புதன், 17 ஜனவரி, 2018

ஆண்டாள் ... பெண்களின் காமத்தை, பாலியல் சுதந்திரத்தை பாடிய தோழர் பெருமைக்கு உரியவர்

பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப் புணர்வதோ ஆசையினால்
என் கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்து ஆவியை....
கலை நிதி : சற்று நீளமான பதிவு. பொறுமையாகப் படியுங்கள் உறவுகளே.
பெரியார் வழி வந்தவர்களே, தெரிந்து கொள்ளுங்கள் பெரியாழ்வார் வழி வந்தவளின் அழகை!
பெரியார் வழி வந்த எம் தங்கங்கள் சொல்லத் தயங்குகின்றனவாம். இப்போதெல்லாம் எங்கள் செல்லங்கள் தான் காதலுற்ற சேதியினைத் தனையீன்ற பெற்றோரிடம் தயங்காமல் சொல்கிறார்கள். ஆனால், பெரியாழ்வார் வழி வந்தவளைப்போல் கேவலமாக அன்று.
பெரியாழ்வார் தூக்கி வளர்த்த பிள்ளையைத் தூக்கிக் கொண்டாடும் உங்கள் உரிமையில் நாங்கள் ஒருபோதும் தலையிடமாட்டோம் Shanmugaa Pandian. ஆனால் பெரியார் வழிப் பிள்ளைகளைச் சிறுமைப்படுத்த வேண்டாம். என் பிள்ளையும்கூட பெரியார் வழியில்தான் வளர்ந்து வருகிறாள்.
பெரியாழ்வார், துளசி மாடத்தின் கீழிருந்து தூக்கி வளர்த்த இந்தப் பேதை காமம் மீதுற்று எப்படியெல்லாம் புலம்பித் திரிகிறாள். பெரியாரின் பிள்ளைகள் அப்படி அல்லவே.
மார்கழித் திங்களில் அதிகாலை நீராடி, பாவை நோன்பு நோற்றுக் கண்ணனை வேண்ட ஆயர் மகளிரை எழுப்புகிறாள் ஆண்டாள்.
மற்ற பெண்டிரெல்லாம் கண்ணனை வேண்ட ஆண்டாளோ 'கண்ணனையே' வேண்டுகிறாள்.
கண்ணன் ஒன்றும் மணமாகாதவன் அல்ல. இவனுக்கு ராதை என்கின்ற காதலி மட்டுமல்லாமல், நக்கின ஜீதி என்கிற நப்பின்னை, ருக்குமணி, ஜாம்பவதி, சத்தியபாமா, காளிந்தி, மித்திர விந்தை, பத்திரை மற்றும் இலக்கணை என்று எட்டு மனைவியரும் உளர். இவையும் போதாதென்று 16,108 கோபியரோடு கொஞ்சி விளையாடி மகிழ்ந்தவன். இவனிடம் காமுற்றதுதான் பெரியாழ்வார் வழி வந்தவளின் பெருங்குணம்.
தோழியர்களை, நீராட எழுப்பிய ஆண்டாள் ஒரு கால கட்டத்தில் கண்ணனையே எழுப்ப முற்படுகிறாள்.

ஆண்டாள் அருளிய!!! திருப்பாவையில் பத்தொன்பதாம் பாடலைப் பார்த்தால் பெரியாழ்வார் வழி வந்தவளின் பெருமை அறியலாம்.
"குத்துவிளக்கெரிய கோட்டுக்கால் கட்டிலின் மேல்
மெத்தென்ற பஞ்சசயணத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்
மைத்தடங் கண்ணினாய் நீஉன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ வொட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லையால்
தத்துவ மன்று தகவேலோ ரெம்பாவாய்."
கண்ணனின் மாளிகைக்குப் போகிறாள் ஆண்டாள். அங்கு கண்ணன் தன் மணையாளோடு மஞ்சத்தில் உறங்கிக் கொண்டிருக்கிறான். இந்தக் காட்சியைக் காண்பதே பண்பாடற்றதென்று ஆண்டாளுக்குத் தெரியவில்லை. பெரியாழ்வார் வழி வந்தவள் அப்படித்தானே இருக்க முடியும்.
பார்த்துத் தொலைந்தாளே, அதை வெளியே சொல்வதைத் தவிர்த்திருக்கலாம். அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறாள்.
நந்தகோபனின் "படுக்கையறையில் விளக்குகள் ஒளி உமிழ, யானையின் தந்தத்தால் கடையப்பட்ட கால்களைக் கொண்ட கட்டிலில், ஐந்து மென்மையான பொருள்களால் உருவாக்கப்பட்ட பஞ்சணையின்மேல் (அன்னத் தூவி, இலவம் பஞ்சு, செம்பஞ்சு, மயில் தூவி மற்றும் வெண்பஞ்சு), கொத்தாக மலர்களைச் சூடியிருக்கும் கூந்தலையுடைய நப்பின்னையின் கொங்கையின்மேல் தலை வைத்துத் துயில் கொள்ளும் விரிந்த மார்பை உடையவனே வாய் திற" என்று புலம்புகிறாள்.
நந்தகோபனுக்குத் தலை சாய்க்க இடமில்லாமல் நப்பின்னையின் கொங்கைமேல் தலைவைத்துத் துயின்றதை சற்றும் பண்பற்றுப் பார்த்து மகிழ்ந்திருக்கிறாள். இவள்தான் பெரியாழ்வார் வழி வந்த பெருந்தகை.
இவளைப்போல நம் பிள்ளைகள் இல்லையாம்.
இதுவெல்லாம் மிகச் சாதாரணம். 'நாச்சியார் திருமொழி'யில் ஆண்டாள் அற்புதம் போங்கள்.
47 ஆம் பாடலில்,
"எத்திசை யுமமர பணிந் தேத்தும்
இருடீகே சன்வலி செய்ய
முத்தன்ன வெண்முறு வற்செய் வாயும்
முலையு மழகிழந் தேன்நான்
கொத்தலர் கோவில் மணித்தடம் கண்படை
கொள்ளு மிளங்குயி லேஎன்
தத்துவ னைவரக் கூகிற்றி யாகில்
தலையெல்லாம் கைம்மாறி லேன்." என்று பிதற்றுகிறாள்.
எல்லாத் திசைகளிலிருந்தும் அமரர் பணியும் என் ரிசிகேசனைக் காணாமல் மனம் வலிக்கிறது. முத்தைப் பொன்ற பற்களும், நகை செய்யும் என் செவ்வாயும் மட்டுமன்றி என் வன முலைகளும் அழகிழந்தன. கொத்துக் கொத்தாக மலர்கள் மலர்கின்ற சோலையில் உறங்கும் குயிலே! என் தத்துவனை வரக் கூவுவாய் எனில் காலமெல்லாம் என் தலையை உன் பாதங்களில் வைத்து வணங்குவேன் என்கிறாள்.
அடுத்த பாடலைக் காமத்தின் கடை விளிம்பில் நின்று பாடுகிறாள் பெரியாழ்வாரின் வழி வந்தவள்.
"பொங்கிய பாற்கடல் பள்ளிகொள் வானைப்
புணர்வதோ ராசயி னால்என்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்
தாவியை யாகுலஞ் செய்யும்
அங்குயி லே!எனக் கென்ன மறைந்துறைவு
ஆழியும் சங்குமொன் தண்டும்
தாங்கிய கையவ னைவரக் கூவில்நீ
சாலத் தருமம் உறுதி."
காதல் மீதுற்றுக் காமம் கொண்டு புண்ணியனைப் புணரும் எண்ணம் புறப்படுகிறது அவளுக்கு.
"பொங்கியெழுகின்ற பாற்கடலில் அரவணையில் பள்ளி கொண்டிருப்பவனைப் புணரும் ஆசையில், என் கொங்கைகள் கிளர்ந்தெழுந்து சூடாகிக் குதுகலம் கொண்டு என் உயிரைத் துன்புறுத்துகிறது. அழகிய குயிலே! சக்கரமும் சங்கும் கதையும் கொண்டவனை வரக் கூவுவாய் எனில் உனக்குப் பெரும் புண்ணியம் உண்டாகும்." என்கிறாள்.
கண்ணன் வேறொருவளின் கொழுநன் என்பதைத் தெரிந்தும் அவனைப் புணர வேண்டும் என்று ஆசை கொண்டதாகப் பெரியார் வழி வந்த கன்னிப் பெண்கள் ஒருபோதும் கதைக்க மாட்டார்கள். அந்த ஆசையினால் தன் கொங்கைகள் சூடாகிக் குதுகலித்துத் தன் உயிரை வருத்துவதாக நாணமின்றிப் பறை சாற்ற மாட்டார்கள்.
இந்தப் பெருங்குணம் துளசி மாடத்தில் கிடந்த பெரியாழ்வார் வழி வந்தவளுக்கே உரித்து.

கருத்துகள் இல்லை: