செவ்வாய், 20 நவம்பர், 2018

யானை வழித்தடங்களுக்கு சட்ட அங்கீகாரம்!

யானை வழித்தடங்களுக்கு சட்ட அங்கீகாரம்!
மின்ன்னம்பலம் :நாட்டின் அனைத்து யானை வழித்தடங்களையும் சுற்றுச்சூழல் ரீதியாக மென்மையான பகுதிகளாக அறிவிப்பதற்குப் பரிசீலிக்கும்படி சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சகத்தை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கேட்டுக்கொண்டுள்ளது.
அசாம் மாநிலத்தின் யானை சரணாலயங்களுக்கும், யானை வழித்தடங்களுக்கும் சட்ட அங்கீகாரம் வழங்கும்படி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் பிரதீப் குமார் புயான் என்பவரால் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவில், அசாம் மாநிலத்தில் யானைகள் இயற்கைக்கு மாறாக மரணிப்பது அதிகரிப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நவம்பர் 19ஆம் தேதியன்று, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவரான நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயலின் தலைமையிலான அமர்வு இம்மனு குறித்து விசாரணை செய்தது. “இவ்விவகாரம் பற்றி சிறிதுகாலம் விசாரணை நடத்திய பிறகு, யானை வழித்தடங்கள் விவகாரம் குறித்து பலராலும் விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது என்பதும், தீர்ப்பாயத்தால் பல தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்பதும் தெரிகிறது.
ஆகையால், இவ்விவகாரம் பற்றி விரிவான பார்வையுடன், நிரந்தர தீர்வைக் கண்டறியும்படி சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சகத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.
“அமைச்சகத்தின் அதிகாரத்தைக் கொண்டு நாடெங்கும் உள்ள அனைத்து யானை வழித்தடங்களையும் சுற்றுச்சூழல் ரீதியாக மென்மையான பகுதிகளாக அறிவிக்கும்படி நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இவ்விவகாரத்தை கவனித்து யானை வழித்தடங்களை சுற்றுச்சூழல் மென்மையான பகுதிகளாக அறிவிப்பதற்கான நடைமுறையை தொடங்குவதற்கு அமைச்சகத்துக்கு நாங்கள் இரண்டு வாரகால அவகாசம் வழங்குகிறோம்” என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: