வெள்ளி, 6 ஏப்ரல், 2018

துணைவேந்தர்களாக வெளிமாநிலத்தவர்... தமிழக கல்வி தரத்தை சர்வதேச அளவில் தகர்க்க ஆர் எஸ் எஸ் சதி!

Anna Univ VC row: BJP insults Tamils? Mathi - Tamiloneindia :தமிழகத்தில் தொடர்ந்து
நியமிக்கப்படும் வெளிமாநில துணைவேந்தர்கள் சென்னை: தமிழக பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களாக வெளிமாநிலத்தவர் தொடர்ந்து நியமிக்கப்படுவது மிகப் பெரும் சதியோ என சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. சர்வதேச அளவில் தமிழகக் கல்வியாளர்களின் தரத்தை திட்டமிட்டு சிதைக்கும் சதித் திட்டம்தானா? இது என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
தமிழகத்தில்  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமனத்துக்குப் பின் வட மாநிலங்களைப் போல இந்துத்துவா சக்திகள் தலையெடுப்பதும் ஊர்வலம் நடத்துவம் தொடர்கிறது. இதற்கு வழக்கம்போல தமிழகம் எதிர்வினையாற்றி வருகிறது.< இதன் அடுத்த கட்டமாக தமிழக பல்கலைக் கழகங்களை காவிமயமாக்கும் வகையில் வெளிமாநில இந்துத்துவா ஆதரவாளர்களை அடுத்தடுத்து தமிழகப் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களாக நியமித்து வருகிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். தமிழ்நாடு இசை பல்கலைக் கழகத்துக்கு கேரளாவின் பிரமீளா குருமூர்த்தியை இறக்குமதி செய்தார் பன்வாரிலால் புரோஹித்.
இதற்கு நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி போன்றவர்கள் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு தட்டிப் பறிக்கப்படுகிறது என பொங்கினார் புஷ்பவனம் குப்புசாமி.
இதையடுத்து அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்துக்கு ஆந்திராவின் சாஸ்திரி நியமிக்கப்பட்டார். பல்வேறு ஒழுங்கு நடவடிக்கைக்குள்ளான, படுதீவிரமான இந்துத்துவாவாதியான சாஸ்திரியை நியமித்தது பெரும் சர்ச்சையானது.

இந்த நிலையில் தமிழகத்தின் தலைமகன்களில் ஒருவராக போற்றப்படும் பேரறிஞர் அண்ணாவின் பெயரிலான பொறியியல் பல்கலைக் கழகத்துக்கு மற்றொரு இந்துத்துவவாதியான கர்நாடகாவின் சூரப்பா நியமிக்கப்பட்டுள்ளார். இத்தனைக்கும் இப்பதவிக்கு 170 பேர் விண்ணப்பித்தனர். இந்த 170 தமிழரில் ஒருவர் கூட அண்ணா பல்கலைக் கழகத்துக்கு துணைவேந்தராகும் தகுதி இல்லை என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முடிவெடுத்திருப்பது தமிழகத்தின் சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்தும் செயல்.
இப்படி அடுத்தடுத்து தமிழ்நாட்டின் பல்கலைக் கழகங்களில் வெளிமாநிலத்தவரே துணைவேந்தராக்கப்படுவதின் பின்னணியில் மிகப் பெரிய சதித் திட்டம் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. இப்படி வெளிமாநிலத்தவரை திணிப்பதன் மூலம் சர்வதேச அளவில் தமிழகக் கல்வியாளர்களின் தரம் குறித்த சந்தேகத்தை திட்டமிட்டு பாஜக ஏற்படுத்துவதாகவே இது பார்க்கப்படுகிறது.
இஸ்ரோவின் தலைவராக தமிழகத்து சிவன் இருக்கிறாரே என தமிழிசை மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதன் மூலமே இச்சதி அம்பலமாகிறது. இஸ்ரோ என்பது மத்திய அரசின் நிறுவனம். அண்ணா பல்கலைக் கழகம் என்பது தமிழகத்துக்கு சொந்தமானது. இரண்டையும் ஒப்பிடுவது என்பது அபத்தத்தின் உச்சம் என்பதை மருத்துவம் படித்த தமிழிசை உணராமல் இருப்பாரா? என்கிற கேள்வி எழுகிறது. நிச்சயம் தமிழக கல்வியாளர்களுக்கு திட்டமிட்ட அவமானத்தையே இச்சம்பவங்கள் ஏற்படுத்துகின்றன என்பதில் சந்தேகமே இல்லை

கருத்துகள் இல்லை: