வெள்ளி, 29 மார்ச், 2019

சரவணபவன் ராஜகோபால் அண்ணாச்சிக்கு ஆயுள் தண்டனை .. உச்ச நீதிமன்றம் உறுதி .. வீடியோ


தினத்தந்தி :தொண்ணூறுகளின் இறுதியில் துவங்கிய ஒரு கூடா நட்பு 2001ல் கொலையில் முடிகிறது. சரவணபவன் ஓட்டலில் ஜீவஜோதி என்ற பெண் பணிக்குச் சேர ராஜகோபாலுக்கு அவர் மீது ஏதோ ஈர்ப்பு ஏற்பட ராஜகோபால் வாழ்க்கை தடம் மாற தொடங்கியது. ஜீவஜோதியின் அப்பாவும் அதே ஓட்டலில் வேலை பார்த்தவர் என்ற அடிப்படையில் ஜீவஜோதிக்கும் அங்கு வேலை உறுதியானது. ராஜகோபால் ஜோதின் மீது அதீத நம்பிக்கை கொண்டவராக இருக்க, ஜீவஜோதியை திருமணம் செய்தால் வாழ்நாள் முழுக்க தன் செல்வாக்கும், பணபலமும் நிலைத்து மேலும் பெருகும் என்ற நம்பிக்கையை ஒரு ஜோதிடர் சொன்னதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து ஜீவஜோதியை மணம் முடிக்க அவர் முடிவு செய்ததாக அப்போது கூறப்பட்டது. இதற்கு உடன்பட மறுக்கவே ஜீவஜோதியை அன்பாகவும் மற்ற வகைகளிலும் ராஜகோபால் மிரட்டியதாக அப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஒருகட்டத்தில் கணித ஆசிரியரான பிரின்ஸ் சாந்த குமாரை காதலித்து ஜீவஜோதி திருமணம் செய்து வேளச்சேரியில் வசிக்கத் துவங்கினார். திருமணம் முடிந்த நிலையில் தனக்கு ராஜகோபாலால் தொந்தரவுகள் வராது என நினைத்தார் ஜீவஜோதி. ஆனால் ராஜகோபால் தரப்பிலிருந்து நெருக்கடிகள் தொடர்ந்ததாக கூறப்படுகிறது. குடும்ப வாழ்க்கையில் பயணிக்கத் துவங்கிய ஜீவஜோதி இனி தன் வழிக்கு ஒத்துவரமாட்டார் என நினைத்த  ராஜகோபால், அவரது கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை தீர்த்துக்கட்ட தமது உதவியாளர்களுக்கு அறிவுறுத்தியதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2001 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி சாந்தகுமார் காணாமல் போன நிலையில், இதுகுறித்து ஜீவஜோதி தன் கணவரை காணவில்லை என வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார்  அளித்துள்ளார். இந்நிலையில் 5 நாள் கழித்து சாந்தகுமார் சடலமாக கொடைக்கானல் மலைப் பகுதியில் கண்டெடுக்கப்பட ராஜகோபால் உள்பட 9 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த பூந்தமல்லி விரைவு நீதிமன்றம், ராஜகோபால் உள்ளிட்ட 6 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 55 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து கடந்த 2004 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ராஜகோபால் உள்ளிட்டோர் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம்  ராஜகோபால் உள்ளிட்டவர்களின் அபராதத் தொகையை குறைத்ததுடன், தண்டனையை ஆயுள்காலமாக மாற்றி தீர்ப்பளித்தது. மேலும் விரைவு நீதிமன்றம் வழக்கை விசாரித்த விதம் குறித்தும் அதிருப்தியை பதிவு செய்தது. இந்நிலையில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராஜகோபால் உள்ளிட்டவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை: