புதன், 11 ஆகஸ்ட், 2021

வேளாண்மைக்கு முதன்முறையாக தனி பட்ஜெட்: விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் என்னென்ன?

  News18 Tamil - ஜோ மகேஸ்வரன்  : தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்படவுள்ள முதல் வேளான் பட்ஜெட்டில் தங்களது நீண்ட கால பிரச்சனைகளுக்கு தீர்வுகள் இருக்கும் என நம்புவதாக விவசாயிகள் கூறுகின்றனர்    முதல் முறையாக தமிழ்நாட்டில்  வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் இடம் பெற வேண்டும் என்பது தொடர்பாக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
வேளாண்மைக்கு முக்கியத்துவம் தரும் வகையில் தனி நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள், விவசாயிகள் சங்கத்தினர் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், சட்டமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்ற திமுக தலைமையிலான அரசு வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவித்தது. அதன்படி,முதல் முறையாக தமிழ்நாட்டில்  வேளாண்மைக்கு தனி பட்ஜெட் வரும் 14ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது.தமிழ்நாடு அரசின் இந்த முயற்சி தங்களுக்கு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளிப்பதாகவும் அதே நேரத்தில் ஏரி, குளம் உள்ளிட்ட நீர், நிலை ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும்,  கிடப்பில் போடப்பட்டுள்ள வேளாண் குழுக்களின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் , வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு நியாயமான விலை நிர்ணயம், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ₹ 30 -40 வரை விவசாயிகளிடம் கட்டாய லஞ்சத்திற்கு முற்றுப்புள்ளி  உள்ளிட்ட நீண்ட கால கோரிக்கைகள் இதன் மூலம் நிறைவேற்ற வேண்டும்  என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே தனி வேளாண் பட்ஜெட்டால் பலன் என்றும் இல்லையென்றால் பெயரளவில் மட்டுமே பலன் என்றும் விவசாய சங்க தலைவர்கள் கூறுகின்றனர்.



வேளாண்மை சார்ந்த மேம்பாட்டுத் திட்டங்களும் அவற்றுக்கான தனி நிதி ஒதுக்கீடுமே தனி பட்ஜெட்டில் இடம் பெறவுள்ளன என்றாலும், நீண்ட கால கோரிக்கைகள் சில நிச்சயம் நிறைவேறும் என்கிற நம்பிக்கையை  விவசாயிகள் முன் வைக்கின்றனர்.குறிப்பாக, வேளாண் பல்கலைக்கழகத்தில் மீண்டும் இளநிலை பண்ணைத் தொழில் நுட்ப பட்டப் படிப்பை தொடங்க வேண்டும். வேளாண் பொறியியல் கருவிகள் தட்டுப்பாடின்றி அனைத்து பகுதிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதேபோல், விவசாயிகளுக்கு பெரும் செலவாக இருக்கும் உரம், விதை, இடுபொருட்களை தரமாகவும் குறைந்த விலையில் அரசே நேரடியாக வழங்க வேண்டும் என்றும் காவிரி மற்றும் கிளை ஆறுகளில் 5 கி.மீக்கு ஒரு தடுப்பணை அமைக்க வேண்டும் என்றும் பாசன ஆறுகளில் கழிவுகள் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் ,  நஞ்சில்லா உணவு தரும் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க சிறப்பு திட்டங்கள் வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன் வைத்துள்ளனர்.

பல்வேறு காரணங்களால், தமிழ்நாட்டில் நெல், கரும்பு உள்ளிட்டவற்றின் சாகுபடி பரப்பு குறைந்தும் விவசாயத்தை விட்டு பலரும் வெளியேறி வருகின்றனர். இந்நிலையில்  பாசனப் பரப்பு அதிகரிக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதற்கேற்ப திட்டங்களும்   லாபகரமான தொழிலாக  மாறும் வகையில்  வேளாண்மைக்கான பட்ஜெட் இருக்க வேண்டும். அறிவிக்கப்படும் திட்டங்களின் பலன் முழுமையாக விவசாயிகளுக்கு சேர வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

 

கருத்துகள் இல்லை: