செவ்வாய், 2 ஏப்ரல், 2019

அமைச்சர் வேலுமணியின் காண்ட்ராக்டர் வீட்டில் 15 கோடி ... வீடியோ


மின்னம்பலம் : திமுகவினர் வீட்டில் நடந்த ரெய்டு வீடியோ மட்டும் வெளியாகிற நிலையில், அமைச்சர் வேலுமணிக்கு வேண்டியவரான காண்ட்ராக்டர் சபேசன் வீட்டில் 15 கோடி கைப்பற்றப்பட்ட வீடியோ ஏன் வெளியாகவில்லை என்று தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி கேட்டார். அதன்பின் அந்த வீடியோவையும் நேற்று வருமான வரித் துறையினர் கசிய விட்டனர்.
இந்த நிலையில் வேலூரில் துரைமுருகன் வகையறாக்களை வைத்து நடத்தப்பட்ட ரெய்டு பரபரப்பைக் கிளப்பிய நிலையில் இன்னும் ஒரு ரெய்டு சத்தமில்லாமல் நடத்தி முடிக்கப்பட்டு, மூடப்பட்டுவிட்டது என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக வேலூர் மாவட்டக் காவல் துறையில் இருக்கும் நேர்மையான அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்தபோது அந்தத் தகவல்கள் கிடைத்தன.
“சிமென்ட் குடோன், வீடு, கல்லூரி என்று மீடியாக்களை அலையவிட்ட அதேநேரம் வேலூரின் முக்கியமான ஒரு மூன்றெழுத்து கல்வி நிறுவனத்தில் சுமார் 200 கோடி ரூபாய் வரை ஆளுங்கட்சியினர் பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்ற தகவல் வருமான வரித் துறையினருக்குக் கிடைத்தது.

அவர்களும் ஒரு டீமோடு அங்கே சென்றனர். அந்த கல்விக் குழுமத்தில் நடந்த சோதனையில் 15 கோடி ரூபாய் அங்கே கண்டறியப்பட்டது. ஆனால், அதற்குள் வருமான வரித் துறை டீமுக்கு சென்ற உத்தரவு என்னவென்றால், ‘பார்த்துவிட்டுப் பேசாமல் திரும்புங்கள்’ என்பதுதான். அதனால் கண்ணும் கண்ணும் வைத்த மாதிரி பார்த்துவிட்டு, காதும் காதும் வைத்த மாதிரி சத்தமிடாமல் திரும்பிவிட்டது வருமான வரித் துறை” என்கிறார்கள்.
ஊருக்குத் தெரிந்து ஒரு ரெய்டு என்றால் யாருக்கும் தெரியாமல் ஊற்றி மூடப்பட்ட ஒரு ரெய்டு இது!

கருத்துகள் இல்லை: