சனி, 14 ஆகஸ்ட், 2021

பட்ஜெட்டில் 70% மேலாக கல்வித்துறைக்கு ஒதுக்கி இருப்பது மன நிறைவை தருகிறது.

May be an image of child, sitting and outdoors

சுமதி விஜயகுமார் :    பசித்தவனுக்கு மீன்களை வழங்குவதை விட, அவனுக்கு மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பதே சிறந்தது என்று ஒரு ஆங்கில பழமொழி உண்டு.
அதை ஒவ்வொரு முறை இலவசங்கள் கொடுக்கும் பொழுதும் தவறாமல் சுட்டி காட்டி விடுவார்கள்.
அந்த பழமொழியே முதலில் சரியானதுதான என்று பார்க்க வேண்டும்.
பசித்தவன் மீன் பிடிக்க கற்றுக்கொள்ள முதலில் அவன் பசி போக வேண்டும்.
பின்னர் மீன் பிடிக்க கருவிகள் வேண்டும்.
பிடித்த மீனை சமைத்து உன்ன சமையல் வசதிகள்/பொருட்கள் வேண்டும்.
இதையெல்லாம் யாரு உங்கப்பானா கொடுப்பான் என்று அநாகரிகமாக கேட்க கூடாது என்பதால்,
இதை எல்லாம் பசித்தவனுக்கு கொடுப்பது ஒரு நல்ல அரசின் கடமை என்று சொல்லுவோம்.

பசி என்பது வயிற்றுடன் மட்டும் சம்மந்தபட்டது அல்ல. இன்னொரு முக்கியமான பசி ஒன்று உள்ளது.
வசிக்க வீடு கூட இல்லாத ஒரு ஏழை குழந்தைக்கு ஒரு தனி மனிதனால் உணவளிக்க முடியும்.


அந்த குழந்தையின் அறிவு பசியை ஒரு அரசை தவிர வேறு யாரால் தீர்க்க முடியும்?
வெறும் கல்வி மட்டும் இலவசமாக கொடுத்தால் மட்டும் அந்த குழந்தையின் தேவை தீர்ந்து விடாது. வேலைக்கு சென்றால் தான் ஒரு வேலை உணவாவது கிடைக்கும் என்று கல்வி கற்க மறுத்த சமூகத்தில் மதிய உணவு திட்டம், இலவச பஸ் பாஸ் திட்டம், இலவச காலணிகள், இலவச சீருடை, இலவச சைக்கிள், இலவச மடிக்கணினி,  scholarship என்று தூக்கி நிறுத்தி இருக்கிறது திமுக மற்றும் அதிமுக அரசு.

சாதிய நிலையிலும் வர்க்க நிலையிலும் கடும் ஏற்றதாழ்வுகளை சந்திக்கும் குழந்தைகளுக்கு இங்கு சமவாய்ப்பு இல்லை. ஒரு குக்கிராமத்தில் பள்ளிக்கு சென்று வந்தவுடன் வீட்டுவேலைகள் செய்து விட்டு, தம்பி தங்கைகளை பார்த்து கொண்டு லந்தர் விளக்கில் படிக்கும் குழந்தை, வீடு வீடாய் சென்று டியூஷன் பயிலும் ஒரு நகர குழந்தையுடன் போட்டி போட்டு தான் படிக்க வேண்டும். படிக்கும் காலத்தில் நான் இரண்டாம் வகையை சார்ந்த குழந்தை. எப்போதும் average student. ஆனாலும் பட்டப்படிப்பு வரை படிக்க என் குடும்ப நிலை எனக்கு சாதகமாய் அமைந்தது. வறுமையில் இருக்கும் ஒரு average student கு சாத்தியமா என்றால், அது சந்தேகமே. அதுவும் பெண் குழந்தைகள் என்றால் கேட்கவே வேண்டாம்.

அரசு பள்ளிகள், கல்லூரிகளுக்கு செல்வதற்கே இவ்வளவு தடைகள் இருக்கும் போது, பொறியியல் மற்றும் மருத்து படிப்பு தேர்வெழுதி தான் சேர வேண்டும். அதை ஒழித்தவர் கலைஞர். இப்போது அதற்கு பதில் neet கொண்டுவந்து விட்டார்கள். 1176 மதிப்பெண் எடுத்த அனிதாவிற்கு டாக்டர் சீட் எங்கே என்று கேட்டால், அந்த சீட் அவள் சமூகம் சார்ந்த ஏதோ ஒரு மாணவனுக்கோ மாணவிக்கோ தான் போய் இருக்கும் என்கிறார்கள். அந்த கேள்விக்கு அதுவா விடை? அனிதா படித்த சூழ்நிலையும் நான் படித்த சூழ்நிலையும் ஒன்றா? நான் படித்த சமையத்தில் neet எழுத ஆசைப்படிருந்தால் எத்தனை coaching கிளாஸ் போக வேண்டும் என்று சொல்கிறேனோ அதை வகுப்புக்கும் என் பெற்றோர்கள் அனுப்பி இருப்பார்கள். என்னை போன்ற மாணவர்களுடன் தான் அனிதாக்கள் போட்டி போட்டு கொண்டிருக்கிறார்கள்.

இத்தனை இடற்பாடுகளுக்கு இடையில் திமுகவின் பட்ஜெட்டில் 70% மேலாக கல்வித்துறைக்கு ஒதுக்கி இருப்பது மன நிறைவை தருகிறது.வேறு எந்த துறையை விடவும், வேளாண் உட்பட, கல்வி துறையே முக்கியமானது. செவிக்கு உணவில்லாத பொழுதுதான் வயிற்றும் சிறிது ஈயப்படுவது தமிழர் மரபு. எதை வேண்டுமானாலும் நிறுத்தி வைக்கலாம். அறிவு பசி கொண்ட ஒரு குழந்தையின் தேவையை மட்டும் தடுக்கவே கூடாது.

தமிழ்நாடு தனி கல்வி கொள்கை, புதிய பள்ளி, கல்லூரிகள், ஸ்மார்ட் கிளாஸ் என்று பட்டியல் நீலம். இவற்றுடன் சேர்த்து neet ட்டிலும் விலக்கு வாங்கி விட்டால் இன்னும் சிறப்பானதாக இருக்கும். மற்ற படி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் ஒப்பித்த ஓரிரு தமிழ் வாசகங்களை விட, பழனிவேல் தினகராஜனின் தமிழ் நன்றாகவே இருந்தது. அவர் ஒதுக்கிய நிதியை பொன்முடியும், அன்பில் மகேஷ்ம் சரியான முறையில் பயன்படுத்தி, கல்வியை அனைத்து குழந்தைகளுக்கும் சென்று சேர்ப்பார்கள் என்றே  எதிர்பார்க்கலாம்.
தனி ஒரு குழந்தைக்கு கல்வி மறுக்கப்படுமானால் ஜெகத்தினை அழித்திடுவோம்.

கருத்துகள் இல்லை: