வியாழன், 2 செப்டம்பர், 2021

இரண்டு மாடிக்கு மேலுள்ள கட்டடங்களில் லிஃப்ட் கட்டாயம்!

 மின்னம்பலம் : புதிதாக கட்டப்படும் கட்டடங்களில் இரண்டு அடுக்குகளுக்கு மேல் இருந்தால் லிஃப்ட் வசதி கட்டாயம் அமைக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆணை பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று(செப்டம்பர் 1) மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆகிய துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.
இதில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்கேற்ப உட்கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் வரையறுக்கிறது. அதன்படி, தமிழ்நாட்டில் இரண்டு அடுக்குகளுக்கு மேல் புதிதாக கட்டப்படும் கட்டடத்தில் லிஃப்ட் (Lift) உள்ளிட்ட வசதிகள் கட்டாயம் செய்யப்பட வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் லிஃப்ட், சாய்தள மேடை, சிறப்பு கழிப்பறை கட்ட வேண்டும்.

பார்வையற்றோருக்கான அறிவிப்பு பலகை, தனி வாகன நிறுத்தம் ஆகிய வசதிகள் செய்யப்பட வேண்டும். கட்டடங்கள், போக்குவரத்து, இணையதளங்கள் ஆகியவற்றை மாற்றுத்திறனாளிகள் அணுக தடையில்லா உட்கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆணை பிறப்பித்துள்ளது.

அதுபோன்று, அரசுத்துறை நிறுவனங்கள், அரசுப் பள்ளிகள் ஆகியவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 % இட ஒதுக்கீடு 2016 ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்ட பிரிவு 34 இன் படி வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் பணியாற்ற தகுதி வாய்ந்த பணியிடங்கள் கண்டறியப்பட்டு இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் எனவும் சட்டம் வரையறுக்கிறது.

அதனடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்களை நிரப்ப தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

கருத்துகள் இல்லை: