திங்கள், 1 பிப்ரவரி, 2021

தமிழகத்தில் 3 சீட்டுகள், புதுச்சேரியில் ஒரு சீட்டு.. மொத்தம் நான்கு சீட்டுகள்? விடுதலை சிறுத்தைகள்

minnambalam :திமுக கூட்டணியில் இருக்கும் ஒவ்வொரு கட்சியின் தலைவரையும் திமுகவின் தலைவர் ஸ்டாலின் சார்பாக பிரதிநிதி ஒருவர் சந்தித்து, வரும் சட்டமன்றத் தேர்தலில் உங்கள் கட்சிக்கு இத்தனை சீட்டுகள்தான் ஒரு கணக்கை சொல்லியிருக்கிறார். இதுதான் இப்போது திமுக கூட்டணிக்குள் மௌனமாக ஒரு புயலை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனைச் சந்தித்த ஸ்டாலினின் பிரதிநிதி, ‘வரும் தேர்தலில் சிறுத்தைகளுக்கு இரு தொகுதிகள்தான் ஒதுக்க முடியும்’ என்று சொல்லக் கேட்டு திருமா அதிர்ந்துவிட்டார். இது தொடர்பாக உடனடியாக ஸ்டாலினிடம் பேச முயற்சித்த திருமாவளவனை ஸ்டாலினின் மாப்பிள்ளை சபரீசன் சந்தித்துள்ளார். அவரும் அந்த இரு சீட் என்ற தகவலை திருமாவிடம் உறுதியாகச் சொல்லியுள்ளதாக தெரிகிறது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமிழகம் தாண்டியும் கிளை விரித்திருக்கிற நிலையில், இரு தொகுதிகள்தான் என்ற நிபந்தனை தலைமையை மிகவும் வருத்தமும் கோபமும் அடைய வைத்திருக்கின்றன. தொடர்ந்து இதுகுறித்து சிறுத்தைகள் அழுத்தம் கொடுத்த நிலையில், தமிழகத்தில் 3 சீட்டுகள், புதுச்சேரியில் ஒரு சீட்டு ஆக மொத்தம் நான்கு சீட்டுகள் என்று திமுக நிற்பதாகத் தகவல்.

இதுகுறித்து இரு கட்சி வட்டாரத்திலும் விசாரித்தோம்.

“ஒருவேளை பாமக இப்போது இருக்கும் அதிமுக கூட்டணியிலேயே தொடர்ந்தால் கூட விடுதலைச் சிறுத்தைகளுக்கு என ஒதுக்கும் தொகுதி பற்றிய முடிவில் மாற்றம் இல்லை என்பதே திமுக தலைமையின் நிலைப்பாடாக இருக்கிறது. இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவரின் முன்னால் ஐந்து வாய்ப்புகள் இருக்கின்றன.

1. திமுக தலைமை விதிக்கும் சின்னம் உட்பட நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு குறைந்தபட்ச தொகுதிகளில் திமுக கூட்டணியில் தொடர்வது...

2. வரும் சட்டமன்றத் தேர்தலில் சிறுத்தைகள் சார்பில் சட்டமன்றத்துக்கு நுழையவேண்டும் என்றால் அதிமுக கூட்டணியில் சேரலாம். அதிமுக கூட்டணியில் சிறுத்தைகள் முதன்மையாக எதிர்க்கும் பாமகவும், பாஜகவும் உள்ளன. இந்த இரு கட்சிகள் இருக்கும் அணியில் சேரமாட்டோம் என்பது சிறுத்தைகளின் கொள்கை முடிவாகவே உள்ளது. ஆனாலும் ஒருவேளை ராஜீவ் கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரரிவாளன் உள்ளிட்ட ஏழுபேரை எடப்பாடி அரசு முயற்சி செய்து விடுதலை செய்யும் பட்சத்தில் அதன் அடிப்படையிலேயே கூட அதிமுகவை சிறுத்தைகள் ஆதரிக்க ஒரு சாத்தியக் கூறு உள்ளது,

3. 2016 இல் மக்கள் நலக் கூட்டணி அமைத்தது போல இப்போது மூன்றாவது அணி அமைக்கலாம். தேமுதிக, அமமுக, எஸ்டிபிஐ போன்ற கட்சிகள் அந்த மூன்றாவது அணியில் இடம்பெறக் கூடும்.

4. கட்சியை பலப்படுத்தும் வகையில் வாய்ப்புள்ள தொகுதிகளில் மட்டும் தனித்துப் போட்டியிடலாம்.

5. தேர்தலைப் புறக்கணிக்கலாம்.

இப்படி ஐந்து வாய்ப்புகள் திருமாவளவன் முன்னால் இருக்கின்றன. இதில் திருமாவளவன் எதைக் கையிலெடுக்கப் போகிறார் என்பது போகப் போகத் தெரியும்” என்கிறார்கள்.

-வேந்தன்

கருத்துகள் இல்லை: