புதன், 4 ஏப்ரல், 2018

நாளை திமுக முழு அடைப்பு போராட்டம் ..அனைத்து வணிகர் சங்கங்களும் , கட்சிகளும் ஆதரவு ....

Mohan Prabhaharan - Oneindia Tamil சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து திமுக அழைப்பு விடுத்துள்ள நாளைய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை ஆகியவை ஆதரவு அளித்துள்ளன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக போராட்டம் நடந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
Trade Unions supporting DMK Strike Tomorrow இந்நிலையில், மத்திய அரசைக் கண்டித்து நாளை மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு திமுக அழைப்பு விடுத்து இருந்தது.
 இதற்கு மதிமுக, விசிக,காங்கிரஸ், பாமக, கொமதேக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. மேலும், நாளைய போராட்டத்தில் தொழிற்சங்கங்களும் பங்கேற்கவுள்ள நிலையில், வணிகர் சங்கங்களும் ஆதரவு தரவேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார். ஆனால், வணிகர் சங்கங்கள் ஏற்கனவே நேற்று கடையடைப்பில் ஈடுபட்ட நிலையில், அவர்கள் முடிவு அறிவிப்பதில் இழுபறி இருந்தது. இந்நிலையில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன் பேசுகையில், ஏப்ரல் 11ம் தேதி பிரதமர் வருகையையொட்டி நாங்கள் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தோம். ஆனால், அந்தப் பயணம் தற்போது ரத்து செய்யப்பட்டு இருப்பதால், நாளை நடக்கவுள்ள திமுக போராட்டத்திற்கு ஆதரவு வழங்கவுள்ளோம் என்று தெரிவித்துள்ளார். அதுபோல, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா பேசுகையில், திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று நாளை நடைபெறும் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கடையடைப்பு நடத்தி ஆதரவு தரப்படும் என்று தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை: