வியாழன், 5 ஏப்ரல், 2018

கத்தினேன் கதறினேன்; ஒருவரும் உதவிக்கு வரவில்லை: டிராபிக் போலீஸாரால் தாக்கப்பட்ட பிரகாஷின் தாயார் கண்ணீர்

tamilthehindu :சம்பவம் நடந்தபோது போலீஸார் சுற்றி நின்று எங்கள் அனைவரையும் தாக்கியபோது உதவி கேட்டு கத்தினேன் கதறினேன். யாரும் உதவிக்கு வரவில்லை என பிரகாஷின் தாயார் உருக்கமாக பேட்டி அளித்துள்ளார்.
கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் தி.நகர் போத்தீஸ் அருகே நடந்த சம்பவம் பொதுமக்களை உலுக்கியது. ஒரு இளைஞரை மூன்று காவல் அதிகாரிகள் பொதும்க்கள் முன்னிலையில் கம்பத்தில் பிடித்து வைத்து தாக்கியதும், இதைப்பார்த்து கதறும் தாயாரை போலீஸார் தாக்கியதும் வீடியோ காட்சிகளாக வெளிவந்து வைரலானது.

இந்த சம்பவத்தில் காவல் அதிகாரிகள் அனைவரும் போலீஸார் பக்கம் நிற்க,  தாக்கப்பட்ட இளைஞர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதுவரை அந்த இளைஞர் பிரகாஷ் சிறையிலிருந்து வெளியே வரவில்லை. தாக்கப்பட்ட தாயார் சங்கீதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விவகாரத்தில் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாநில மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.
இந்நிலையில் அன்று என்ன நடந்தது என்பது குறித்து தனியார் வெப் சேனலுக்கு தாக்கப்பட்ட இளைஞரின் தாயார் சங்கீதா கூறியதாவது:
அன்று நாங்கள் வீட்டுக்கு தேவையான சில பொருட்களை வாங்க மகன் பிரகாஷ், மகளுடன் அவனது மோட்டார் சைக்கிளில் சென்றோம். பொருட்களை வாங்கிவிட்டு வரும்போது போக்குவரத்து போலீஸார் வாகனத்தை நிறுத்தினர்.
பிரகாஷை அழைத்து, 'எங்கே ஹெல்மட்' என்று கேட்டனர். 'ஹெல்மட் மோட்டார் சைக்கிளில் உள்ளது சார், பொருட்கள் அதிகம் உள்ளதால் போடமுடியவில்லை' என்று பிரகாஷ் சொன்னான்.
'ஏன் மூன்று பேர் ஒரே பைக்கில் வந்தீர்கள்' என்று ஒரு அதிகாரி கேட்டார். 'சார், அம்மா வீட்டுவேலை செய்து பிழைப்பவர். எங்களுக்கு வசதி இல்லை. தி.நகரில் கொஞ்சம் பொருள் வாங்க வேண்டியிருந்ததால் தங்கையையும் அம்மாவையும் அழைச்சிட்டு வந்தேன்' என்று பிரகாஷ் சொன்னான்.
'மூன்று பேர் மோட்டார் சைக்கிளில் வரக்கூடாது என்று தெரியாதா? ஆட்டோவில் வரவேண்டியது தானே?' என அதிகாரி ஒருவர் கூறினார். 'ஆட்டோவில் வந்து போகும் அளவுக்கு வசதி இல்ல சார் அதான் மோட்டார் சைக்கிளில் வந்தோம்' என்று பிரகாஷ் கூற, 'ஆட்டோவில் வர வக்கில்லை என்றால் ஏன் தி.நகருக்கு ஷாப்பிங் வருகிறீர்கள்' என்று இன்னொரு அதிகாரி கேட்டார்.
'சார் ட்ரிபிள்ஸ் போனது தப்புதான், அதற்கு வக்கில்லை என்று தேவையில்லாமல் எதற்கு பேசுகிறீர்கள்' என்று பிரகாஷ் கேட்டான். 'என்னடா தேவை இல்லாமல் பேசுகிறாய்' என்று தரக்குறைவாக பேச ஆரம்பித்த போலீஸ் அதிகாரி ஒருவர் பிரகாஷின் சட்டையைப் பிடித்து ’வாடா’ என்று இழுத்தார்.
அப்போது நான், 'விடுங்க சார், ஏன் இப்படி நடந்துகொள்கிறீர்கள்?. அடிக்கிற வேலை எல்லாம் வைத்துக்கொள்ளாதீர்கள்' என்று கேட்டபோது, 'நீ என்ன நடுவில் என்று என்னைத் தள்ளிவிட்டனர். அப்போது என் பையன் ஏன் என் அம்மா மீது கை வைக்கிறீர்கள்' என்று கேட்டபோது முதலில் என்னைத் தாக்கினர்.
என்னைப் போலீஸார் தாக்கியதை பார்த்து என் மகன் ஆவேசமடைந்து என் அம்மாவை எப்படி தாக்கலாம் என்று அந்த அதிகாரி சட்டையைப் பிடிக்க ஆரம்பித்தான். அப்போது மேலும் மேலும் கொடூரமாகத் தாக்கி மூன்று பேர் அவன் கையைப் பிடித்து முறுக்கினார்கள். நான் தடுக்க முயன்ற போது மீசை இல்லாத போலீஸ் ஒருவர் வாக்கி டாக்கியால் என் நெஞ்சில் தாக்கினார்.
கீழே தள்ளிவிட்டதில் நிலைகுலைந்து விழுந்த என்னை தலைமுடியைப் பிடித்து இழுத்து தாக்க வந்தார்கள். அப்போது என் மகள் குறுக்கே புகுந்து தடுத்தார். என் மகனை அங்கேயே தாக்கினர். நான் கத்தினேன், கதறினேன் பொதுமக்களை உதவிக்கு கூப்பிட்டேன். யாரும் உதவ முன்வரவில்லை.
பின்னர் என் மகனை அடித்து ஸ்டேஷனுக்கு இழுத்துச் சென்றனர். அங்கு வைத்தும் என் மகனைத் தாக்கினார்கள். மகன் தாக்கப்படுவதைப் பார்த்துக் கதறி அழுத என்னைப் பார்த்து 'நடிக்கிறாயா' என்று பிரபு என்ற அதிகாரி கேட்டார். பின்னர் என்னை மருத்துவமனைக்குப் போகச் சொன்னார்கள்.
என் மகனை விசாரித்து அனுப்பி விடுவதாகக் கூறினார்கள். ஆனால், மருத்துவமனைக்குச் சென்ற நான் திரும்பி வருவதற்குள் என் மகனை சிறைக்கு அனுப்பி விட்டார்கள்.
"எங்களைத் தாக்கிய போலீஸ்காரர்கள் மீது ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. என் மகன் மீது மட்டும் வழக்கு போட்டுள்ளனர்.
இதுகுறித்து எங்களிடம் ஒரு கேள்வி கூட யாரும் கேட்கவில்லை. 'என்னை அசிங்கப்படுத்தி விட்டான். அவனை ஏதாவது செய்ய வேண்டும்' என ஒரு போலீஸ்காரர் என் முன்னாலேயே சொல்கிறார். என் மகனை இப்போது புழல் சிறையில் அடைத்துவிட்டார்கள். எதுவும் ஆகாமல் அவன் வெளியே வந்தால் போதும்" கடைசியாக என் மகனை போலீஸ் ஸ்டேஷனில் பார்த்தேன் அதன் பிறகு இதுவரை அவனைப் பார்க்கவில்லை” என கண்ணீருடன் பேசினார்.
பாதிக்கப்பட்டவர்கள் சாதாரண தினக்கூலிகள் என்பதால் சட்டம் 'வேகமாக' பாய்ந்துள்ளது. தலைநகர் சென்னையில் பலர் முன்னால் போலீஸார் ஒரு இளைஞரையும் அவரது தாயாரையும் தாக்கியதைப் பொதுமக்கள் நேரடி சாட்சிகளாக பார்த்துள்ளனர். வீடியோக்களில் பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நீதி கிடைக்கவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

கருத்துகள் இல்லை: