வெள்ளி, 3 செப்டம்பர், 2021

இத்துப்போன உங்கள் ராமனை விட செத்து போன எங்கள் ராவணன் எவ்வளவோ மேல்.

May be an image of text that says 'வீர காவியம் வீழ்த்தப்பட் வீழ்த்தப்பட்டவர்களின் அவனது இனத்தாரின் அசுரன் கதை ராவணன் மற்றும் ஆனந்த் நீலகண்டன் தமிழில்: நாகலட்சுமி சண்முகம் Tamil translation Anand Neelakantan's National Bestseller ASURA TALE'F OF THE VANQUISHED'

சுமதி விஜயகுமார் :  வாரத்தில் ஒரு நாள் தூர்தர்ஷனில் ராமாயணம் ஒளிபரப்பாகும். கேபிள் இல்லாத காலம் என்பதால் வேறு வழி இல்லாமல் அதை பார்க்க நேரிடும்.
அதுவும் ஹிந்தியில் தான் இருக்கும். வசனங்களும் புரியாது.
அதனால் கதையும் சரியாக தெரியாது. ராமர் காட்டுக்கு சென்றதும் , சீதையை மீடியதும் மட்டும் தான் தெரியும்.
ஆனால் போர் வருகிறது என்று தெரிந்தால் மட்டும் ஆர்வத்துடன் பார்ப்பதுண்டு.
ஒரு வில்லில் இருந்து நெருப்பு வர , எதிர் வில்லில் இருந்து தண்ணீர் வரும். ஒரு வில்லில் இருந்து பாம்பு வர , எதிர் வில்லில் இருந்து பருந்து வரும்.
அதிலும் இலங்கையில் அனுமாருக்கு இருக்கை தர மறுக்க, அனுமனின் வால் நீண்டு சுருண்டு ஒரு சிம்மாசனம் போல அமையும்.
அது மன்னனின் சிம்மாசனத்தை விட உயரமானதாக இருக்கும். அதில் அனுமார் கம்பீரமாக உட்கார்ந்த காட்சிகள் எல்லாம் மிகவும் ரசித்து பார்த்த காட்சிகள். தூங்கி கொண்டிருக்கும் கும்பகர்ணனை எழுப்ப வாத்தியங்கள் முழங்க பல வழிகளிலும் எழுப்பும் காட்சி இன்னமும் கண் முன் நிற்கிறது.
தாத்தா, மிக நல்ல திரைப்படம் என்று என்னையும் அண்ணனையும் மட்டும் 'லவகுசா' திரைப்படத்திற்கு அழைத்து சென்றார்.

அதில் குறிப்பட்ட எந்த காட்சிகளும் மனதில் ஒட்டவில்லை. கடைசியில் சீதை அழுது புலம்பி ' பூமி மாதா என்னை ஏற்று கொள்' என்று சொல்ல , பூமி இரண்டாக பிளந்து, பூமி மாதா மேலே வந்து 'நீ துன்புற்றது போதும். என்னுடன் வந்து விடு' என்று சீதையை கட்டி அனைத்து இருவரும் பூமிக்குள் செல்ல , பூமி மூட் கொள்ளும். மற்றபடி ராமனை பூசித்ததும் கிடையாது ஏசியதும் கிடையாது. முதன்முறையாக ராமாயணத்தை முழுவதுமாக இல்லை என்றாலும் ஒரு முழு கதையாய் சமீபத்தில் தான் படிக்க நேர்ந்தது. அதுவரை நான் கேட்ட பார்த்த ராமாயண கதைகளில் இருந்து இது கொஞ்சம் வேறு மாதிரி இருந்தது. எப்போதும் ராமரின் கதையை தான் கேட்டிருக்கிறேன். முதன்முதலாக ராவணனின் கதையை அப்போது தான் கேட்டேன். ராமாயணத்தை ராவணனின் பக்கம் இருந்து படித்தால் அது ராமாயணம் ஆகுமா? ராவணன் இல்லாமல் ராமாயணம் இல்லை என்றால் , அப்போது கட்டாயம் ராவணனின் பக்கம் இருந்து படித்தால் அதுவும் ராமாயணம் தான்.

முதல் அத்தியாயமே ராவணனின் கோர மரணம் தான். எலிகள் கால்களையும் , நரிகள் காதையும் திங்க , வலியில் அசைய பலமின்றி படுத்திருக்கிறான் ராவணன். அவ்வளவு கொடூரமான ஒரு மரணத்திற்கு அவன் தகுதியனானா என்றால் அவன் செய்த தவறுகளுக்கு இந்த முடிவு சரி தான் என்பதை போல தன் நினைவுகளை பின் நோக்கி பார்க்கிறான். தன் மாற்றாந்தாயின் சகோதரனாகிய குபேரன், ஏழ்மையில் இருக்கும் கும்பகர்ணன் குடும்பத்தை தொடர்ந்து அவமதிக்க, தன் உடன் பிறந்த சகோதரர்களாகிய கும்பகர்ணன் மற்றும் விபீஷனுடன் இலங்கையை விட்டு வெளியேறுகிறான்.  தன் ஆட்சியின் கீழ் அறத்தை நிலைநிறுத்திய மகாபலி வஞ்சகத்தால் துரத்தப்பட காடுகளில் தஞ்சம் புகுகிறார். தனக்கடுத்து ராவணன் தான் அறத்தில் ஆட்சியை கொடுக்க முடியும் என்று கருதி அனைத்து பயிற்சிகளையும் வழங்குகிறார். பயிற்சியின் இறுதியில் கோபம் , ஆணவம் , பயம் , பொறாமை , துக்கம் போன்ற 9 துர்குணங்களை துறக்க வேண்டும் என்று கூறுகிறார் மகாபலி. அந்த 9 உணர்ச்சிகளும் இல்லாமல் ஒரு மனிதன் எப்படி வாழ்வது என்று கேட்டு விட்டு ராவணன் வெளியேறுகிறான். அதனை கேட்ட மகாபலி கூக்குரல் இடுகிறார். அதன் அர்த்தம் ராவணன் ரத்த வெள்ளத்தில் இருக்கும் பொது தான் புரிகிறது.

தன் குடும்பத்தை பறி கொடுத்த ஒரு சாதாரண மனிதனாகிய பத்ரன் ராவணனுடன் வந்து சேர்கிறான். ராவணன் அசுரர்களின் அரசனாகவும், குபேரனின் ஆட்சியை கவிழ்த்து இலங்கைக்கு அரசன் ஆவதிலும் முக்கிய பங்கு  வகிக்கிறான். ஆனாலும் ராவணன் பத்ரனை துச்சமென மிதித்து புறம் தள்ளுகிறான். தன் ஆட்சியை இந்தியாவிலும் நிலைநிறுத்துகிறான். மனைவி குழந்தைகள் என சுகமாக வாழ்கிறான். ராவணனின் ஆட்சியில் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதற்கு பத்ரனே சாட்சியாக இருக்கிறான். பல நேரங்களில் ராவணனின் ஆட்சியை வெறுக்கிறான். ராவணன் இறந்து போக , ராமன் இலங்கைக்கு வருகிறான். பத்ரனால் ராவணனையும் ராமனையும் ஒப்பிட்டு பார்க்காமல் இருக்க முடியவில்லை. ராவணனின் ஆட்சியில் ஏழை பணக்காரன் வேறுபாடு இருந்த போதிலும் , உழைப்பும் அதிர்ஷ்டமும் இருந்தால் யார் வேண்டுமானாலும் முன்னேறலாம். ஆனால் ராமனின் ஆட்சியில் பிறப்பின் அடிப்படையில் தான் அனைத்தும்.

தன் பிறப்பை தாண்டி தன் திறமையை வளர்த்து கொண்ட பத்ரனின் வளர்ப்பு பெயரானாகிய பத்ரனை , அவன் வேதங்கள் படித்ததனாலேயே அவனின் தலையை கொய்கிறான்.தன் அறிவுறுத்தல் இல்லாமலேயே பத்ரன் சூழ்ச்சியால் குபேரனின் படையை வலுவிழக்க வைக்க , ராவணன் ஆட்சியை கைப்பற்றி , அறமற்று நடந்து கொண்டதை எண்ணி வருந்துகையில் , ராமனோ வாலியை பின்னால் இருந்து தாக்குகிறான். தன் மனைவி மண்டோதரியை வானர படை கடத்தி சென்று அம்மணமாய் ஆக்க , இதில் அவள் தவறு என்ன இருக்கிறது என்று அவளை மீண்டும் ராவணன் ஏற்று கொள்ள , ராமனோ தன் மனைவி சீதையை தீக்குளிக்க வைக்கிறான். எதுவானாலும் நேருக்கு நேர் நின்று போரிடும் ராவணன் , சூழ்ச்சியாலும் வஞ்சத்தாலும் வீழ்த்தும் ராமனிடம் தோற்பதில் ஆச்சர்யமே இல்லை.

ஒருவேளை மகாபலி சொன்னது போல , அந்த ஒன்பது கெட்ட குணங்களையும் விட்டெறிந்து, பத்ரன் போன்ற சாமானியர்களை அங்கீகரிக்க மறுக்காமல்  , தன் நம்பிக்கைக்குரிய அமைச்சர்களை உதாசீனப்படுத்தாமல், தன் லட்சியமாகிய சாதி பேதமற்ற சமூகத்தை அமைப்பதில் இருந்து விலகாமல் , தன் மகளாகிய சீதையின் பாசத்தால் தன் மக்களை பலியிடாமல், அனைவரிடத்திலும் கோபத்தை மட்டுமே வெளிப்படுத்தாமல் இராவணன் இருந்திருப்பானேயானால் அவனும் இன்னொரு மகாபலி ஆகி இருப்பான். ஆனாலும் , மகாபலி மட்டும் என்ன தன் மக்களுக்கு வழங்கி வந்த அந்த நல்லாட்சியை விடவும் வாமனனின் சூழ்ச்சியில் விழாமல் இருந்திருந்தால் ராவணனுக்கு அந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.ராவணனை வெறுத்த பத்ரன் ராமனின் ஆட்சி அமைகையில் ராவணனை எண்ணி அழுவது தான் , எத்தனை குறைகள் இருந்த  போதிலும் இன்றைய பத்ரன்கள்  திராவிட கட்சிகளை ஆதரிக்க காரணம்.முதலில் ராவணனை நேசித்து பின்பு வெறுத்து , அவனின் இறப்பில் கண்ணீர் சிந்தும் பத்ரன் நமக்கு சொல்வது ஒன்றே ஒன்று தான்.
இத்துப்போன உங்கள் ராமனை விட செத்து போன எங்கள் ராவணன் எவ்வளவோ மேல்.

கருத்துகள் இல்லை: