ஞாயிறு, 31 மார்ச், 2019

பிரச்சாரத்துக்கே போக வேண்டாம்: பாஜகவின் ஸ்மார்ட் பிளான்!

டிஜிட்டல் திண்ணை: பிரச்சாரத்துக்கே போக வேண்டாம்: பாஜகவின்  ஸ்மார்ட் பிளான்!மின்னம்பலம் : “தென் மாவட்டங்களில் குறிப்பாக மதுரையில் தொடங்கி கன்னியாகுமரி வரை இருக்கும் பிஜேபியின் ஐ.டி. விங் நிர்வாகிகளுக்கு நேற்று மாலை அழைப்பு போயிருக்கிறது. ‘இன்று காலை அனைவரும் தவறாமல் மதுரையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்’ என்பதுதான் சொல்லப்பட்ட தகவல்.
மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில்தான் கூட்டத்துகான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. டெல்லியிலில் இருந்து முரளிதர் ராவ் இன்று காலை அந்த ஹோட்டலுக்கு வந்தார். அதே ஹோட்டலில் அவர் தங்குவதற்கான ஏற்பாடுகளும் தயாராக இருந்தது. அதே ஹோட்டலில் இருந்த மீட்டிங் ஹாலில்தான் கூட்டம். ஹோட்டல் ஊழியர்கள் கூட யாரும் உள்ளே வர வேண்டாம் என கதவுகள் சாத்தப்பட்டது. நிர்வாகிகளின் அடையாள அட்டையை பார்த்துவிட்டுதான் உள்ளே அனுமதித்து இருக்கிறார்கள்.

கூட்டத்தில் முரளிதர் ராவ் மட்டும்தான் பேசியிருக்கிறார்.
’இந்தியா முழுக்கவே நாம ஒரு ஆபரேஷனை கையில் எடுத்திருக்கிறோம். தமிழ்நாட்டில் அதை செய்யப் போவது நீங்கதான். அதுக்காகத்தான் உங்களை கூப்பிட்டேன். நம்ம கட்சியின் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்யக் கூடிய இடத்தில் இருப்பது நீங்கதான். சோசியல் மீடியாவில்தான் இந்த உலகமே இயங்கிட்டு இருக்கு. அது இல்லாமல் இன்னைக்கு பெரும்பாலும் யாரும் இல்லை. அதனால நம்ம டார்கெட் எலெக்‌ஷன் முடியும் வரை சோசியல் மீடியாதான். அதைத்தான் எப்பவும் பயன்படுத்திட்டு இருக்கோம்.. இப்போ என புதுசா பண்றதுன்னு நீங்க கேட்கலாம். என்ன பண்ணலாம்னு சொல்லத்தான் நான் வந்திருக்கேன்.
உங்க தொகுதியில் நம்ம வேட்பாளர் யாரோ அவங்க பிரச்சாரத்தை நீங்க புரமோட் பண்றது ஒருபக்கம் பண்ணிட்டே இருங்க. இன்னொரு பக்கம் எதிரில் யாரு நிற்கிறாங்களோ அவங்களோட மைனஸ் பாயிண்ட்ஸ் நிறைய இருக்கும். உள்ளூர்காரர்களான உங்களுக்கு நிச்சயம் அதெல்லாம் தெரிஞ்சிருக்கும். அதை வைரலாக்குங்க. திரும்பத் திரும்ப போஸ்ட் பண்ணுங்க. வாட்ஸ் அப்ல ஷேர் பண்ணுங்க. புதுப் புது நெம்பர்ல இருந்து வாட்ஸ் அப் குரூப் உருவாக்குங்க. அதுல உங்க தொகுதியில் இருக்கும் உங்களை தெரிஞ்சவங்களை எல்லாம் உள்ளே கொண்டு வாங்க. அந்த குரூப்பில் எதிரணியில் நிற்கும் வேட்பாளரின் மைனஸ்களை பட்டியல் போட்டுகிட்டே இருங்க. ஒருதடவை போட்டதுடன் அமைதியாகிடாதீங்க. அது போய் சேராது. திரும்பத் திரும்ப போட்டுகிட்டே இருக்கணும். இப்படி ஒருநாளைக்கு ஒவ்வொருத்தரும் குறைஞ்சது 20 மெசேஜ் போஸ்ட் பண்ணணும். அப்போ எந்த குரூப்ல பார்த்தாலும் எதிரணியில் இருக்கும் வேட்பாளரின் மைனஸ்தான் வெளியே தெரியவரும். கடைசி 4 நாட்கள் மட்டும் நம்ம வேட்பாளரின் ப்ளஸ்களை எல்லாம் அதேபோல வைரலாக்கணும். அதுவரைக்கும் எதிராளியின் மைனஸ் எல்லாம் மக்கள் மனதில் பதிஞ்சு இருக்கணும். கடைசியாக நாம அனுப்பும் ப்ளஸ் பாயிண்ட்ஸ் கைகொடுக்கும்.

குறிப்பாக தேர்தல் பிரச்சாரத்துக்கு கடைசி நாளில் நம் வேட்பாளரின் ப்ளஸ்களை எல்லாம் அவர்களோடு ஒப்பிட்டு 30 நிமிடத்துக்கு ஒரு மெசேஜ் போஸ்ட் பண்ணிட்டே இருக்கணும். சோசியல் மீடியாவில் அந்த நாட்களில் என்ன பார்த்தாலும் நம்ம வேட்பாளர் முகம்தான் இருக்கணும்.
இதைமட்டும் நீங்க செய்யுங்க. நீங்க மட்டும் செய்யணும் என்பது இல்லை. உங்க உறவினர்கள், நண்பர்கள் என எல்லோரையும் இதுக்குள் இறக்கிவிடுங்க. அதுக்கு அவங்களுக்கு எதுவும் செய்யணும்னாலும் செய்வதற்கு ரெடியாக இருக்கோம். நீங்க வேட்பாளர்கள் கூட யாரும் பிரச்சாரத்துக்கு போகணும் என எந்த அவசியமும் இல்லை. அப்படி யாரும் வரணும்னு சொன்னால், ‘முரளி பிரச்சாரத்துக்கு போக வேண்டாம்னு சொல்லிட்டாரு’ என சொல்லுங்க. நாம இப்படி பண்றது என்பது நம்மோடு இருக்கட்டும். அதனால்தான் உங்களை மட்டும் வரச் சொன்னேன். செய்வீங்களா?’ என கையை மேலே உயர்த்தி கேட்டிருக்கிறார்.
ஒட்டுமொத்த கூட்டமும், ‘செய்வோம் ஜி’ என பதில் கொடுக்க. ‘இதுல எந்த சந்தேகம் இருந்தாலும் நீங்க என்
உதவியாளரிடம் சொல்லலாம். அவர் என்னுடைய கவனத்துக்கு கொண்டு வருவாரு..’ என்று பேசி முடித்திருக்கிறார். “ என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ். அதற்கு லைக் போட்டுவிட்டு ஆஃப்லைனில் போனது வாட்ஸ் அப்.
இதை ஷேர் செய்துகொண்ட ஃபேஸ்புக், “சுமார் எட்டுமாதங்களுக்கு முன்னால் பாஜக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘அடுத்த தேர்தல் செல்போனுக்குள்ளதான் நடக்கும். அதுக்கு எல்லாரும் தயாராகணும்’ என பேசினார். அதன் தொடர்ச்சிதான் முரளிதர் ராவின் இந்த வாட்ஸ் அப் வைரல் ஆபரேஷன்” என்று பதில் மெசேஜ் கொடுத்துவிட்டு சைன் அவுட் ஆனது.

கருத்துகள் இல்லை: