சனி, 4 செப்டம்பர், 2021

தாலிபான்களுக்கு பயந்து தப்பியோடியபோது பெண்கள், சிறுமிகளுக்கு நடந்த கட்டாய திருமணங்கள்: வெளியான தகவல்

tamil.oneindia.com - Veerakumar : வாஷிங்டன்: ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு வெளியேற விரும்பும் ஆண்கள் .. பெண்கள் மற்றும் சிறுமிகளை கட்டாய திருமணம் செய்து கொண்டு அதை காண்பித்து நாட்டை விட்டு வெளியேற விண்ணப்பம் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன . அமெரிக்காவின் முன்னணி ஊடகம் சிஎன்என் இது தொடர்பாக களத்தில் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் தங்களுக்கு கிடைத்த தகவல்களை கட்டுரையாக வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாடு முழுவதையும் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி தாலிபான்கள் கைப்பற்றினர். இதையடுத்து அமெரிக்க நேசப்படைகளுக்கு உதவிகரமாக இருந்து வந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர்.
அவசர ஓட்டம்

அவசர ஓட்டம்

விமானங்களில் இடம் இல்லாத நிலையில் படிக்கட்டுகளின் அருகே அமர்ந்து கொண்டு பயணிக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர். இதனால் பறக்கும் விமானத்தில் இருந்து விழுந்து 3 பேர் பலியான சம்பவம் ஆப்கானிஸ்தானில் அரங்கேறியது . அமெரிக்கப் படைகளுக்கு உதவிகரமாக இருந்தவர்கள் மட்டுமல்லாது தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அங்கு சட்டதிட்டங்கள் கடமையாகும் என்ற அச்சத்தின் காரணமாகவும் பலர் வேறு நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்தனர்.

திருமணமானவர்களுக்கு முன்னுரிமை

திருமணமானவர்களுக்கு முன்னுரிமை

இதுபோன்ற காலகட்டங்களில் தனிநபர்களை விடவும் திருமணமானவர்களுக்கு வெளியேற்றுவதில் அமெரிக்க ராணுவம் முன்னுரிமை கொடுத்தது. இதை அறிந்து கொண்ட பல ஆண்கள் .. சிறுமிகள் மற்றும் பெண்களை கட்டாயமாக திருமணம் செய்து கொண்டு தங்களுக்கு திருமணம் ஆகி விட்டதாக கூறி வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு அமெரிக்காவிடம் விண்ணப்பித்துள்ளனர். போலியாக கணவன்-மனைவி போல நடித்துக்கொண்டும் சிலர் வெளிநாடு சென்று உள்ளனர் என்கிறது சிஎன்என் கட்டுரை.

ஏர்போர்ட் வெளியே திருமணம்

ஏர்போர்ட் வெளியே திருமணம்

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து தப்பிய அனைவரும் தலைநகரம் காபூல் விமான நிலையம் மூலமாக வெளியேற்றப்பட்டனர். அங்கு அமெரிக்கப் படைகள் முகாமிட்டு வெளியேற்ற பணிகளை ஒருங்கிணைத்து வந்தது. ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் அனைத்து அமெரிக்க வீரர்களும் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து கிளம்பிச் சென்றனர். வெளியேற்றப்பட்ட குடிமக்கள் பல்வேறு நாடுகளுக்கும் சென்றுள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பெண்கள் சிலர் இதுபற்றி கூறுகையில்.. தாலிபான்கள் பிடியில் இருந்து தப்பி ஓட வேண்டும் என்பதற்காக காபூல் விமான நிலையத்துக்கு வெளியே அவசரஅவசரமாக தங்களது குடும்பத்தார் திருமணம் செய்து வைத்ததாக தெரிவித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பணம் பெற்று திருமணம்

பணம் பெற்று திருமணம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் வாஷிங்டனுக்கு அனுப்பிய தகவலில் இந்த அம்சங்கள் இடம்பெற்றுள்ளன என்று அந்த செய்திக் கட்டுரை குறிப்பிடுகிறது. இவ்வாறு அவசர திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்காத பெண் வீட்டாருக்கு பெருமளவு பணம் கொடுத்து கணவன்-மனைவி போல நடிக்க உங்கள் மகளை அனுப்பி வையுங்கள் என்று ஆண்கள் கேட்டு அழைத்து வந்துள்ளனர். சில நேரங்களில் பணத்தை பெற்றுக்கொண்டு உண்மையிலேயே திருமணம் நடந்துள்ளது. அனைத்துமே அவசர கோலத்தில் அரங்கேறியுள்ளன.

ஆப்கன் பெண்கள் நிலைமை

ஆப்கன் பெண்கள் நிலைமை

இதே நிகழ்வுகள் அப்படியே தலைகீழாகவும் அரங்கேறியுள்ளன. நாட்டை விட்டு வெளியேற விரும்பும் பெண்கள் தாங்களாகவே மனமுவந்து அவசரமாக தங்கள் குடும்பத்தாருக்கும் தெரிந்த ஆண்களைத் திருமணம் செய்து கொண்டு தப்பி ஓடியுள்ளனர். 1996 முதல் 2001 ஆம் ஆண்டு வரை ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடத்தியபோது சிறுமிகள் பள்ளிக்கு செல்வதற்கும், பெண்கள் அலுவலகம் செல்வதற்கும் தடை விதித்தனர். பெண்களுக்கு மிக கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன . இதன் காரணமாகத்தான் பெண்கள் கூட, அச்சமடைந்து இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்துள்ளனர் என்கிறது அந்த செய்தி அறிக்கை.

கருத்துகள் இல்லை: