புதன், 21 நவம்பர், 2018

வெளிநாட்டுத் தூதர்களுடன் சம்பந்தன் சந்திப்பு!.. சிறுபான்மையோரின் பாதுகாப்பு கேள்வி குறி?

வெளிநாட்டுத் தூதர்களுடன் சம்பந்தன் சந்திப்பு!மின்னம்பலம் : இலங்கையில் இருக்கும் தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் ஆபத்தில் இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் தெரிவித்துள்ளார். நேற்று (நவம்பர் 20) மாலை கொழும்பில் வெளிநாட்டு தூதுவர்களுடனான சந்திப்பின்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் சம்பந்தன்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று 15 நாடுகளின் தூதுவர்களை நேற்று சம்பந்தன் தலைமையில் சந்தித்தனர். கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது.
சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் விளக்கமளித்த இரா.சம்பந்தன்,
“ஒன்றுக்கு இரண்டு முறை நாடாளுமன்றத்தில் 122 உறுப்பினர்கள், நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றிய பின்னரும் பிரதமர் ராஜபக்‌ஷே பதவி விலகாமல் தொடர்ந்து அதிகாரத்தில் இருக்கிறார். அமைச்சர் பதவி, பணம் கொடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் குதிரை பேரம் நடந்து கொண்டிருக்கிறது.

புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவது, மற்றும் வடக்கு, கிழக்கில் காணிகள் விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை,உள்ளிட்ட விடயங்களில் நாங்கள் கவனம் செலுத்தியிருந்தோம். தற்போதைய அரசியல் நிலைமை சிறுபான்மையினரையும் நாட்டையும் பெரும் ஆபத்தில் தள்ளியிருக்கிறது. இந்த நிலைமைகள் தொடர்ந்தால், சட்டம் ஒழுங்கு நிலைமை வீழ்ச்சிகாணும். அதனால், சமூக விரோத சக்திகளின் கை ஓங்கும். இவற்றை நான் வெளிநாட்டு தூதர்களிடம் எடுத்துரைத்துள்ளேன்” என்று தெரிவித்திருக்கிறார் சம்பந்தன்.
ஆஸ்திரேலியா, நார்வே, சுவிட்சர்லாந்து, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளின் தூதர்கள், இவர்களோடு இலங்கைக்கான ஐ.நா. தூதர் ஆகியோரும் அமெரிக்கா, இங்கிலாந்து, தென்கொரியா, இந்தியா, பங்களாதேஷ், ஜெர்மனி, பிரான்ஸ், தென்னாப்பிரிக்கா,நெதர்லாந்து ஆகிய நாடுகளின் கொழும்புக்கான தூதரக உயர் மட்ட பிரதிநிதிகளும் சம்பந்தன் நடத்திய இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதன் மூலம் வெளிநாட்டு அரசுகள் ராஜபக்‌ஷேவுக்கும், மைத்ரி சிறிசேனாவுக்கும் எதிராக இருப்பது உறுதியாக தெரிகிறது.
இதையடுத்து கடும் கோபம் அடைந்த சிறிசேனாவின் கட்சியான இலங்கை சுதந்திரா கட்சி, சம்பந்தனைக் கடுமையாகக் கண்டித்துள்ளது. அக்கட்சியின் செயலாளர் ரோஹன லட்சுமண் பியதாசா இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சுதந்திரா கட்சிக்கும் இடையே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை யாருக்கு என்ற பிரச்னை இருக்கிறது. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலையிட வேண்டாம். இப்பிரச்னையை சர்வதேசத்துக்கு தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: