சனி, 2 நவம்பர், 2019

இளையராஜா - பாரதிராஜா சந்திப்பு: பின்னணி என்ன?

hinduonline : தேனி. ‘இயலும் இசையும் இணைந்தது. இதயம் என் இதயத்தைத் தொட்டது...
என் தேனியில்’ என இளையராஜாவுடனான தனது சந்திப்பு குறித்து ட்விட்டரில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார் பாரதிராஜா. பாதிராஜாவின் முதல் படமான ’16 வயதினிலே’ படத்துக்கு இசையமைத்தவர் இளையராஜா. ஆனால், அவர்களின் பந்தம் அதற்கும் முந்தையது. சென்னையில் பாரதிராஜா, இளையராஜா, அவரின் சகோதரர்கள் கங்கை அமரன், பாஸ்கரன், பாடகர் எஸ்பிபி என பல பிரபலங்கள் ஒன்றாக ஒரே அறையில் நாட்களைக் கழித்த காலத்தில் அவர்களே அறிந்திருக்க மாட்டார்கள், அத்தனை பேரும் புகழின் உச்சியைத் தொடுவார்கள் என்று.
ஆனால், காலம் அவர்களை உச்சத்தில் வைத்தது. அதற்குக் காரணம், அவர்களின் கலையாக இருந்தது. ‘16 வயதினிலே’ படம் தொடங்கி, ’சிகப்பு ரோஜாக்கள்’ (1978), ’கிழக்கே போகும் ரயில்’ (1978), ’புதிய வார்ப்புகள்’ (1979), ’நிறம் மாறாத பூக்கள்’ (1979), ’கல்லுக்குள் ஈரம்’ (1980), ’நிழல்கள்’(1980), ’டிக் டிக் டிக்’ (1981), ’அலைகள் ஓய்வதில்லை’ (1981) என இரண்டு ராஜாக்களும் ஹிட் அடித்துக்கொண்டே இருந்தனர். அந்த வெற்றிக் கூட்டணி, ஏராளமான படங்களில் தொடர்ந்தது. இளையராஜாவோடு தொடர்ச்சியாகப் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, 'கிழக்கு சீமையிலே' படத்தின் இசைக்காக ஏ.ஆர்.ரஹ்மானிடம் பாரதிராஜா சென்றதுதான் அவர்களிடையே மனஸ்தாபம் ஏற்படக் காரணம் என்கிறார்கள் இருவருக்கும் நெருக்கமானவர்கள்.
மற்றபடி இருவருமே இதுவரை சண்டை போட்டதே இல்லை என்கிறார்கள். ஆனால், ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ளாமல் மட்டுமே இருந்துள்ளனர்.
சமீபத்தில், இளையராஜா - பிரசாத் லேப் இரண்டு தரப்புக்கும் பிரச்சினை உண்டானது. இதனால் பெரும் மனக்கஷ்டத்துக்கு ஆளானார் இளையராஜா. இந்தப் பிரச்சினையின்போது இளையராஜாவிடம் பல்வேறு திரையுலகினரும் பேசினர். அப்போதுதான் பாரதிராஜாவும் இளையராஜாவிடம் பேசியுள்ளார். இளையராஜாவுக்கு ஆதரவாகக் களமிறங்கி, பிரசாத் லேப் தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பிரசாத் லேப் பிரச்சினை தொடர்பாக இளையராஜா - பாரதிராஜா இருவருமே பலமுறை தொலைபேசியில் பேசியுள்ளனர். ஆனால், நேரில் சந்தித்துக் கொள்ளவே இல்லை. பிரசாத் லேப் பிரச்சினையால் மிகவும் மனக்கஷ்டத்தில் இருந்த இளையராஜா, தேனியில் உள்ள தன் தோட்டத்தில் ஓய்வெடுத்து வருகிறார். இந்தத் தருணத்தில்தான் பாரதிராஜாவும் தன் சொந்த ஊருக்குச் சென்றுள்ளார்.
அப்போது இளையராஜா இருப்பதை அறிந்து, இருவரும் நேரில் சந்தித்து தங்களுடைய நட்பைப் புதுப்பித்துக் கொண்டுள்ளனர். சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. இதுகுறித்து பாரதிராஜா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
> இன்னும் ஓரிரு நாட்களில் சென்னை திரும்பவுள்ளார் பாரதிராஜா. பலரும் அவரிடம் இளையராஜாவுடான சந்திப்பு குறித்து கேட்டு வருவதால், சென்னை வந்தவுடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்து இதுகுறித்து விளக்கம் அளிக்கத் திட்டமிட்டுள்ளார். இதில் இளையராஜா - பாரதிராஜா ஒன்றாகக் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

கருத்துகள் இல்லை: