
கடந்த பத்தாண்டு காலத்திற்கும் மேலாக, படிப்படியாக, அதே சமயத்தில் சீரான வளர்ச்சியை கண்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், ஒருகட்டத்தில் சர்வதேச விமான சேவை வழங்கும் இந்திய நிறுவனங்களில் முதலிடத்தை பிடித்தது.
இந்நிலையில், கடந்த ஆண்டு தனது நிறுவனம் தொடங்கப்பட்டதன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஜெட் ஏர்வேஸ் இன்று செயல்பட முடியாமல் தத்தளித்து கொண்டிருக்கிறது.
கடந்த சில வாரங்களில் மட்டும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஆயிரக்கணக்கான விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டதால், உள்நாடு மட்டுமின்றி பன்னாட்டு விமான பயணிகளும் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
விமான குத்தகை நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய பணத்தை திரட்ட முடியாததால், தான் பயன்படுத்தும் 119 விமானங்களில் மூன்றில் இரண்டு விமானங்களின் செயல்பாட்டை ஜெட் ஏர்வேஸ் நிறுத்தியது.
மேற்கண்ட சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு ஜெட் ஏர்வேஸின் பயணம் முடிந்துவிட்டது என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது.
ஜெட் ஏர்வேஸ் தனியார் விமான நிறுவனமாக இருந்தபோதிலும், அதன் செயல்பாட்டை உறுதிசெய்வதற்கு இந்திய அரசு உரிய நடவடிக்கைளை எடுத்து வருகிறது. பொருளாதார சிக்கலிலிருந்து ஜெட் நிறுவனத்தை மீட்பதற்குரிய திட்டத்தை அளிக்குமாறு மத்திய அரசு பாரத ஸ்டேட் வங்கியிடம் கோரியுள்ளது.
இந்திய மக்களவை தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், சுமார் 23,000 ஊழியர்களை கொண்டுள்ள இந்நிறுவனத்தை சரிவு பாதையிலிருந்து மீட்டெடுப்பதற்கு முயற்சிக்கிறார் இந்திய பிரதமர் நரேந்திர மோதி.
இந்த திட்டத்தை முன்னெடுத்து வரும் நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் ரஜ்னீஷ் குமார், தங்களது மீட்பு திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக கடந்த வியாழக்கிழமை தெரிவித்திருந்தார்.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள் ஒருபுறமிருக்க, அது பலனளிக்காது என்று மற்றொரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
ஏர் இந்தியாவின் முன்னாள் தலைவரான ஜிதேந்தர் பார்கவா, மோசமான பொருளாதார நிலையில் சிக்கியுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீட்பதற்குரிய முதலீட்டாளர்களை கண்டறிவது மிகவும் கடினம் என்று கூறுகிறார்.
“லாபம் கிடைக்காது என்று தெரிந்து, யார் முதலீடு செய்வார்கள்?” என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.
அதாவது, எதிஹாட் நிறுவனத்தை மேலும் ஜெட் நிறுவனத்தில் முதலீடு செய்ய வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தனக்கு ஏற்கனவே இருக்கும் பங்குகளை விற்றுவிட்டு இந்த தொழிலிலிருந்து விடுபட விரும்புவதாக அந்நிறுவனம் கூறிவிட்டது.
இருப்பினும், நீண்டகால அடிப்படையில் பார்க்கும்போது எதிஹாட் நிறுவனத்திற்கு ஜெட் ஏர்வேஸ் இன்னமும் சிறந்த முதலீடாக உள்ளதாக விமானத்துறை வல்லுனரான மகந்தீஷ் சபாரட் கூறுகிறார். அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்து வரும் 2024ஆம் ஆண்டிற்குள் உலகின் மூன்றாவது மிகப் பெரிய விமான போக்குவரத்து சந்தையாக இந்தியா உருவெடுக்கும் என்று கருதப்படும் சூழ்நிலையில், எதிஹாட்டின் முதலீடு அந்நிறுவனத்திற்கு நல்ல அடித்தளத்தை அமைத்து தரும் என்று அவர் கூறுகிறார்.
“உடனடியாக பணம் சார்ந்த பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு, நிறுத்தப்பட்ட விமானங்களை இயக்க தொடங்கினால் ஜெட் நிறுவனத்தின் நிலைமை பழைய நிலையை அடையும். தற்போதைய சூழ்நிலையில், எதிஹாட் நிறுவனம்தான் அதற்கு ஏற்புடையதாக இருக்கும்” என்று அவர் மேலும் கூறினார்.
பிரச்சனைக்கான காரணம் என்ன?
நரேஷ் கோயல் தனது கட்டுப்பாட்டிலிருந்து நிறுவனம் செல்வதை விரும்பவில்லை.
ஜெட் ஏர்வேஸின் வீழ்ச்சி தொடங்கியபோதே எதிஹாட் நிறுவனம் மேலதிக முதலீடுகளை மேற்கொள்வதற்கு தயாராக இருந்ததாகவும், ஆனால் நரேஷ் தனது பதவியிலிருந்து விலகுவதற்கு மறுக்கவே அது பின்வாங்கி விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
![]() |
நரேஷ் கோயல் |
“எந்த சூழ்நிலையிலும் நிறுவனத்தின் கட்டுப்பாட்டை தனது கையில் வைத்திருப்பதற்கு நரேஷ் விரும்புகிறார். இதற்கு முன்னர், இதே போன்று ஜெட் நிறுவனம் பொருளாதார பிரச்சனையில் சிக்கியபோதும், தனது பதவியை காப்பாற்றிக்கொள்வதற்காக கைகூடிய உதவிகளை அவர் புறக்கணித்துவிட்டார்” என்று பெயர் வெளியிட விரும்பாத அந்நிறுவனத்தை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஜெட் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவிலிருந்து நரேசும், அவரது மனைவியும் பதவி விலக வேண்டுமென்று பல்வேறு கடன் வழங்கும் நிறுவனங்களும் வலியுறுத்தி வருவதாக பல்வேறு ஊடக செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தனது பதவியிலிருந்து நரேஷ் விலகினால், ஜெட் நிறுவனத்தின் வீழ்ச்சியை தடுப்பதற்கு பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. ஜெட் நிறுவனத்தில் முதலீடு செய்ய நினைக்கும் அனைத்து நிறுவனங்களும் முழு கட்டுப்பாட்டை தங்களது கையில் வைத்துக்கொண்டு தொழில்ரீதியாக செயல்பட விரும்புகின்றனர்” என்று பார்கவா கூறுகிறார்.
ஜெட் ஏர்வேஸின் எழுச்சியும், ஏர் இந்தியாவின் வீழ்ச்சியும்
இந்தியாவில் தனியார் முதலீடுகளுக்கான கதவுகள் திறக்கப்பட்ட இரண்டாண்டுகளுக்கு பிறகு, அதாவது 1993ஆம் ஆண்டு ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது.அதே நேரத்தில், மேலும் நான்கு நிறுவனங்கள் விமான சேவையில் இறங்கிய நிலையில், ஜெட்டை தவிர்த்து எவராலும் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஆனால், ஒருபுறம் இந்திய விமானத்துறையில் புதிய உயரங்களை தொட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், ஒருகட்டத்தில் அரசுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவையே விஞ்சியது.
இந்நிலையில், ஜெட் நிறுவனத்திற்கு உண்மையான போட்டி, 2000ஆவது ஆண்டின் மத்திய பகுதியில் தொடங்கப்பட்ட குறைந்த விலை விமான சேவை நிறுவனங்களான இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட்டால் ஏற்படுத்தப்பட்டது.
ஜெட் ஏர்வேஸோடு ஒப்பிடுகையில், உணவுகளை வழங்காது, அடிப்படை வசதிகளை மட்டும் அளித்த புதிய விமான சேவை நிறுவனங்கள் மிகவும் குறைந்த விலையில், விமான பயணத்தை பயணத்தை சாத்தியமாக்கியது.
“இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் ஆகியற்றோடு ஒப்பிடுகையில் ஜெட் ஏர்வேஸின் விமானங்களை இயக்குவதற்கான செலவு மிகவும் அதிகமாக இருந்தது. அந்த சூழ்நிலையில் போட்டியை சமாளிக்கும் வகையில் விலையை குறைத்த ஜெட் நிறுவனம் தனது லாபத்தை இழக்க தொடங்கியது” என்று கூறுகிறார் பார்கவா.
மற்ற தனியார் விமான சேவை நிறுவனங்கள் அளித்த போட்டி ஒருபுறமிருக்க, நிலையற்ற கச்சா எண்ணெய் விலை, வீழ்ச்சியை கண்ட சர்வதேச அளவிலான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை ஜெட் நிறுவனத்திற்கு மேலதிக பிரச்சனைகளை ஏற்படுத்தியது. கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து கடுமையான வருவாய் இழப்பை சந்தித்து வரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வங்கிகளிடமிருந்து தொடர்ந்து கடன்களை பெரும் நிலைக்கு தள்ளப்பட்டது.
அதற்கிடைப்பட்ட நேரத்தில், இண்டிகோ நிறுவனம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் சந்தையை தன்பக்கம் இழுக்க தொடங்கியது.
நிலைமை இவ்வாறு சென்றுகொண்டிருக்க, கடந்த ஆண்டு ஜெட் ஏர்வேஸ் மோசமான கட்டத்திலிருந்து படு மோசமான கட்டத்தை அடைந்தது. விமான சேவை துறையில் முக்கிய கூறுகளாக அந்த நாட்டின் பண மதிப்பும், கச்சா எண்ணெய் விலையும் உள்ளது.
இந்நிலையில், கடந்தாண்டு கச்சா எண்ணெய் விலை $80 அடைந்த அதே நேரத்தில், சர்வதேச அளவிலான இந்திய ரூபாயின் மதிப்பு 20 சதவீத சரிவை சந்தித்தது ஜெட்டுக்கு அழிவை ஏற்படுத்த தொடங்கியது.
கடந்த காலத்தை போன்று, சரிவுகளிலிருந்து ஜெட் ஏர்வேஸ் மீண்டு வருமா அல்லது வீழ்ந்து போகுமா என்பது விரைவில் தெரிய வரும்.
bbc
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக