்டில் தொடங்கி வைத்ததே இந்த மீனாம்பாள் தான்..!
இளம்பெண்ணின் கர்ஜனையை பார்த்து, ராஜாஜி கொஞ்சம் மிரண்டுதான் போனார்...!
"ஆணாதிக்கத்தை மட்டுமே ஒடுக்குமுறை" என பேசி பெண்கள் உரிமைகளுக்கு குரல் கொடுத்தவர்கள் மத்தியில் "பெண்கள் முன்னேற்றமே ஆண்கள் விடுதலை" என்று உலகிற்கு ஓங்கி சொன்னார் இளம்பெண் மீனாம்பாள்.

பொது சேவையில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வத்தினால்,  #பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்தி கொண்டவர்..!
காஞ்சிபுரத்தில் 1938-ல் பெண்கள் மாநாட்டு, கொடியை ஏற்றி வைத்த மீனாம்பாள்தான், பெரியாருக்கு "#பெரியார்" என்ற பட்டத்தை அங்கு தந்தவர்..!
பெரியாரை “#பெரியார்" என்று முதன்முதலில் அழைத்த தலித் பெண்ணும் மீனாம்பாள் தான்..!
ஒரு பேட்டியில் மீனாம்பாள் சொல்கிறார், "நான், நாராயிணி அம்மாள், டாக்டர் தருமாம்மாள் எல்லாரும் ஒருநாள் பேசிக்கிட்டிருந்தோம்.. "#காந்திக்கு மட்டும் #மகாத்மா-ன்னு பட்டம் தர்றாங்களே.. ஆனால், இங்கே நம் மக்களுக்காக எல்லாவற்றிலும் முன்னின்று பாடுபடும் ஈவெராவுக்கு ஒரு பட்டம் கூட தரலையே.. அவருக்கும் ஒரு பட்டம் தரணும் என்று யோசித்துதான் ‘#பெரியார்’ என்று அழைக்க முடிவு செய்தோம்" என்கிறார்.

அதேபோல, #அம்பேத்கரின் முன்னேற்றத்திலும் தன்னை இணைத்து கொண்டவர் மீனாம்பாள்.. "காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டுதான், சட்ட அமைச்சராக பதவி வகிக்க வேண்டுமா? என்று அம்பேத்கருக்கு ஒருவித தயக்கம் இருந்தது.. அம்பேத்கரை அந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ள வலியுறுத்தி அதில் வெற்றியும் பெற்றவர்தான் அன்னை மீனாம்பாள்..!
ஒருமுறை மும்பையில், ராஜா சர் முத்தையாவுடன், அம்பேத்கர் பேசி கொண்டிருந்தபோது, "சென்னையில் எனக்கு ஒரு தங்கை இருக்கிறார்" என்றார்..
அதற்கு முத்தையா, "உங்களுக்கா? சென்னையிலா?" என்று ஆச்சரியமாக கேட்டார்.. "ஆமாம்.. அவர் பெயர் மீனாம்பாள்".. என்று பெருமையாக சொன்னார் அம்பேத்கார்..
1942-ல் மீனாம்பாள் குடும்பத்துடன் மும்பையில் தங்கியிருந்தபோது, விதவிதமாக சமையல் செய்து தங்கைக்கு சாப்பாடு போட்டாராம் அம்பேத்கார்.. அதேபோல மீனாம்பாளும் அற்புதமாக சமைத்து அண்ணனுக்கு பரிமாறி உள்ளார். இறுதிவரை "தங்கை" என்ற பாச கயிறின் பிடிமானம் அம்பேத்கருக்குள் இறுகி கொண்டே வந்துள்ளது.

தலித் பெண்களுக்காக ஒருங்கிணைக்கப்பட்ட மாநாடுகள் எங்கே நடந்தாலும் சரி, அதற்கு தலைமையேற்று, சமூக விடுதலை குறித்தும், பெண்கள் விடுதலை குறித்தும் உரையாற்றும் முதல் நபராக மீனாம்பாள் அன்று விளங்கினார்.
எந்த மேடையில் பேசினாலும் சரி, சாதிய கட்டமைப்புகளை உடைத்தெறிய வேண்டிய அவசியத்தை பற்றி பேசுவதுடன், சமூக நீதியையும், சமத்துவத்தை நிலை நிறுத்த வேண்டும் என்ற ஒற்றை இலக்கை துணிவாகவும், ஆணித்தரமாகவும் எடுத்து வைத்தவர் மீனாம்பாள்..!
எங்கோ ரங்கூனில் வசதியாக வாழ வேண்டிய பெண், சென்னையில் வாடகை வீடுகளில்தான் வசித்து வந்தார்.. இவருடைய கடைசி 20 வருடங்கள் பார்வையில்லாமலேயே கழிந்துள்ளன என்று கேள்விப்பட்டேன்.. ஆனாலும், இறுதிவரை பெரியாரின் சுயமரியாதை கொள்கையை விடாது தாங்கி பிடித்திருந்தார்..!
 

இவரது நினைவாக அவர் வசித்த ராயப்பேட்டை ஆண்டி தெருவுக்கு "மீனாம்பாள் சிவராஜ் தெரு" என்று மறைந்த ஜெயலலிதா பெயர் சூட்டியது மட்டுமே இவரது அரசியலின் மிச்ச துளிகள்..!
இவரை ஏன் அரசியலில் முன்னிலைப்படுத்தவில்லை என்று எனக்கு தெரியவில்லை.. இன்னைக்கு வரைக்கும்

தலித் பெண் ஆளுமைகளின் வரலாறுகளை,  பொதுசமூகம் பேசுவதே கிடையாது.. அப்பெண்களை தலைமை பொறுப்புகளில்  அமர்த்தவும் தயக்கம் காட்டுகின்றனர்...!
தேசிய அரசியல் கட்சிகளிலும், ஆதி திராவிட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் முக்கிய இடங்களுக்கு வருவதேயில்லை..  இதற்கான சட்டவிதிகளை இனியாவது வகுக்க வேண்டும்..!
எனக்கு தெரிந்து,  தமிழகத்தில் அரசியல் அதிகாரம் பெற்றவர்கள் #சத்தியவாணி_முத்து_அம்மையாருடன் அந்த எல்லை நின்றுவிட்டதாகவே தெரிகிறது..!
எனவே, விட்ட இடத்திலிருந்து தலித் பெண்களின் அரசியல் தொடங்கப்பட வேண்டும்.. மீனாம்பாள்கள்  வெடித்து கொண்டு வெளியே வரவேண்டும்.. நெருப்பு வரலாறுகள் மீண்டும் இவர்களாலேயே எழுதப்பட வேண்டும்..!
- ஹேமவந்தனா ரவீந்திரதாஸ் பதிவிலிருந்து..🖤❤
Anand Kumar

கருத்துகள் இல்லை: