திங்கள், 2 ஏப்ரல், 2018

பாரத்பந்த் வடமாநிலங்களில் போராட்டம் . வன்முறை .. 4 பேர் பலி.. எஸ்சிஎஸ்டி சட்டத் தீர்ப்புக்கு எதிர்ப்பு


tamilthehindu :உத்தரப்பிரதேசம். ஏஎன்ஐ எஸ்சி,எஸ்டி வன்கொடுமை சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக வடமாநிலங்களில் இன்று தலித் அமைப்புகள் விடுத்த ‘பாரத் பந்த்’தில் வன்முறை தலைவிரித்தாடியது.
இதில் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் நடந்த வன்முறையில் 4 பேர் கொல்லப்பட்டனர், ஏராளமானோர் காயமடைந்தனர். பொதுச்சொத்துக்களும் கடுமையாக சேதமடைந்தன. இதே போல உத்தரப்பிரதேசம், பிஹார், ராஜஸ்தான், டெல்லி ஆகிய மாநிலங்களில் நடந்த வன்முறைகள், சாலைமறியல், ரயில்மறியல் போராட்டங்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
என்ன தீர்ப்பு?
எஸ்சி,எஸ்டி வன்கொடுமைச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்த வழக்கில் கடந்த மாதம் 20-ம் தேதி உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியது.
அதில், எஸ்சிஎஸ்டி வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் பாதிக்கப்பட்டவர் புகார் அளித்தால், எதிராளிகள் மீது உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது. தீவிர விசாரணைக்கு பின்பே கைது செய்ய வேண்டும்.
அதேபோல, அரசு ஊழியர்களையும் உடனடியாக கைது செய்யக்கூடாது. மேலதிகாரிகளின் அனுமதி பெற்றபின்புதான் கைது செய்ய வேண்டும் என்று தீர்ப்பில் கூறியது.
இந்த தீர்ப்புக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

எதிர்ப்பு
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தலித் மக்களுக்கு எதிரான வன்முறையை வரும்காலத்தில் அதிகரிக்கும். எஸ்சிஎஸ்டி மக்களுக்கு அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள சிறப்பு உரிமைகளை பறிப்பதாகும் என கண்டனம் தெரிவித்தன.
பாரத் பந்த்
இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக வடமாநிலங்களில் உள்ள தலித் அமைப்புகள் பாரத் பந்த் நடத்த இன்று அழைப்பு விடுத்திருந்தன. ஆனால், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்த பாரத் பந்த் வன்முறையில் முடிந்தது.
மத்தியப்பிரதேசம்:


போபால் நகரில் போராட்டக்காரர் ஒருவரை போலீஸார் தாக்கும்காட்சி
 மத்தியப் பிரதேசத்தில் நடந்த பாரத்பந்த்துக்கு தலித் அமைப்புகள் பல அழைப்பு விடுத்திருந்தன. இந்த பந்த்தில் நடந்த வன்முறையில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
மாணவர் அமைப்பின் தலைவர் ராகுல் பதக் என்பவர் மொரினா மாவட்டத்தில் கொல்லப்பட்டார் என்ற மாவட்டஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், 3 பேர் கொல்லப்பட்டனர். அவர்களின் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
குவாலியர், பிஹிந்த், மேகான், ஹக்கார், கோகாக், ஆகிய மாவட்டங்களில் கடும் வன்முறை ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதில் குவாலிலர், பிஹிந்த் மாவட்டங்களில் 144 தடை உத்தரவை போலீஸார் அமல்படுத்தி உள்ளனர்.
பல இடங்களில் நடந்தவன்முறைச் சம்பவங்களைக் கட்டுக்கப்படுத்த போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 6 பேர் காயமடைந்தனர். பல மாவட்டங்களில் சாலை மறியும், ரயில் மறியலும் நடந்தன.
அரசுப் பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டு, தீவைக்கப்பட்டன. பதற்றமான சூழலில் இருப்பதால், பல இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த பாரத் பந்த்தில் போராட்டக்காரர்கள் பல நகரங்களில் வன்முறையில் ஈடுபட்டனர். அரசுப் பேருந்துகள், தனியார் வாகனங்கள், கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு, தீவைக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் போலீஸார் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கினர்.
ஆக்ரா, ஹப்பூர், மீரட், ஆசம்கார்க் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வன்முறை சம்பவங்களும், சாலை மறியலும் நடந்தன. போராட்டக்காரர்கள் சாலையில் சென்ற அரசு பஸ்களை குறிவைத்து தாக்கி, தீவைத்து கொளுத்தியதால் பெரும் பதற்றமான சூழல் நிலவியது.
உத்தரப்பிரதேச போலீஸ் டிஜிபி ஓ.பி.சிங் கூறுகையில், ஆக்ரா, சம்பல், ஹப்புர் ஆகிய இடங்களில் வன்முறை சம்பவங்கள் தடுக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.பதற்றமான இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ரயில் நிலையங்களில் பாதுகாப்புக்காக ரயில்வே பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இருந்தபோதிலும் சில வன்முறை சம்பவங்கள் ஆங்காங்கே நடக்கின்றன.அதுவும்விரைவி்ல கட்டுக்குள் வரும் எனத் தெரிவித்தார்.
முதல்வர் ஆதித்யநாத் விடுத்த அறிவிப்பில், மக்கள் அமைதி காக்க வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், எஸ்சி,எஸ்சி நலன் பாதுகாக்கப்படும் எனத் தெரிவித்தார்.
பிஹாரில் சட்டசபை ஒத்திவைப்பு


குஜராத்தின் வதோதரா நகரில் ரயில் மறியலில் போராட்டக்காரர்கள் ஈடுபட்ட காட்சி
 பிஹார் மாநிலத்தில் நடந்த பாரத் பந்த்திலும் ஒரு சில மாவட்டங்களில் வன்முறையும், சாலை மறியலும், ரயில் மறியலும் நடந்தன.
எஸ்சி,எஸ்டி சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்கு எதிராக அவசரச்சட்டம் இயற்ற வேண்டும் எனக்கோரி பிஹார் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் தீர்மானம் கொண்டுவர கோரிக்கை விடுத்தன.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏ தேஜஸ்வி யாதவ் இது தொடர்பாக தீர்மானம் கொண்டுவந்தார்.
தார்பங்கா, கயா, ஜெஹானாபாத், பெகுசாரி,போஜ்பூரி, அராரியா ஆகிய இடங்களில் ரயில் மறியலும், சாலை மறியலும் நடந்தது. நவாடா, புரேனியா, தார்பங்கா உள்ளிட்ட சில இடங்களில் போராட்டக்காரர்கள் வாகனங்களை அடித்து நொறுக்கினார்கள்.
ராஜஸ்தானில் போராட்டம் தீவிரம்


ஜெய்பூரில் போராட்டக்கார்கள் கூடியிருந்த காட்சி
 ராஜஸ்தானில் நடந்த போராட்டத்தில் ஏறக்குறைய 50-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். பல்வேறு இடங்களில் சாலை மறியல், கடையடைப்பு, ரயில் மறியல்கள் நடந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
அரசுப்பேருந்துகள், தனியார்வாகனங்கள், கடைகள் ஆகியவற்றை ஜெய்பூர், அஜ்மீரில் போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினார்கள். இதனால், அங்கு போலீஸார் குவிக்கப்பட்டு வன்முறைச் சம்பவங்கள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.
கைர்தால் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் சதாப்தி எக்ஸ்பிரஸை ரயில் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தி கண்ணாடிகளை சேதப்படுத்தினார்கள். மேலும், புதுடெல்லி-அஜ்மீர் சதாப்தி எக்ஸ்பிரஸ் பிவானி-ஆல்வார் ரயில் ஆகியவற்றையும் செல்லவிடாமல் போராட்டக்காரர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
அதனால், ஆல்வார் ரயில் நிலையத்திலேயே சுராத்கர்-ஜெய்பூர் பாசஞ்சர் எக்ஸ்பிரஸ், அலகாபாத்-ஜெய்பூர் எக்ஸ்பிரஸ், டெல்லி-போர்பந்தர், பாந்த்ரா-டெல்லி, அகமதாபாத்-வைஸ்னவதேவி எக்ஸ்பிரஸ் ஆகியவை நிறுத்தப்பட்டன.
ராஜஸ்தான் மாநிலத்தில் பல நகரங்களில் சாலை மறியல் காரணமாக பஸ் போக்குவரத்து முடங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: