புதன், 4 ஏப்ரல், 2018

கனிமொழி: ஆதார் .. மக்களின் பயோ மெட்ரிக்.. உள்ளிட்ட முக்கிய தகவல்கள் கசிவதை தடுக்க மத்திய அரசு என்ன ..

மின்னம்பலம்: ஆதார் தகவல்கள் கசிந்து வருவதாக ஊடகங்களில் பரபரப்பாக
விவாதிக்கப்பட்ட நிலையில், இதுபற்றி மத்திய அரசு நாடாளுமன்ற மாநிலங்களவையில் விளக்கம் அளித்துள்ளது.
திமுக மகளிரணிச் செயலாளரும், மாநிலங்களவைக் குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி, "ஆதார் எண் வழங்கப்படுவதற்காகச் சேகரிக்கப்பட்ட பொதுமக்களின் பயோ மெட்ரிக் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் சமீபத்தில் விதிமுறைகளைமீறி கசிந்ததாகத் தகவல் வெளியானது. எனவே ஆதார் தகவல்கள் கசிவதைத் தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது? என்று எழுத்துபூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும், “இதுபோன்ற தகவல் கசிவு சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க, தகவல் பாதுகாப்பு மேலாண்மையின் தரத்தை மேம்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது?” என்றும் கேட்டிருந்தார் கனிமொழி.
வழக்கமாக இதுபோன்ற எழுத்துபூர்வமான கேள்விகளுக்கு, துறை சார்ந்த இணை அமைச்சர் விளக்கமளிப்பார். ஆனால் கனிமொழியின் இந்த கேள்விக்கு அளிக்கப்பட்ட எழுத்துபூர்வ பதிலில் அமைச்சகம் சார்பில் பொதுவாகவே பதில் அளிக்கப்பட்டிருக்கிறது.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் தெரிவித்திருக்கும் எழுத்து பூர்வமான பதிலில்,
‘‘ஆதாருக்காக தகவல்களைச் சேகரித்து வைத்திருக்கும் இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையத்தில் இருந்தோ, மத்திய அடையாள தகவல் களஞ்சியத்தில் இருந்தோ தகவல்கள் கசியவில்லை.
இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையத்தின் தகவல்கள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ஆதார் தகவல்களின் பாதுகாப்புக்கு இந்திய அரசும், இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையமும் மிக உயர்ந்த முக்கியத்துவம் தருகின்றன.
மேலும் இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையம் தனது பாதுகாப்பை எப்போதும் பலப்படுத்தி வருவதோடு, உள்கட்டமைப்பினை சர்வதேச தரத்தில் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. பல அடுக்குகள் கொண்ட தொழில் நுட்பத் தரத்தை ஆணையம் தொடர்ந்து பராமரிக்கிறது. பொதுமக்களின் தனியுரிமை தகவல்களைப் பாதுகாப்பதே ஆதார் ஆணையத்தின் அச்சாணியான கோட்பாடாகும். குறைந்தபட்ச தகவல், கூட்டமைக்கப்பட்ட தரவுத் தளம்,நம்பகத் தன்மை ஆகியவையே ஆதார் ஆணையத்தின் முக்கியமான கோட்பாடுகள். பாதுகாக்கப்பட்ட மக்களின் தகவல் களஞ்சியம் கண்காணிப்புக்கும் கட்டுப்பாட்டுக்கும் தொடர்ந்து உட்படுத்தப்படுகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தொழில்நுட்ப ரீதியாக இவ்வாறு என்றால், இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையம் புற வழியாகவும் கடுமையான பாதுகாப்பில் இருக்கிறது எனவும் அமைச்சகம் தனது பதிலில் குறிப்பிட்டிருக்கிறது.
அதாவது, ’’ஆதார் தகவல் மையங்கள் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் இறுக்கமான பாதுகாப்பில் இருக்கின்றன. பாதுகாப்பு தொடர்பான அனைத்துச் சாத்தியமான அம்சங்களும் அரசால் முன்னெடுக்கப்பட்டுள்ளன’’ என பதில் தரப்பட்டிருக்கிறது.
இதுதவிர சட்ட ரீதியாகவும் ஆதார் தகவல்கள் முழுமையாகப் பாதுகாக்கப்படுகின்றன என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆதார் சட்டம் 2016- பிரிவு 28 முதல் 33 -ன் படி தகவல்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகிறது. ஆதார் சட்டத்தின் பிரிவு 34 முதல் 47 -ன் படி ஆதார் குற்றங்களுக்கான தண்டனைகளும் வரையறுக்கப்பட்டிருக்கின்றன. எனவே ஆதார் தகவல்கள் கசிகிறது என்ற பேச்சுக்கே இடமில்லை என மத்திய மின்னணு, தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: