புதன், 4 ஏப்ரல், 2018

காவிரிப் போராட்டங்கள்: கேட்டறிந்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா !

காவிரிப் போராட்டங்கள்: கேட்டறிந்த தலைமை நீதிபதி!
மின்னம்பலம் : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரித் தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், இது குறித்துத் தமிழக அரசு வழக்கறிஞரிடம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கேட்டறிந்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கக் கோரியும் தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. கட்சிகளும் அமைப்புகளும் ரயில் மறியல், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றன. நான்காவது நாளாக இன்று போராட்டம் தொடர்ந்துவருகிறது.
திமுக போராட்டம்
சென்னை ஆலந்தூரில் திமுக எம்.எல்.ஏ. மா.சுப்ரமணியன் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

சென்னை கொரட்டூர் மற்றும் திருவொற்றியூரில் திமுகவினர் ரயில் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவொற்றியூரில் ரயில் மறியலில் ஈடுபட்ட 1000க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர். இந்தப் போராட்டம் காரணமாகப் புறநகர் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தை திமுகவினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அயனாவரத்தில் மோடி உருவ பொம்மை எரிக்க முயற்சிக்கப்பட்டது.
சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் தலைமையில் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுவருகிறது. உண்ணாவிரதத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அன்பழகன், "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நாங்கள் அதிமுகவுடன் இணைந்து போராடத் தயாராக இருக்கிறோம். ஆனால் அவர்கள் தயாராக இல்லை" என்று தெரிவித்தார்.
சிபிஐ ரயில் மறியல்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் மூத்தத் தலைவர் தா.பாண்டியன் அறிவித்திருந்தார். அதன்படி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயிலை மறித்து போராட்டம் நடத்தினர்.சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் தலைமையில் பேசின் பிரிட்ஜில் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வரும் புறநகர் ரயிலை மறித்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர் அருகே பேரளத்தில் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அது கை கலாப்பாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கண்ணமங்கலத்தில் விழுப்புரம்- திருப்பதி விரைவு ரயிலை மறித்தவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
தமாகா போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கோடி மின்னஞ்சல் அனுப்பும் போராட்டத்தை தஞ்சையில் இன்று தமாகா தலைவர் வாசன் தொடங்கிவைத்தார். "நாளை மறுநாள் தமாகா சார்பில் உண்ணாவிதரப் போராட்டம் நடைபெறும். தூங்கும் மத்திய அரசைத் தட்டி எழுப்பவே ஈ.மெயில் அனுப்புகிறோம். காவிரி விவகாரத்தில் அதிமுக அரசு மெத்தனமாக உள்ளது" என்று வாசன் கூறியுள்ளார்.
கேட்டறிந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
வேறொரு வழக்கில் ஆஜரான தமிழக அரசின் வழக்கறிஞர் உமாபதியிடம் தமிழகத்தில் நடைபெற்று வரும் காவிரிப் போராட்டங்கள் குறித்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கேட்டறிந்தார். அவமதிப்பு வழக்கில் விசாரணை நடக்க உள்ள நிலையில் போராட்டம் நடத்துவது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பவும், அமைதியை நிலை நாட்டவும் அறிவுறுத்திய தலைமை நீதிபதி வரும் 9ஆம் தேதி காவிரி வழக்கு விசாரணை வரும்போது உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும், தமிழக மக்கள் போராட்டங்களைக் கைவிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனை தமிழக அரசிடம் தெரிவிப்பதாகவும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: