சனி, 6 பிப்ரவரி, 2021

காங்கிரஸ் 20 மதிமுக 10 மார்க்சிஸ்ட் 8 இந்திய கம்யூனிஸ்டு 8 விடுதலை சிறுத்தைகள் 6 முஸ்லிம் லீக் 2 மமக 2

Minnambalam : திமுக கூட்டணி இன்றைய நிலவரம்  

திமுக எத்தனை? கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை?

திமுக சார்பில் கடந்த சில வாரங்களாகவே கூட்டணிக் கட்சித் தலைவர்களை ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள் சந்தித்திருக்கிறார்கள்.   ”உங்களுக்கு இத்தனை சீட்டுதான், தலைவர் சொல்லச் சொன்னார்” என்று அந்த நபர் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் முன்னே நின்று சொல்லும்போதே அந்தத் தலைவர்களுக்கு அதிர்ச்சி ஆகிவிட்டது. காரணம் அவர் சொன்ன சீட்டுகளின் எண்ணிக்கை அவ்வளவு குறைவாக இருந்தது.

உதாரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சந்தித்த ஸ்டாலினுக்கு நெருக்கமான பிரமுகர், “உங்களுக்கு வரும் தேர்தலில் இரு சீட்டுகள்தான்” என்று சொன்னதையும் அதைக் கேட்டு திருமா அதிர்ந்ததையும் நாம் ஏற்கனவே மின்னம்பலத்தில் குறிப்பிட்டிருந்தோம்.

அதுபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தாங்கள் போட்டியிட விரும்பும் 21 தொகுதிகளுக்கான பட்டியலை ஏற்கனவே திமுக தலைமையிடம் கொடுத்திருந்தார்கள். அதன் அடிப்படையில் திமுகவின் திருவண்ணாமலை மாவட்டச் செயலாளரும், ஸ்டாலினுக்கு நெருக்கமானவருமான எ.வ.வேலு மார்க்சிஸ்ட் கட்சி மாநில நிர்வாகிகளோடு பேச்சு நடத்தியிருக்கிறார். அவர் முதலில் 3 என்றுதான் ஆரம்பித்திருக்கிறார். இந்த எண்ணிக்கையெல்லாம் நாங்கள் எங்கள் மாநிலக் குழுக்கூட்டத்தில் சொல்லவே கூச்சமாக இருக்கிறது என்று முதலிலேயே எதிர்ப்பைத் தெரிவித்துவிட்டார் பாலகிருஷ்ணன்.

இதுபோல மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மதிமுக போட்டியிட விரும்பும் 16 தொகுதிகளின் பட்டியலை ஸ்டாலினிடம் கொடுத்திருக்கிறார். அதைப் பார்த்துக் கொஞ்ச நேரம் பதிலேதும் பேசாத ஸ்டாலின், ‘மத்த கட்சிகளும் இருக்காங்கள்ல அண்ணே.... பாத்துப் பண்ணிக்குவோம்’என்று கூறியதாக தகவல்.

மேலும் மமக ஏற்கனவே தங்களுக்கென 15 தொகுதிகள் அடங்கிய பட்டியலை ஸ்டாலினிடம் கொடுத்திருக்கிறது. முஸ்லிம் லீக் காதர் மொய்தீனோடு பொதுச் செயலாளர் துரைமுருகன் தொடர்ந்து பேசிவருகிறார்.

இந்நிலையில் மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய வைகோ, “சீட்டு பற்றி நானும் ஸ்டாலினும்தான் தனியே அமர்ந்து பேசினோம். அதனால் அதுபற்றி எங்கள் இருவருக்கும் தான் தெரியும். எனவே சீட்டுகளின் எண்ணிக்கை பற்றி கவலைப்படாதீர்கள். நமக்கு கௌரவமான இடங்கள் கிடைக்கும்”என்று சொல்லியிருக்கிறார்.

மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கும்போதும், முடிந்த பின்ன்னும் ஆஃப் த ரெக்கார்டாக திமுக கூட்டணிக் கட்சிகளின் நிலை பற்றி ஒரு விவாதம் தாயகத்தில் நடந்திருக்கிறது.

“திமுக தலைவர் காங்கிரஸோடு டெல்லியில் பேச வேண்டியவர்களை வைத்து (பிரசாந்த் கிஷோர் உட்பட) பேசிவிட்டார்.அதனால் 20 சீட்டுகள் காங்கிரசைக் கட்டுப்படுத்திவிடுவார்.

மதிமுகவுக்கு 16 சீட் கேட்டிருக்கிறார் வைகோ. இரட்டை இலக்கம் வேண்டும் என்பதில் வைகோ பிடிவாதமாக இருக்கிறார். எனவே வைகோவிடம் பெரிய அளவில் மன வருத்தம் ஏற்படுத்திக் கொள்ள விரும்பாத ஸ்டாலின் 10 என்ற அளவில் மதிமுகவை வைத்திருக்கிறார்.

இரு கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும் தலா 8 சீட்டுகள். விடுதலைச் சிறுத்தைகளுக்கு கடுமையான இழுபறிக்குப் பின் 6 சீட்டுகள் ஒதுக்கப்படலாம். முஸ்லிம் லீக், மமம ஆகிய கட்சிகளுக்கு தலா இரு சீட்டுகள்....

காங்கிரஸ் 20

மதிமுக 10

மார்க்சிஸ்ட் 8

இந்திய கம்யூனிஸ்டு 8

விடுதலை சிறுத்தைகள் 6

முஸ்லிம் லீக் 2

மமக 2

என மொத்தம் 56 தொகுதிகள் வருகின்றன. 234 தொகுதிகளில் 56 தொகுதிகள் போக மீதியிருப்பவை 178 தொகுதிகள்.

ஈஸ்வரனின் கொமதேக, வேல்முருகனின் தவாக உள்ளிட்ட கட்சிகள் உதயசூரியன் சின்னத்திலேயே ஓரிரு தொகுதிகளில் நிறுத்தப்படக் கூடும். குறைந்தபட்சம் 175 தொகுதிகளில் திமுகவின் உதயசூரியன் சின்னம் களம் காணக் கூடும்” என்கிறார்கள் திமுகவின் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள்.

நம்மிடம் பேசிய ஒரு மதிமுக நிர்வாகி, “2016 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள், தேமுதிக ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதில் தேமுதிக நீங்கலாக மற்ற கட்சிகள் இப்போது திமுக கூட்டணியில் இருக்கின்றன. 2016இல் திமுக ஆட்சியைப் பிடிக்கமுடியாமல் போனதற்கான காரணம் மக்கள் நலக் கூட்டணிதான் என்று ஸ்டாலின் திடமாகக் கருதுகிறார். இதனாலேயே இந்தக் கட்சிகளுக்கு அதிக அளவில் இடங்கள் வழங்குவதில் அவர் பெரிய ஆர்வம் காட்டவில்லை. அந்த கோபம்தான் 2021 சட்டமன்றத் தேர்தல் இடப் பங்கீட்டில் வெளிப்படுவதாக எங்கள் திமுக நண்பர்களே கூறுகிறார்கள். இந்த பட்டியலில் ஒன்றிரண்டு கூடலாம், குறையலாம். ஆனால் ஸ்டாலினிடம் இருக்கும் தற்போதைய உத்தேசப் பட்டியல் இதுதான்” என்கிறார்கள்.

-வேந்தன்

கருத்துகள் இல்லை: