வியாழன், 4 பிப்ரவரி, 2021

“அண்ணே.. ப்ளீஸ் அடிக்காதீங்க” : இளைஞரைக் கட்டி வைத்துத் தாக்கிய கும்பல்!

minnambalam.com : தஞ்சையில் கூலித் தொழிலாளியை மரத்தில் கட்டிவைத்து பிரம்பால் கடுமையாகத் தாக்கி துன்புறுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி கண்டனங்களைப் பெற்று வருகிறது.   தஞ்சாவூர் அருகே பூண்டி கிராமம், மேலத்தெருவில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். இவரது மகன் ராகுல். 22 வயதான ராகுல் கூலி வேலைக்குச் செல்வதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பணத்தைத் திருடி விட்டதாக ராகுலை 5 பேர் கொண்ட கும்பல் கண்களைக் கட்டி கடுமையாகத் தாக்கும் வீடியோ இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

முதலில் முட்டி போட வைத்து அவரது கண்ணைத் துண்டால் இறுக்கிக் கட்டி அங்கிருந்த மரத்தின் அருகே அந்த கும்பல் அழைத்துச் செல்கிறது. அங்கு இரண்டு பேர் தனித்தனியாக ராகுலின் கைகளை இழுத்து பிடித்துக் கொள்கின்றனர். பின்னர் ராகுலின் நெஞ்சு பகுதியினை மரத்தில் வைத்து அழுத்துகின்றனர்.

இதை அடுத்து இளைஞர் ஒருவர் மரக்கட்டையால் ராகுலின் பின்பகுதியில் வேகமாக அடிக்கிறார். சில நொடிகளில் வலி தாங்கமுடியாத ராகுல் கதறி அழுகிறார்.

'அண்ணே வேண்டாம் அண்ணே இனிமே எடுக்க மாட்டேன்... கொடுத்திடுறேன்... விட்ருங்க ப்ளீஸ் அடிக்காதீங்க' என ராகுல் கெஞ்சியும் விடாத அந்த மிருக கும்பல் தொடர்ந்து தாக்கும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது.

இதைத்தொடர்ந்து ராகுலை தலை குப்புற படுக்க வைத்து தலைமேல் ஒருவர் உட்கார்ந்து கொள்ள, மற்றொருவர் பின் பகுதியிலும் கால் பாதங்களிலும் கடுமையாக அடிக்கிறார். அப்போது மற்றொருவர், 'ஐயப்பா இனிமேல் அடிக்காத செத்துப் போய்ட போறான் விடுங்க' என்கிறார்.

ஆனால் , 'செத்தால் சாகட்டும் அடிங்கடா' என சொல்கிறார் மற்றொருவர். இதையடுத்து ராகுல் மயங்கிய நிலையில் பேச்சு மூச்சு இல்லாமல் கிடப்பது போல் வீடியோவில் பதிவாகியுள்ளது.

இளைஞரை அந்த கும்பல் எதற்காகத் தாக்குகிறார்கள் என முழுமையான விவரங்கள் தெரியவராத நிலையில், ராகுல் பணம் திருடியதாகக் கூறப்படுகிறது. ஆனால் இது திருட்டு விவகாரம் இல்லை என்று ஊர் மக்கள் சிலர் கூறுகின்றனர்.

இந்நிலையில், ராகுல் தவறு செய்திருந்தாலும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டியது தானே? தண்டிக்க இவர்கள் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதனிடையே வலி தாங்க முடியாத ராகுல் எலி மருந்து உட்கொண்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அய்யம்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில், ராகுலை இரக்கமின்றி தாக்கிய நபர்களுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

- பிரியா

கருத்துகள் இல்லை: