ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ‘சோசலிசம்' ஆனால் அரசுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் விற்கிறது பஜாக

 ஆசிரியர். கி. வீரமணி  : இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பீடிகையில் கூறப்பட்ட ‘சோசலிசம்' என்பதற்கு எதிராக அரசுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதா?
பொதுத் துறைக்கு வேட்டு - குறிப்பிட்ட முதலாளிகளைக் கொழுக்க வைப்பது - இட ஒதுக்கீட்டை ஒழிப்பது என்பதுதான் ஒன்றிய அரசின் திட்டம்!
ஒன்றிய அரசானாலும், மாநில அரசுகளானாலும் தாங்கள் பதவியேற்பின்போது எடுத்த பிரமாணத்தைக் காப்பாற்றுவதும், செயல்படுத்துவதும் அவைகளுக்குத் தலையாய கடமைகள் ஆகும்!
அரசமைப்புச் சட்டத்தின் சரத்து என்ன கூறுகிறது?
‘இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உண்மையான நம்பிக்கையும், விசுவாசமும் கொண்டு அதை செயல் படுத்துவோம்' என்ற உறுதி மொழியை பிரமாணமாகக் கூறி பதவியேற்கின்றனர்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பீடிகை (Preamble) தெளிவாக இந்திய அரசு
முழு இறையாண்மைமிக்க சமதர்மக் கொள்கை உடைய மதச்சார் பற்ற அரசாக ஜனநாயக குடியரசாக திகழுவதை (அதன் நோக்கங்கள் இவை) நடைமுறைப்படுத்தவே ஆட்சி இயந்திரம் -   

அமைச்சரவை மூலம் செயல் படுவதுதான் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்க ளாட்சியின் மாண்புகள் என்று வரையறுக்கப்படுகின்றன!
ஆனால், கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக சமதர்மம் - ‘Socialist' என்ற சொல்லும், தத்துவமும் சூறையாடப் பட்ட நிலை நாளும் வேகமாக வளர்ந்து வருகின்றன - ஒன்றிய அரசின் பல நடவடிக்கைகள் காரணமாக.
பொன் முட்டையிடும் வாத்தைக் கொல்லுவதா?
சரிந்துவரும் பொருளாதார நிலையைச் சரிகட்ட - ‘‘பொன்முட்டை இடும் வாத்தைக் கொன்று, விருந்து படைப்பது போன்று'' பல பொதுத்துறை நிறுவனங்களை விற்பதும், நீண்ட கால குத்தகைக்குத் தனித்துக் கொழுக் கும் கார்ப்பரேட் திமிங்கலங்களுக்கு விடுவதன் மூலம் பொது மக்களின் வரிப்பணத்தால் பல ஆண்டு காலம் கட்டமைக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை ஒரே அடியாக ஒரு சில குறிப்பிட்ட தொழிலதிபர்களுக்கே குத்தகை - அதுவும் 40 ஆண்டுகாலத்திற்கு என்ற ஒரு திட்டத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு அறிவித்து, 6 லட்சம் கோடி ரூபாய் திரட்டி, பொருளாதாரத்தைச் சரி செய்யத் திட்டமிட்டிருப்பது அரசமைப்புச் சட்டத்தின் ‘சமதர்மம்' தத்துவத்திற்கு நேர் எதிரானதல்லவா?
தாரை வார்க்கப்படும் அரசு நிறுவனங்கள்!
1. 42,000 கி.மீ. மின்வழித் தடங்கள் குத்தகை!
2. பி.எஸ்.என்.எல். போன்ற பெரும் சொத்துக்கள் உள்ள தொழில் நிறுவனங்கள் பல லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வியர்வையாலும், உழைப்பாலும் கட்டிப் பெருக்கி வளர்த்த நிறுவனங்கள்.
3. 25 விமான நிலையங்கள்.
4. விளையாட்டுத் திடல்கள்.
இப்படிப் பல பல! இன்னும் பலப் பல!!
இதன் நோக்கம் பொருளாதார சீரமைப்பா? அல்லது குறிப்பிட்ட சில பெரு முதலாளிகளை மேலும் பெருக்கிக் கொழுக்க வைக்கவா?
பொதுத்துறை நிறுவனங்களையும் (Public Sector Undertakings), கூட்டுத்துறை நிறுவனங்களையும் (Joint Sector Undertakings) எல்லாம் பெரும் தொழில் திமிங்கலங்களை அதிலும் கூட குறிப்பிட்ட சிலருக்கு வாய்ப்பு அளித்து கொழுக்க வைப்பதுடன் - இதில் மறைத்து வைக்கப்பட்டுள்ள மற்றொரு முக்கியமான ‘கண்ணி வெடி' என்ன தெரியுமா?
இட ஒதுக்கீட்டை ஒழிக்கும் வேலை
பல நூறு ஆண்டுகளாக மறுக்கப்பட்ட சமூக நீதி - இட ஒதுக்கீடு - வஞ்சிக்கப்பட்ட மக்களான S.T., S.C., OBC என்ற பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்டோர் ஆகியவர்களுக்குக் கடந்த சில ஆண்டுகளாக பிய்த்துப் போட்ட ரொட்டித் துண்டுகள் போல கிடைத்த இடஒதுக்கீட்டை அறவே பறிக்கும் Hidden Agenda- மறைவான திட்டமும் உள்ளடக்கமாகும்!
ஒரே கல்லில் இரண்டு, மூன்று மாங்காய்
1. பொதுத் துறைக்கு வேட்டு; அதன் மூலம் ‘சமதர்மம்' அகற்றப்படும் லாவகம்.
2. குறிப்பிட்ட பெருமுதலாளிகள் கொழுக்க ஏற்பாடு.
3. இடஒதுக்கீடு கொள்கை, இயந்திரத் துப்பாக்கியால் ஒரே அடியாகச் சுட்டுப் பொசுக்குதல் போன்ற ஏற்பாடு.
நாளும் இந்த அரசு சொத்துக்கள், மக்கள் சொத்துக்கள் விற்பனைக்கும், குத்தகைக்குமான பொருள்களாகி விட்டன!
டம்பாச்சாரி செலவினங்கள்!
அரசு செலவுகளிலோ ஆடம்பர டம்பாச்சாரித்தனம் கூடியது!
1. குடியரசுத் தலைவர், பிரதமர் முதலியவர் தனி சிறப்பு விமானத்தில் பயணம் - பல கோடி செலவு.
2. நாடாளுமன்ற புதிய கட்டடம் பல கோடி ரூபாய் செலவில் கட்டுதல்.
(எத்தனையோ தலைவர்கள், ஊடகங்கள், நாடாளு மன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியும் மாற்றமில்லை - பிடிவாதத்துடன்  ஒன்றிய அரசு செயல்படுகிறது என்பது உலகறிந்த செய்தி!)
ஜனநாயகத்தில் இவை சுட்டிக்காட்டப்படும்போது, காலாவதியான காலனிய சட்ட அடக்குமுறை அம்பு ஏவுவதுதான் ஒரே பதிலா?
மக்களாட்சியே உன் கதி இதுவா?
விடியலைத் தேடும் தலைவர்களே, விடை காணுங்கள்!
- கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்.
சென்னை
25.8.2021

கருத்துகள் இல்லை: