
vikatan.com - அலாவுதின் ஹுசைன் : மறைந்த இயக்குநர் மகேந்திரன் உடனான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார், தயாரிப்பாளர் தனஞ்செயன்.“பத்து வருட பழக்கத்தில், அவருடன் நெருங்கிப் பழகின, பயணித்த இந்தக் கடைசி நான்கு வருடங்கள் எனக்குக் கிடைத்த பாக்கியம்!” – இயக்குநர் மகேந்திரன் உடனான தன் நட்பையும் அவரின் கடைசி நிமிடங்களையும் நம்மிடம் பகிர்கிறார், தயாரிப்பாளரும் ‘போஃப்டா’ திரைப்படக் கல்லூரியின் நிறுவனருமான தனஞ்செயன். “மார்ச் 5-ம் தேதி, மகேந்திரன் சார் வீட்ல இருந்து எனக்கு போன். ‘சார், ஹாஸ்பிட்டலுக்குப் போக மறுக்கிறார்’னு சொன்னாங்க. ஏற்கெனவே டயாலிஸிஸ் பண்ணாததுனால, அவருக்கு ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகம்னு டாக்டர்கள் சொல்லியிருந்தது, எனக்குப் பயமா இருந்தது. நேரா அவர் வீட்டுக்குப் போனேன்’அடம்பிடிக்காதீங்க சார். ஹெல்த் ரொம்ப முக்கியம்’னு சொல்லி விடாப்பிடியா அவரை மருத்துவமனையில் சேர்த்தோம்.
அவருக்கு ஹாஸ்பிட்டல் சூழல் சுத்தமா பிடிக்கலை. அங்கிருந்து போகணும்னு பிடிவாதமா இருந்தார். உடம்பு தனக்கு ஒத்துழைக்கலைனு அவருக்கு புரிஞ்சிடுச்சு. டயாலிஸிஸ் பண்ணும்போது ஏற்படுற முதுகு வலியை அவரால் தாங்க முடியல, பத்து நாள்களுக்கு முன் பேசும்போது, ‘இயற்கைக்கு மாறா என்ன வாழவெச்சு என்ன சார் பண்ணப்போறீங்க. என்ன விட்ருங்க’ன்னு சொன்னார்.
அவருக்கு என்ன மாதிரி நம்பிக்கைக் கொடுக்கணும்னு தெரியாம நாங்க எல்லாரும் பயந்துபோய் நின்னோம். ‘மக்கள் எல்லாரும் செட்டிலாகிட்டாங்க. நானும் எல்லாத்தையும் பாத்துட்டேன். இப்பவும் சினிமால இருக்கேன். இது போதும்; இதுக்குமேல நான் பண்றதுக்கு என்ன இருக்கு’னு நினைச்சிட்டார். தன் முடிவில் அவர் உறுதியாகவும் இருந்தார்.

அவர் காலத்து சினிமா அனுபவங்களை என்கூட ஷேர் பண்ணுவார். அவருடைய ‘முள்ளும் மலரும்’,’உதிரிப்பூக்கள்’ படங்களைத் தேசிய விருதுக்கு அனுப்பாதது அவருக்கு மிகப்பெரிய வருத்தம். ஆனாலும் ‘முள்ளும் மலரும்’ படத்துக்கு மாநில விருதுகள் கிடைத்தன.
அதுவரை வசனகர்த்தா, திரைக்கதை ஆசிரியரா இருந்த மகேந்திரன், இயக்குநராகப்போகிறார். அவருக்காக ஒளிப்பதிவு செய்ய பாலுமகேந்திரா, இசையமைக்க இளையராஜா என டீம் அமைத்துக்கொடுத்தார் கமல். ஆரம்பத்தில், அதில் கமல் நடிக்கவேண்டியதாகவும் இருந்தது. பிறகு அது தள்ளிக்கொண்டுபோக, கமல் ரஜினி சாரையும் நாயகனாக ஃபிக்ஸ் பண்ணிக்கொடுத்தார். ஷூட்டிங்கும் நடந்தது.
பிறகு படத்தைப் பார்த்த தயாரிப்பாளர், அந்தப் படத்தின்மீது நம்பிக்கை இல்லாமல், ‘செந்தாழம்பூவில்’ பாடலை படப்பதிவு செய்வதற்கு பணம் தரவில்லை. பிறகு, கமல் அதன் முழுச் செலவையும் ஏற்று, அந்தப் பாடல் படப்பிடிப்புக்கு உதவிசெய்தார். இந்த விஷயங்கள், மகேந்திரன் சார் கமல் மீது வைத்திருந்த மரியாதையைக் கூட்டியது. ஆனால், கமலுடன் சேர்ந்து வேலை செய்ய முடியவில்லையே என மகேந்திரன் சார் பலமுறை வருத்தப்பட்டிருக்கிறார்.
‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படம் மூன்று தேசிய விருதுகள் வாங்கியது. அப்போது, எம்.ஜி,ஆர் தமிழக முதல்வர். தேசிய விருது வழங்கும் நிகழ்ச்சி நடக்கும்போது, எம்.ஜி.ஆர் டெல்லியில் இருந்திருக்கிறார். இந்தத் தகவலை அறிந்த மகேந்திரன், தமிழ்நாடு இல்லம் போய் எம்.ஜி.ஆரை சந்தித்து வாழ்த்துகளை வாங்கியிருக்கிறார். யாரால் சினிமாவுக்குள் அழைத்து வரப்பட்டோமோ, அவரை மறக்காமல் சந்தித்து வாழ்த்து வாங்கியபோது, ‘நீங்க ஜெயிப்பீங்கன்னு தெரியும் மகேந்திரன்’ என்று கூறியதாகக் கூறியிருக்கிறார்.
அவர், தனக்குத் தெரிஞ்சதை மாணவர்களுக்குத் தொடர்ந்து சொல்லிக்கொடுத்துக்கொண்டே இருந்தார். அவர் சொன்ன விஷயங்கள் சினிமா பண்ணணும்னு நினைக்கிற எல்லாருக்கும் ஒரு பாடமா இருக்கும். அவர் வகுப்பில் இருக்கும் பசங்களை, மகேந்திரன் சார் எல்லா விதமான படங்களையும் பார்க்கச் சொல்வார். ‘குப்பை படமா இருந்தாலும் அதில் ஒரு பாடம் இருக்கும்’னு சொல்வார். மேலும் எழுத்துக்கான முக்கியத்துவத்தை சொல்லிக்கிட்டே இருப்பார்.
‘கதை, திரைக்கதை, வசனத்தை நல்லா எழுதிட்டா டைரக்ஷன் எளிதா இருக்கும். 70 சதவிகிதம் எழுத்தும் 30 சதவிகிதம் இயக்கமும் சேர்ந்ததுதான் இயக்குநர்’ என்பார். அவருக்கு டைரக்ஷனுக்கென தனியா ஒரு ஸ்கூல் உருவக்கணும்னு ஆசை. நாங்க அவரை போஃப்டாவுக்கு அழைக்கும்போது, அமைதியான வகுப்பறை, பெரிய லைப்ரரி, சிலபஸ்… என்று தன் கைப்பட எழுதிக்கொடுத்தார். ஒரு சினிமா ஸ்கூலுக்கு அதுவே பெரிய கைடு.
பசங்க படிக்கிறதுக்கு சூழல் ரொம்ப முக்கியம்னு கருதுனார். ‘பசங்க உக்காந்து பேச பெரிய கார்டன் வேணும். அது முடியாத பட்சத்தில் கேன்டீன் இருக்கணும்னு சொன்னார். புனே ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டுக்குப் பிறகு பெரிய சினிமா லைப்ரரி போஃப்டாவில் இருக்கக் காரணமானவர் அவர்தான். அவர் இருக்கணும்னு சொன்ன அந்த கேன்டீன்லதான் ராம், நாசர் பாடம் நடத்துறாங்க.
இயக்கம்,திரைக்கதை பயிற்சிக்கு வர்றவங்களை சிறுகதை படிக்க வேண்டும் என்பதை வழக்கமாக்கினார். அதன்பின், நாவல்களை அறிமுகப்படுத்துவார். கதாப்பாத்திரத்தைப் புரிஞ்சிக்கிட்டு எழுதுறது என்பது உட்பட, பல விஷயங்களைக் கற்றுக்கொடுத்தார். ஃபிலிம் அப்ரிசியேஷனை ஒரு கலையா பசங்களுக்கு எடுத்துச் சொன்னார்.
சத்யஜித் ரே, ஹிட்ச்காக் படங்களோட தீவிர ரசிகர். ஹிட்ச்காக்கின் ‘தி பேர்ட்ஸ்’ படத்தின் ஒவ்வொரு காட்சியையும் சின்னப்பிள்ளை மாதிரி நின்னுக்கிட்டே விவரிப்பார். அவர் கிளாஸ் வராத நாள்களில் கண்டிப்பா இரண்டு படம் பார்த்திருப்பார். அதை ஃபேஸ்புக்கில் பதிவும் செய்வார்.
என்னைவிட, அவருடன் அதிக நேரம் பழகியது, அவருடன் படிச்ச பசங்கதான் அவங்க எல்லாருக்குள்ளையும் ஆழமா கலந்திருக்கிறார் மகேந்திரன்” என்கிறார், தனஞ்செயன்.
vikatan.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக