வெள்ளி, 19 ஜூலை, 2019

கார்த்திகேய சிவசேனாதிபதி :8000 வருடங்களாக பேணப்பட்டு வந்த மாட்டு இனங்களை அழிக்கும் .. .TAMILNADU BOVINE BREEDING ACT 2019".

Karthikeya Sivasenapathy : தமிழக அரசாங்கம், குறிப்பாகக் கால்நடைத் துறை அமைச்சகம், மாண்புமிகு கால்நடைத் துறை அமைச்சர் திரு.
உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணன் அவர்கள் ஒரு புதிய சட்டத்தினை கொண்டு வருவதாக, இன்று ஆங்கில பத்திரிகை "THE HINDU " தெரிவித்து உள்ளார்.
அந்த சட்டத்தின் பெயர் "TAMILNADU BOVINE BREEDING ACT 2019".
BOVINE - மாடு, எருமை, போன்றவற்றைக் குறிக்கக் கூடிய ஆங்கில சொல்.
1 . எதற்காக இப்படி ஒரு சட்டத்தை அரசு கொண்டு வருகின்றது ?
2 . அந்த சட்டத்தில் குறிப்பாக "ARTIFICIAL INSEMINATION " குறித்து நிறையச் சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதற்காக தனியே ஒரு அமைப்பு உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. எதற்காகப் புதிதாக ஒரு அமைப்பு ??
ஏற்கனவே தமிழகத்தில் கால்நடைத் துறை சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது. அந்த கால்நடைத் துறை கீழ் இந்த சட்டம் அமல்படுத்தப்படலாம் அல்லவா ? .
இந்த சட்டத்தின் முக்கிய அம்சங்கள்,
1 . வெளிநாட்டு மாட்டு இனங்கள் (Holstein-Friesian Jersey போன்ற மாடுகள்) வைத்து இருப்பவர் யாரும் காளைகள் வைத்து இருக்கக் கூடாது.
விவசாயிகள் பூச்சி காளை வைத்து இருக்கத் தடை செய்யப்பட்டு மாடுகளுக்குச் சினை ஊசி தான் செலுத்தப்பட வேண்டும், என்னும் நிலை உருவாக்கப்படும்.

2. சினை ஊசி,
யார் தயாரிக்க முடியும் ?
எப்படித் தயாரிக்க முடியும் ?
சினை ஊசி தயாரிப்பவர்கள் அரசின் அமைப்பின் கீழ் பதிவு செய்து இருக்க வேண்டும். இவ் அமைப்பு அவர்களை சோதனைகளுக்கு உட்படுத்த முழு அதிகாரம் வழங்கப் படும்,
என்றெல்லாம் சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்கின்றது.
3 . இதன் நோக்கம், ஆயிரக்கணக்கான கோடிகள் அடங்கிய வர்த்தகம் இதில் அடங்கி உள்ளது. தமிழகத்தில் 80 லட்சம் மாடுகள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் வருடம் ஒருமுறை மாடு சினை பிடிக்க 40 ரூபாய் பெற்று அரசு ஊசிகள் தந்து வருகின்றது.
இது தனியார் வசப்படுத்தினால் குறிப்பாகக் காளைகள் பிறக்காத ஊசிகள் இப்பொழுது வந்து உள்ளது. அவற்றினை பிரபலப்படுத்த ஒரே ஒரு தனியார் அமைப்பிற்குக் கொண்டு செல்ல இவ்வேலைகள் நடை பெறுகின்றது.
கூடிய விரைவில் சினை ஊசி 500 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை விற்கக் கூடியதாக மாறும். 80 லட்சம் மாடுகளுக்கு 500 ரூபாய் எனில் கணக்கு வைத்தால் இதில் எவ்வளவு பெரிய வர்த்தகம் அமைந்து உள்ளது என அறிய முடியும்.
அடுத்து,
பாரம்பரிய கால்நடை. அவற்றிலும் பெரும் வில்லங்கத்தை உருவாக்குகின்றனர். 8000 வருட காலமாக இந்த மாட்டு இனங்களைப் பராமரித்து வந்த மக்களிடம் இருந்து இந்த கால்நடைகளைப் பிரித்து எடுப்பதற்கான முயற்சி தான் இது.
பூச்சி காளை வைத்து இருப்பவர்கள், அரசாங்கத்திடம் பூச்சி காளையை / பொலி காளையை அரசாங்கத்தின் புதிதாக அமைக்கக் கூடிய அமைப்பின் கீழ் பதிவு செய்ய வேண்டும் எனக் கூறுகின்றனர்.
எதற்காக இந்த சட்டத் திருத்தங்கள் ?
சிறு குறு விவசாயிகளின் சொத்து கால்நடை. அவர்களின் வாழ்வாதாரங்களைக் கெடுத்து அவர்கள் சொத்தை பிடுங்கி யாருக்குத் தாரை வார்த்து வருகிறீர்கள் என நன்கு அறிவோம்.
இந்த சட்டம் கொண்டு வருவதற்கு முன், விவசாயிகள் அழைத்து (STAKE HOLDER CONSULTATION ) கலந்தாய்வு கூட்டம் நடத்திய பின்னரே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டு இருக்க வேண்டும் .
இந்த சட்டம் ஜனநாயகத்திற்கு, விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு எதிரானது. மீண்டும் மீண்டும் தொடர்ந்து தமிழக மக்கள் மற்றும் குறிப்பாக விவசாயிகளை வஞ்சித்து வருகின்றது அரசாங்கம்.
இதனை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
இது உடனடியாக நிறுத்த படவேண்டிய, திரும்பப் பெற வேண்டிய சட்டம்.
- கார்த்திகேய சிவசேனாபதி
19-07-2019

கருத்துகள் இல்லை: