வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு
maalaimalar : கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,410 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை:முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்பதாவது:- ; விவசாயிகளுக்கு துயர் ஏற்படும்போதெல்லாம், அம்மா அரசு உதவிக்கரம் நீட்டி, அவர்களைக் காப்பதில் முன்னிலையில் இருந்து வருகின்றது. அதனால்தான், 2016 ஆம் ஆண்டு அம்மா மீண்டும் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற உடன், 31.3.2016 வரை நிலுவையில் இருந்த 5,318.73 கோடி ரூபாய் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தார். இதனால் 12.02 லட்சம் சிறு, குறு விவசாயிகள் பயன்பெற்றனர்.

2017ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக இழப்பைச் சந்தித்த விவசாயப் பெருமக்களுக்கு 2,247 கோடி ரூபாய் வறட்சி நிவாரணத் தொகையாக அம்மாவின் அரசு வழங்கியது. இதைத் தொடர்ந்து, விவசாயிகளின் வாழ்வு செழிக்க, பல்வேறு நலத்திட்டங்களும், வேளாண் கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டங்களும் எனது தலைமையிலான அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், 2019-20 ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றின் காரணமாக உலக நாடுகள் பலவும் பெரும் பாதிப்புக்கு உள்ளாயின. தமிழ்நாட்டிலும் இதன் தாக்கம் இருந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகியது. இந்நிலையில், விவசாயமும் பாதிப்புக்கு உள்ளாகியதுடன், தொடர்ந்து ஏற்பட்ட நிவர், புரெவி போன்ற புயல்களும், அதைத் தொடர்ந்து, சென்ற மாதம் பருவம் தவறிப் பெய்த கடும் மழையும், பெருத்த பயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியதால், கடன் பெற்று பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் பெரும் அல்லலுக்கு உள்ளாகினர்.

இந்தப் பேரிடர், அறுவடைகளுக்குத் தயாராக இருந்த நெல், கரும்பு, வாழை, தோட்டப் பயிர்களை மட்டுமல்லாது, மானாவாரி பயிர்களையும் பெருமளவில் சேதப்படுத்தியது.

வேளாண் பெருமக்களின் நலனில் என்றும் அக்கறை கொண்டுள்ள எனது தலைமையிலான அம்மாவின் அரசு, மத்திய அரசின் நிதி விடுவிப்பையும் எதிர்பாராமல், சாகுபடி செய்த பயிர்களுக்கான இடுபொருள் உதவித்தொகை 1,717 கோடி ரூபாயை 16.43 லட்சம் விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க உத்தரவிட்டு, அந்தத் தொகையையும் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இந்த இடுபொருள் உதவித்தொகையானது, விவசாயிகளின் துயரைத் துடைத்தாலும், அவர்கள் மீண்டும் பயிர்த்தொழிலைத் தொடர உதவ வேண்டும் என்று அம்மாவின் அரசு எண்ணியது.

மேலும், விவசாயிகள், பல்வேறு விவசாய சங்கங்கள், சாகுபடி பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள பெருத்த சேதத்தைக் கருத்தில் கொண்டு, நிலுவையில் உள்ள பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.

கீழே விழுந்தவர்களை மேலே தூக்கி விட்டால் மட்டும் போதாது, அவர்கள் மேலும் வலுப்பெற உதவி செய்திட வேண்டும் என்ற உயரிய சிந்தனையில், எனது தலைமையிலான அம்மாவின் அரசு செயல்பட்டு வருகின்றது.

எனவே, தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, 31.1.2021 அன்றைய நிலவரப்படி, கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான 12,110 கோடி ரூபாயையும் தள்ளுபடி செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனவே, தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான 12,110 கோடி ரூபாயையும் தள்ளுபடி செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.

“அதிகமாக நேசிப்பவனே அதிகமாக உதவி செய்பவன்”.

நானும் ஒரு விவசாயி; விவசாயிகளை அதிகமாக நேசிப்பவன்; வேளாண் பெருங்குடி மக்களின் இன்னலைத் தீர்ப்பதே எனது முதல் கடமை என்னும் நிலையில் இருந்து எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையினால், பயிர்க்கடன் நிலுவை வைத்துள்ள 16.13 லட்சம் வேளாண் பெருமக்களும் எந்தவிதமான சிரமமும் இன்றி, வரும் ஆண்டில் பயிர் சாகுபடியைத் தொடர வழிவகை செய்யப்பட்டுள்ளது.

2006ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போதும், நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் அளிப்பதாக தி.மு.க.வினர் வாக்குறுதி அளித்தனர். அவ்வாக்குறுதியை அவர்களால் நிறைவேற்றவே முடியவில்லை என்பது தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரிந்த உண்மை. அதேபோன்று, 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத்தேர்தலின்போது, நாங்கள் வெற்றி பெற்று வந்தவுடன், விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்ற எதிர்கட்சித் தலைவர் வாக்குறுதி அளித்தார்.

பாராளுமன்றத் தேர்தலில் அவரது கட்சியினர் 38 இடங்களில் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவுடன், மக்களுக்கு அளித்த வாக்குறுதியை மறந்தார்கள். இதுதான் அவர்கள் ஒவ்வொரு தேர்தலின் போதும் கடைப்பிடிக்கும் வாடிக்கை. தேர்தலின்போது அளிக்கப்படும் வாக்குறுதியை நிறைவேற்றும் ஒரே அரசு அ.தி.மு.க. அரசு தான் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்

கருத்துகள் இல்லை: