செவ்வாய், 2 ஏப்ரல், 2019

ரஃபேல்' நூல் பறிமுதலில் .. நாங்கள் பறிமுதல் செய்ய உத்தரவிடவில்லை: தேர்தல் அதிகாரி பேட்டி

THE HINDU TAMIL : பாரதி புத்தகாலயம் சார்பில் 'நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்' என்கிற நூல் வெளியிடப்பட உள்ள நிலையில் அதற்குத் தடை விதித்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்ய தாங்கள் அதுகுறித்து எந்த உத்தரவும் இடவில்லை என தமிழக தேர்தல் அதிகாரி மறுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாரதி புத்தகாலயம் மூலம் விஜயன் என்பவர் 'நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்' இன்று வெளியிடப்படுவதாக இருந்தது. நூலை இந்து குழுமத் தலைவர் என்.ராம் வெளியிடுவதாக இருந்தது. கேரள சமாஜத்தில் புத்தகம் வெளியிடப்படுவதாக இருந்த நிலையில் ஆயிரம் விளக்கு, தேர்தல் பறக்கும்படை அதிகாரி எஸ்.ரமேஷ் பெயரில் பாரதி புத்தகாலய மேலாளர் நாகராஜனுக்கு திடீரென ஒரு கடிதம் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் புத்தகம் வெளியிடுவது குறித்து விசாரணை நடைபெற்றது. தேர்தல் விதிமீறல் உள்ளதால் புத்தகம் வெளியிடத் தடை விதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. மீறும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததால் புத்தக வெளியீட்டுவிழாவை தங்கள் புத்தக நிறுவனத்தில் நடத்திக்கொள்வது என முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில் திடீரென ஆயிரம் விளக்கு தேர்தல் பறக்கும் படையினர் போலீஸார் துணையுடன் புத்தக நிறுவனத்தில் நுழைந்து வெளியீட்டிற்காக வைக்கப்பட்டிருந்த 142 புத்தகங்களைப் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர். அதற்கான ரசீதும் வழங்கவில்லை.
இது தொடர்பாக பாரதி புத்தகாலய மேலாளர் நாகராஜன் கூறுகையில், ''தேர்தல் நேரத்தில் புத்தகங்கள் வெளியிடுவது வழக்கமான நடைமுறைதான். இதற்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை. நாங்கள் எந்தக் கட்சியையும் ஆதரிக்கவில்லை. அதே நேரம் இதுகுறித்து தமிழக தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்க உள்ளோம். அங்கும் நீதி கிடைக்காவிட்டால் நீதிமன்றம்மூலம் நடவடிக்கை எடுப்போம்'' என்றார்.
இந்த நடவடிக்கையை இந்து குழுமத் தலைவர் என்.ராம் கண்டித்தார். இது ஜனநாயக விரோத, சட்டவிரோத நடவடிக்கை. கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரத்துக்கு எதிரான செயல் என அவர் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சென்னை தேர்தல் அதிகாரிகளின் நடவடிக்கை குறித்து செய்தியாளர்கள் தமிழகத் தேர்தல் அதிகாரியிடம் கேள்வி எழுப்பினர்.
அது குறித்து பதிலளித்த தமிழக தேர்தல் அதிகாரி, புத்தகங்களைப் பறிமுதல் செய்வது சம்பந்தமாக இந்திய தேர்தல் ஆணையமோ, தமிழக தேர்தல் அதிகாரியோ எந்தவித உத்தரவும் இடவில்லை.  இதுசம்பந்தமாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் உடனடியாக அறிக்கை கேட்டுள்ளேன் என்று தெரிவித்தார்.
இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட புத்தகங்களை திரும்ப அளிக்க மாவட்ட தேர்தல் அலுவலர்கள் முன்வந்தனர். இந்நிலையில் திட்டமிட்டபடி இன்று புத்தகம் வெளியிடப்படும் என புத்தக நிறுவனத்தார் தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை: