ஞாயிறு, 14 ஜூலை, 2019

திராவிடமும்.. தலித்தியமும் பார்ப்பனியத்துடன்... சமரசமா? சரணாகதியா?

LRJ : உள் டப்பிக்கு வந்த ஒரு கேள்வி: திராவிடர் இயக்கமும் கட்சிகளும் அதன் தலைவர்களும் கூடத்தான் பிராமணர்களை ஆதரித்தனர்; நட்பு பாராட்டினர்;
தம் பக்கத்தில் வைத்துக்கொண்டனர்; பிராமணீயத்தோடு அவ்வப்போது சமரசமும் செய்துகொண்டனர். அதையெல்லாம் சகித்துக்கொண்ட திராவிடர் இயக்க ஆதரவாளர்கள் தலித் தலைவர்களும் தலித் இயக்கங்களும் செய்தால் அவர்களை மட்டும் விமர்சிப்பது ஏன்?
அதற்கான பதில்: திராவிடர் இயக்கம் நீங்கள் சொன்ன அனைத்தையும் செய்தது. அதன் ஆதரவாளர்கள் அதை சகித்துக்கொண்டதும் உண்மை, அவர்களில் சிலர் அதை அவ்வப்போது எதிர்த்திருந்தாலும் விமர்சித்திருந்தாலும். ஆனால் நீதிக்கட்சிக்காலம் துவங்கி கலைஞர் தலைமை வரை இத்தகைய “சமரசங்கள்” ஒவ்வொன்றிலுமே திராவிடர் இயக்கத்தின் அதன் கட்சிகளின் அதன் தலைவர்களின் கையே மேல் கையாக இருந்ததே தவிர ஒருநாளும் பிராமணர்களின் அல்லது பிராமணீயத்தின் கைகள் மேல் கையாக இருந்ததிவில்லை. அதாவது திராவிடம் ஆணையிடும் இடத்திலும் பிராமணரும் பிராமணீயமும் அதை ஏற்று நிறைவேற்றும் இடத்திலும் இருந்தன. தலித்தியமோ தலித்திய தலைவர்களோ தமிழ்நாட்டில் அந்த ஆணையிடும் இடத்தில் இருக்கிறார்களா? என்பதே இதில் அடிப்படை கேள்வி. இல்லை என்பதே கசப்பான பதில்.
இதை எளிமைப்படுத்தி சொல்வதானால் ஜெயலலிதா காலத்து அதிமுகவுக்கு பாஜகவுடன் இருந்த உறவுக்கும் அதே அதிமுக எடப்பாடி தலைமைக்கு வந்தபின் பாஜகவுடன் இருக்கும் உறவுக்கும் இருக்கும் அடிப்படை வேறுபாடு என்னவோ அதுவே திராவிட, தலித், பிராமண உறவு/சமரசங்களுக்கும் பொருந்தும்.

நீங்கள் யாரோடும் சமரசம் செய்யலாம். அதில் தவறில்லை. அதில் நிர்ணயிக்கும் சக்தியாக நீங்கள் நீடிக்கும்வரை. மாறாக நிர்ணயிக்கும் உரிமையும் முடிவெடுக்கும் வல்லமையும் உங்கள் கையில் இல்லாத எந்த உறவிலும் எந்த சமரசத்திலும் நீங்கள் அடுத்தவர் கை ஆயுதமாக மட்டுமே இருக்க முடியும்.
நீங்கள் ஆயுதம் ஏந்தும் கையாக இருக்கிறீர்களா? அடுத்தவர் கை ஆயுதமாக இருக்கிறீர்களா? என்பதே அடிப்படை வித்தியாசம்.
பிகு: திராவிடர் இயக்கமோ, கட்சிகளோ, தலைவர்களோ தவறே செய்யாதவர்கள் என்பதல்ல என் வாதம். அவற்றின் சாதகமான சமூக பயன்பாட்டை/பங்களிப்பை கணக்கில் கொண்டால் அவர்களின் சறுக்கல்கள்/தவறுகள்/வரலாற்றுப்பிழைகளால் ஏற்பட்ட எதிர்மறை பாதிப்புகள் குறைவு என்பதே சொல்லவந்த கருத்து.

கருத்துகள் இல்லை: