புதன், 30 அக்டோபர், 2019

இன்று முதல் எண்களைச் தமிழில் சொல்லுங்கள்.

தமிழை அழிப்பதற்கு நாம் நம்மையறியாமல் ஓரிடத்தில் தொடர்ந்து துணை போய்க் கொண்டிருக்கிறோம்.
எண்களைத் தமிழில் சொல்லும் பழக்கத்தை நாம் கைவிட்டதுதான் அது.
கடையொன்றில் என்னிடம் கைப்பேசி எண் கேட்ட பெண்ணிடம் “தொண்ணூற்று நான்கு, நாற்பத்து மூன்று....” என்று தமிழில் சொல்லத் தொடங்கினேன்.
அந்தப் பெண்ணுக்கு எழுதவே வரவில்லை. தவறிழைத்தபடியே மூன்று முறைகள் எழுதினார். கடைசியில் எப்படியோ எழுதி முடித்தார்.
எண்ணிப் பார்த்தால் நம் அனைவர்க்கும் எண்களைத் தமிழில் சொல்வது மறந்தே போய்விட்டது.
நேரத்தைச் சொன்னால் ஆங்கிலத்தில்தான் சொல்கிறோம். மதிப்பெண்களை ஆங்கிலத்தில் சொல்கிறோம்.
தமிழ் அறிவிப்புகளிலும் ஆங்கிலக் கலப்பு. பண்பலை வரிசையில், தொலைக்காட்சி அறிவிப்புகளில் எங்கும் எண்களைக் குறிக்க ஆங்கிலச் சொற்கள்.
ஈவிரக்கமில்லாமல் எல்லாவிடங்களிலும் எண்களை ஆங்கிலத்திலேயே சொல்கிறோம். நாம் மொழியுணர்ச்சி மரத்தவர்களாய் அதைக் கேட்டு ஏற்றுக்கொண்டு நாமும் அவ்வாறே கூறிப் பழகிவிட்டோம்.
“நைன் ஓ கிளாக் கிளம்பி டென் தர்டிக்கு அங்க வந்துடறேன்”
“இன்னிக்கு ட்ரெயின் பார்ட்டி மினிட்ஸ் லேட்டாம்”
“டெய்லி ஒன் அவர் வாக்கிங் போனா எல்லாம் சரியாயிடும்”
”டுவெல்வ் பி இன்னும் வரல..”
“சிக்ஸ்த் கவுண்டர்ல போய் நில்லுங்க...”

“செகண்ட் டைம் இப்படிப் பண்றே...”
“என் நெம்பர் நைன் டூ த்ரீ பைவ் த்ரீ சீரோ.......”
“நீங்க எனக்கு டென் ருபீஸ் சேஞ்ச் தரணும்”
இதனால் என்னாகிறது ? எண்களைத் தமிழில் சொல்லும் நம் நினைவுப்புலம் மட்கி நாசமாகப் போய்விட்டது.
தமிழின் அருஞ்சொற்களை மறப்பது வேறு. தமிழில் எண்களைச் சொல்வதை மறப்பது வேறு. எண்களைத் தமிழில் சொல்வது முதல் அடிப்படை.
பள்ளி முதல் அரசு அலுவலகங்கள் வரை, படித்தவன் முதல் பாமரன்வரை எல்லாருமே எண்களை ஆங்கிலத்தில் சொல்லிக்கொண்டு திரிகிறோம்.
சென்ற தலைமுறையினரைத் தவிர இக்காலத்தினர் யாருமே தமிழில் எண்களைக் கூறுவதே இல்லை.
இதுதான் மிகப்பெரிய சீரழிவு. டென் ரூபீஸ் என்பதற்குப் பதிலாக பத்து ரூவா என்று சொன்னால் அழகு குன்றிவிடப்போவதில்லை. “ஒன்பது நாலு நாலு....” என்று கைப்பேசி எண்ணைச் சொன்னால் கேடு விளையப்போவதில்லை.
ஆனால், நாம் ஏன் அப்படிச் செய்வதில்லை ?
நம் மொழியை நாமே அழிக்கும் மூடக்கூட்டமாய் மாறித் திரிகிறோம்.
அருள்கூர்ந்து தமிழில் எண்களைச் சொல்லுங்கள். தமிழில் எண்களைச் சொல்ல வெட்கப்படாதீர்கள்.
எதிராளிக்குத் தமிழ் எண்கள் தெரியவில்லை என்றாலும் பிடிவாதமாய்ச் சொல்லுங்கள்.
உங்களால் தமிழுக்கு ஏதேனும் செய்ய இயலுமென்றால், தூய தமிழிலெல்லாம் பேச வேண்டா,
இன்று முதல் தமிழில் எண்களைச் சொல்லுங்கள்.
- கவிஞர் மகுடேசுவரன்

கருத்துகள் இல்லை: