
வழக்கமாக போலீசு கூறும் கட்டுக்கதைகளை அப்படியே ’க்’, ’ச்’ விடாமல் வெளியிடும் ஊடகங்களுக்கு, இது போன்ற நடுத்தர வர்க்கத்தை நடுங்கச் செய்யும் பரபரப்புச் செய்தி என்றால் சும்மாவா? அதுவும் சைவ உணவு வெறியர்களாக அசைவத்தின் மீது வன்மம் கக்கும் பார்ப்பன ஊடகங்களுக்கு சொல்லவா வேண்டும்? இவ்விவகாரம் ஊடகங்களில் இருந்து உடனடியாக சமூக வலைத்தளங்களுக்குப் பரவி அங்கும் நாய்க்கறியே பேச்சானது. மீம் கிரியேட்டர்கள் நாய்க்கறிக்கும் மீம்களை தட்டிவிடத் துவங்கினர். கூடுதலாக வாட்சப் வதந்திகளும் பஞ்சமில்லாமல் பறந்தன. பார்ப்பனிய கார்ப்பரேட் ஊடகங்கள்தான் வாட்சப் வதந்திகளையும் உருவாக்குகின்றன என்பது இங்கேயும் நிரூபிக்கப்பட்டது.


ஆனால் ஊடகங்கள் சகிலாவின் தரப்பு வாதத்தை மழுங்கடித்துவிட்டு போலீசு கிளப்பிவிட்ட சந்தேகத்தை மட்டும் பிடித்துக் கொண்டன. அனைத்து செய்தி ஊடகங்களும் இந்தச் செய்தியை பரபரப்பு செய்தியாக்கியதன் தொடர்ச்சியாக அடுத்த சில நாட்களில் தமிழகத்தில் ஆட்டுக்கறி விற்பனை பெருமளவில் பாதிக்கப்பட்டதாகக் கூறுகின்றனர், வியாபாரிகள்.

தொடங்கி வைத்த ரயில்வே போலீசே ‘ஜகா’ வாங்கிய பின்னரும், ஊடகங்கள் அதனை விட்டபாடில்லை. ஆய்வு முடிவுகளில் ’அது நாய்க்கறி இல்லை’ என வந்தாலும் ஊடகங்கள் அதனை ஆட்டுக்கறி என்று நம்பத் தயாரில்லை என்பது அவர்களது செய்திகளில் பளிச்சென தெரிகின்றது.
இன்று (22-11-2018) மதியம்வரை அது என்ன இறைச்சி என உறுதியாகாத நிலையில், புதிய தலைமுறை இணையதளத்தில் நவம்பர் 22, அன்று காலையில் வெளியிட்ட, ‘நாய்க்கறி விவகாரம்: ராஜஸ்தான் சென்றது தனிப்படை’ என்ற தலைப்புக் கொண்ட செய்தியை, “ஜோத்பூரிலிருந்து சென்னைக்கு வந்த ரயிலில் நாய்க்கறி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில்” என்றே தொடங்குகிறது.
வதந்தியைக் கிளப்பிவிட்ட போலீசே ’சந்தேகத்திற்குரிய இறைச்சி’ எனக் கூறிய பின்னரும் அதை நாய்க்கறி என்றே 22-11-2018 அன்று காலையில் எழுதியிருக்கிறது பாஜக கூட்டணியில் இருக்கும் பச்சமுத்துவின் புதிய தலைமுறை. மாலையில் ஆட்டுக்கறி என்று உறுதி செய்யப்பட்ட பின்னர், நல்லபிள்ளையாக ”நாய்க்கறி அல்ல, ஆட்டிறைச்சிதான்” என்ற செய்தியோடு நிறுத்திக் கொண்டது. ஒரு தன்னிலை விளக்கமும் இல்லை. ஒருவேளை இவ்விவகாரத்தில் ’சகிலா’ என்பவர் சம்பந்தப்படாமல் இருந்திருந்து, ஒரு ‘ஹரிஹரன்’ சம்பந்தப்பட்டிருந்தால், ஊடக அறத்தின்படி சந்தேகத்திற்குரிய இறைச்சி என புதிய தலைமுறை செய்தி வெளியிட்டிருக்கலாம்.
அது நாய்க்கறியா என சந்தேகத்தை கிளப்பிவிட்ட போலீசு, இப்போது அந்த விவகாரத்தை விட்டுவிட்டு, ’மீன்’ என்ற பெயரில் ஏன் பார்சல் ’புக்’ செய்யப்பட்டது என்ற புதிய பஞ்சாயத்தை முன் வைத்து பார்சல் ’புக்’ செய்தவரைக் கைது செய்ய ராஜஸ்தான் விரைந்திருக்கிறதாம்.
இதுகுறித்து தமிழ்நாடு இறைச்சி விற்பனையாளர் சங்கம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “ஆய்வு செய்யாமல் ஒரு இறைச்சியை நாய் இறைச்சி என்று எவ்வாறு செய்திபரப்பலாம்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்து நக்கீரன் இணையதளம், தமிழ்நாடு அனைத்து இறைச்சி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர் நலச் சங்கத்தின் பொதுச்செயலாளர், ராயபுரம் ஏ.அலி-யிடம் பேட்டி எடுத்து வெளியிட்டுள்ளது.
இக்காணொளியில் வால் நீளமான ஆடுகள், சென்னையில் உரிக்கப்படும் காட்சியை பேட்டியின் இடையே காட்டுகிறார் அலி. அதில் காணப்படும் ஆடுகளின் வால் பெரியதாகவே இருக்கிறது.
அது ஆட்டுக்கறியா ? நாய்க்கறியா ? என்ற கேள்விக்கு உணவுப் பாதுகாப்புத்துறை பதிலளிக்கவில்லை என்று நியாயம் பேசிய போலீசு இன்று ஆய்வறிக்கையில் ஆட்டுக்கறி என்று வந்த பிறகு மீன் என்று வழக்கு போடுகிறது.
இந்த மோசடி ஒன்றும் புதிதல்ல. அக்லக் கொலையில் முதல் ஆய்வில் ஆட்டுக்கறியாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டது, அடுத்த ஆய்வில் மாட்டுக்கறியாக உயிர்த்தெழுந்து வந்து அறிக்கையில் அமர்ந்தது போல, இங்கும் தாமதமாக வரவிருக்கும் ஆய்வு அறிக்கையில் நாய்க்கறி ஏதேனும் உயிர்த்தெழுமோ என்றெல்லாம் சந்தேகங்கள் அவாளின் மனதை ஆக்கிரமித்திருந்த சூழலில் அது ஆட்டுக்கறிதான் என ஆய்வறிக்கை தெளிவாகக் கூறியிருக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக