சனி, 2 நவம்பர், 2019

பாஜகவின் 6 ஆண்டுகளில் வேலையிழந்தோர் எண்ணிக்கை 90 லட்சம்! இது தொடரும்!

கடந்த 6 ஆண்டுகளில் வேலையிழந்தோர் எண்ணிக்கை 90 லட்சம்!மின்னம்பலம் : இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் வேலை இழந்தோரின் எண்ணிக்கை 90 லட்சத்தை எட்டியுள்ளதாக புதிய ஆய்வொன்று கண்டறிந்துள்ளது.
அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் நிலையான வேலைவாய்ப்பு மையம், சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வறிக்கையில், 2011-12 முதல் 2017-18 வரை நாட்டின் மொத்த வேலைவாய்ப்பில் ஏற்பட்டுள்ள மிக மோசமான வீழ்ச்சியை சுட்டிக்காட்டுகிறது. சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி கே. பரிதா ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு, இந்திய வரலாற்றில் முதல் முறையாக இந்த 6 ஆண்டுகளுக்கு இடையில் மட்டும் வேலையிழந்தோர் எண்ணிக்கை 90 லட்சமாக அதிகரித்துள்ளது என தெரிவித்திருக்கிறது.
மொத்த வேலைவாய்ப்பு குறைந்து வருவதாகவும், வேலையில்லாத இளைஞர்களின் இருப்பு மிகப்பெரும் அளவில் அதிகரித்திருப்பதாகவும் இந்த ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. மேலும், அரசு மற்றும் தனியார் வேலைகளில் ஒப்பந்தமயமாக்கல் அதிகரிக்கும் போக்கையும் இந்த ஆய்வு காட்டுகிறது.
2011-12 மற்றும் 2017-18 ஆம் ஆண்டுகளில் மொத்த வேலைவாய்ப்பு 90 லட்சமாக குறைந்துள்ளது, 2011-12 முதல் 2017-18 வரை ஒவ்வொரு ஆண்டும் 26 லட்சமாக வேலையிழப்பு ஏற்பட்டுள்ளன என்று இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.

வழக்கமான மற்றும் முறையான வேலைவாய்ப்பின் பங்கு ஒட்டுமொத்தமாக ஓரளவு அதிகரித்த போதிலும், பெரும்பாலான வேலைகள் இன்னும் ஒழுங்கமைக்கப்படாத மற்றும் தனியார் துறைகளின் மைக்ரோ மற்றும் சிறிய பிரிவுகளால் உருவாக்கப்படுகின்றன. 2017-18 ஆம் ஆண்டில் அரசு சாரா வேலைவாய்ப்புகளில் 68 சதவீதம் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. முறைசாரா வேலைகளின் பங்கு பொதுத்துறையிலும் அதிகரித்துள்ளது, இது ஒழுங்கமைக்கப்படாத அரசு வேலைகள் இல்லாததைக் குறிக்கிறது.
2011-12 மற்றும் 2017-18 ஆம் ஆண்டுகளில் வேளாண் துறை மட்டும் மொத்தம் சுமார் 27 லட்சம் என்ற அளவில் வேலைவாய்ப்பில் சரிவை பதிவு செய்துள்ளது. விவசாய மற்றும் அதனுடன் தொடர்புடைய துறையில் வேலைவாய்ப்பு 49 முதல் 44 சதவீதம் வரை குறைந்துள்ளது.
உற்பத்தித் துறை 12.6 முதல் 12.1 சதவீதம் வரை குறைந்துள்ளது. உண்மையில், உற்பத்தி வேலைகள் இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக வீழ்ச்சியடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டுமானத் துறையிலும் மந்தநிலை ஏற்பட்டுள்ளது. 2004-05 முதல் 2011-12 வரை ஒவ்வொரு ஆண்டும் சுமார் 40 லட்சம் வேலைகளை உருவாக்கிய உற்பத்தி அல்லாத வேலைகள் (பெரும்பாலும் கட்டுமானம்), 2011-12 மற்றும் 2017-18 ஆம் ஆண்டுகளில் ஆண்டுக்கு சுமார் 6 லட்சம் வேலைவாய்ப்புகளை மட்டுமே உருவாக்கியது.
தொடர்ச்சியான வேலை வளர்ச்சியைக் கண்ட ஒரே துறை சேவைத் துறை மட்டுமே. அதாவது ஆண்டுக்கு 30 லட்சம் என்ற அளவில். 2011-12 மற்றும் 2017-18 ஆம் ஆண்டுகளில் இந்தத் துறையில் வழக்கமான சம்பளத் தொழிலாளர்கள் எண்ணிக்கை 1 கோடியே 73 லட்சம் அளவிற்கு உயர்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இந்த துறையில் வேலைகளின் தரம் பெரும்பாலும் மோசமாக உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆய்வு முடிவுகள் தெரிவிப்பது என்ன?
ஆய்வு நடத்திய பேராசிரியர்கள், இது குறித்து கூறுகையில், “உற்பத்தி வேலைவாய்ப்பு வீழ்ச்சியடைவது மற்றும் கட்டுமான வேலைவாய்ப்பு வளர்ச்சி குறைந்திருப்பது பொருளாதாரத்திற்கு ஒரு கெட்ட செய்தியாகும். இது பத்தாண்டுகளுக்கு முன்னர், குறைந்த நடுத்தர வருமான நிலைக்கு முன்னேறியது. வருமான வளர்ச்சியைத் தக்கவைக்கவும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், வறுமையைக் குறைக்கவும், உற்பத்தி மற்றும் கட்டுமானத்தில் வேலை வாய்ப்புகள் (இடைக்காலத் துறை என்றாலும்) அவசியம். ஏனெனில் இது கட்டமைப்பு மாற்றம் செயல்முறையைத் தக்கவைத்துக்கொள்வது மட்டுமல்லாமல், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியை நீண்ட காலத்திற்குத் தக்கவைக்கும்” எனக் கூறினர்.

கருத்துகள் இல்லை: