சனி, 24 நவம்பர், 2018

அந்தமான் : ஜீசஸை அறிமுகம் செய்யச் சென்ற ஜான் ஆலன் சாவ் பழங்குடிகளால் ...

ஜான் ஆலன் சாவ்
வினவு :நவீன கொலம்பஸாக தன்னை கருதி பழங்குடிகளுக்கு ‘ஜீசஸை அறிமுகம்’ செய்யச் சென்ற ஜான் ஆலன் சாவ் என்ற அமெரிக்கர், அந்தமான் நிகோபர் தீவுகளில் உள்ள பழங்குடிகளால் கொல்லப்பட்டிருக்கிறார்.
சுமார் 30 ஆயிரம் வருடங்களுக்கு மேலாக அந்தமானின் வடக்கு செண்டினல் தீவில் வசிக்கும் செண்டினல் பழங்குடி மக்கள், வெளியுலக தொடர்பை மறுத்து வாழ்ந்து வருகின்றனர்.  வெளி ஆட்கள் யாரேனும் தீவுக்குள் ஊடுருவினால் அவர்களை அம்பெய்து கொல்வது பழங்குடிகளின் வழக்கம்.< பிரிட்டீஷ் காலனியாளர்கள் நான்கு செண்டினல் பழங்குடிகளை கடத்தி, அவர்களிடம் மரபணு ஆய்வு செய்திருக்கிறார்கள். அதன்பின் 1967-ம் ஆண்டு மானுடவியல் ஆய்வாளர் செண்டினல் பழங்குடிகளை சந்தித்துள்ளார். அதன்பின், வெளியுலகத்துடன் பழங்குடிகள் எவ்வித தொடர்பையும் வைத்துக்கொள்ளவில்லை.

கடந்த 2004-ம் ஆண்டு வந்த சுனாமியின் போது, அந்தத் தீவுக்கு மேல் பறந்த இந்திய கடற்படை ஹெலிகாப்டரின் மீது செண்டினல் பழங்குடிகள் அம்பெய்தும் காட்சி பதிவாக்கப்பட்டுள்ளது. 2006-ம் ஆண்டு அந்தத் தீவுப்பகுதியில் ஒதுங்கிய இரண்டு மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நீண்ட வருடங்களாக அந்தப் பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக இருந்து வருகிறது. செண்டினல் மக்கள் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே வாழ்கின்றனர்.


இந்தச் சூழலில் அமெரிக்கர் ஜான் ஆலன் சாவ், சட்டவிரோதமாக அந்த தீவுக்குள் நுழைய முயன்று பழங்குடிகளால் கொல்லப்பட்டிருக்கிறார். அந்தமான் மீனவர் ஒருவரின் துணையுடன் கடந்த வாரம் தீவுக்குள் சென்ற ஜான் ஆலன், மூன்றே நாளில் பிணமாக கடற்கரை மணலில் புதைக்கப்பட்டிருப்பதை, அவரை தீவுக்குள் விட்ட மீனவர் பார்த்திருக்கிறார். அவர் அளித்த தகவலின் பேரில் அந்தமான் போலிசு, கொல்லப்பட்டது ஜான் ஆலன்தான் என உறுதிசெய்துள்ளது. மானுடவியலாளர்கள், பழங்குடி செயல்பாட்டாளர்கள் துணையுடன் ஆலனின் உடலை கைப்பற்ற முயற்சித்து வருகிறது போலீசு.


வடக்கு சென்டினல் தீவின் பழங்குடிகள். படம் நன்றி: Dinodia Photos.
ஜான் ஆலன் உலகின் பல பகுதிகளுக்குச் சென்று கிறித்துவ மதத்தை போதித்து வந்திருக்கிறார்.  மூன்று ஆண்டுகளில் அந்தமான் தீவுக்கு நான்கைந்து முறை சென்றிருக்கிறார் ஆலன். நவீன கொலம்பஸ் என தன்னைக் கருதிக்கொண்ட ஆலன், செண்டினல் பழங்குடிகளுக்கு கிறித்தவ மதத்தை போதித்து, ‘ஜீசஸை அறிமுகம்’ செய்யப் போவதாக தன் பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.
’கிறிஸ்டியன் கர்சன்’ என்ற மத அமைப்பு, ஜான் ஆலன் கொல்லப்பட்டதற்கு நீதி வேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜான் ஆலன் கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அது வலியுறுத்தியிருக்கிறது. தான் கொல்லப்பட்டால் பழங்குடிகளை மன்னிக்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார் ஜான் ஆலன். அவருடைய குடும்பமும் அவர்களை மன்னிப்பதாக அறிவித்துள்ளது. போலிசு பெயர் தெரியாத பழங்குடி என வழக்கு தொடுத்துள்ளது. ஜான் ஆலனிடம் காசு வாங்கிக் கொண்டு, தீவுக்குள் செல்ல உதவிய 9 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
படிக்க:

உலகம் முழுக்க  கிறித்தவ மதத்தைப் பரப்பச் சென்ற போதகர்களே பின்னாளில் காலனி ஆட்சிகளுக்கு வழிவகுத்தார்கள். இயற்கை மற்றும் இறந்தவர்களை வணங்குவதை சாத்தானை வணங்குவதாகச் சொல்லி ஜீசஸை அறிமுகப்படுத்தி, அவர்களை ‘விடுவிக்க’ பார்த்திருக்கிறார் ஆலன். அப்படித்தான் கொலம்பஸ் அமெரிக்கா சென்று செவ்விந்தியர்களை திருத்துவதாகச் சொல்லி இன்று வெள்ளையர்கள் அப்பழக்குடி மக்களை கிட்டத்தட்ட அழிக்கும் நிலைக்கு கொண்டு வந்து விட்டனர்.
உலகில் அமெரிக்காதான் கடுங்கோட்பாட்டு கிறித்தவ மத பிற்போக்கு நம்பிக்கைகளுக்கு இன்றும் தலைமையகமாக திகழ்கிறது. நமது ஊரில் இருக்கும் பெந்தகோஸ்தே, ஆவிஎழுப்பு கூட்டங்கள் அனைத்திற்கும் ட்ரெண்ட் செட்டர் அமெரிக்காதான். அமெரிக்காவின் முதலாளித்துவ அமைப்பு மக்களிடையே தோற்றுவித்திருக்கும் பதட்டம் காரணமாக அங்கே அடிக்கடி துப்பாக்கி சூடுகள் நடக்கின்றன. இன்னொரு புறம் இத்தகைய மதவாதிகள் மக்களை பிடித்து பிற்போக்காய் வைத்திருக்கின்றனர்.
தனது சொந்த நாட்டின் சாத்தானாகிய முதலாளித்துவத்தை பார்க்க இயலாத ஆலன் இங்கே அப்பாவியான பழங்குடிகளை சாத்தானாக பார்த்து பரலோகம் சென்றிருக்கிறார். அந்த வகையில் அவரும் அப்பாவி என்பதால் ஆழ்ந்த அனுதாபங்கள்!
செய்தி ஆதாரங்கள்:
♦ American killed by isolated tribe on North Sentinel Island in Andamans
♦ ‘Why are they so angry’: US man John Allen Chau, killed by remote Sentinel Island tribe, was trying to convert them to Christianity

கருத்துகள் இல்லை: