'பள்ளிக்கு 5 நிமிடம் தாமதமாக வந்த நரேந்தர் மற்றும் இன்னும் சில மாணவர்களை மைதானத்தில் நிற்க வைத்தார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஜெய்சிங். அந்த மாணவர்களின் கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு முட்டிபோட்டு மைதானத்தை வாத்துபோல (டக்வாக்) சுற்றி வர வேண்டும் என்று உடற்கல்வி ஆசிரியர் தெரிவித்ததாகவும், அதன்படி மாணவர்களும் மைதானத்தை சுற்றி வந்துள்ளனர். அப்போது நரேந்தர் மற்றும் இரண்டு மாணவர்கள் மைதானத்தில் மயங்கி விழுந்துள்ளனர். இதனால், சக மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து மயக்கமடைந்த மாணவர்களுக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற இரண்டு மாணவர்களுக்கு மயக்கம் தெளிந்துள்ளது. ஆனால், நரேந்தருக்கு மயக்கம் தெளியவில்லை. இதனால் தனியார் மருத்துவமனைக்கு நரேந்தரை அழைத்துச் சென்றுள்ளனர். அதன்பிறகு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்' என்று சக மாணவர்கள் முரளியிடம் தெரிவித்துள்ளனர். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த முரளி, திரு.வி.க.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், உடற்கல்வி ஆசிரியர் ஜெய்சிங் மற்றும் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்துள்ளார்.

இந்தப் பள்ளியில் கூடுதலாக கல்விக் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக சமூகசேவகர் தேவராஜன், சென்னை உயர் நீதிமன்றத்திலும், கல்விக் கட்டண நிர்ணய குழுவிடமும் புகார் அளித்தார். அவரிடம் பேசினோம். "இந்தப் பள்ளியில் என்னுடைய மகன் கடந்த 2013-14 கல்வி ஆண்டில் படித்தான். அப்போது, அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தைவிட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதுகுறித்து கல்விக் கட்டண நிர்ணயக் குழுவிடம் புகார் அளித்தேன். புகாரை விசாரித்த குழு, கூடுதலாக கட்டணம் வசூலித்த ஒரு கோடியே 65 லட்சம் ரூபாயை திரும்ப கொடுக்குமாறு தெரிவித்தது. அதை எதிர்த்து பள்ளி தரப்பில் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, கட்டணத்தை திரும்ப கொடுக்கச் சொல்லும் அதிகாரம் கல்விக் கட்டண நிர்ணய குழுவுக்கு இல்லை என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து, கட்டணத்தை திரும்ப கொடுக்கச் சொல்லும் அதிகாரம் யாருக்கு உள்ளது என்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தேன். அந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன், இந்தப் பிரச்னை தொடர்பாக தனி அலுவலரை நியமிக்க வேண்டும் என்றும் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு ஒன்றை அமைக்கவும் சில நாள்களுக்கு முன்பு உத்தரவிட்டார்.
பள்ளிக்கு எதிராக நான் புகார் கொடுத்ததால் என்னுடைய மகனின் செய்முறை பயிற்சி மதிப்பெண்ணை குறைத்துவிடுவதாக பள்ளி நிர்வாகம் மிரட்டியது. அதுதொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தேன். அதன்பிறகு பள்ளி நிர்வாகம் சார்பில் மதிப்பெண் குறைக்கப்படாது என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டதோடு, மன்னிப்பும் கேட்டனர். இந்தப் பள்ளியில் மாணவர்களுக்குக் கொடுக்கப்படும் தண்டனைக்கு அளவே கிடையாது. பத்தாம், பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் குறைந்த மதிப்பெண் எடுக்கும் பெற்றோர்களை அழைத்து பள்ளி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தும். அப்போது, உங்களுடைய மகனின் டி.சி.யை வாங்கிக் கொள்ளுங்கள் என்று மிரட்டும்தொனியில் பேசுவார்கள்.
ஆள்பலம், சிபாரிசு, பணபலம் இருந்தால் மட்டுமே தொடர்ந்து அந்தப் பள்ளியில் படிக்க முடியும். குறைந்த மதிப்பெண் எடுத்திருந்தாலும் நன்கொடை கொடுத்தால் மீண்டும் பள்ளியில் சேர்த்துக் கொள்வார்கள். நன்கொடைக்கு ரசீது எதுவும் வழங்கப்படாது. இந்தப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சில ஆசிரியர்கள் கொடுக்கும் தண்டனையால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சரியாக பாடம் படிக்கவில்லை என்றால்கூட உடற்கல்வி ஆசிரியர் தண்டனை கொடுப்பாராம். மேலும், சக மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்துவார்களாம். இதனால் வேதனையோடு பல மாணவர்கள் அங்கு படித்துவருகின்றனர். எனவே, மாணவன் நரேந்தர் மரணத்துக்கு நீதிகிடைக்க வேண்டும். அதோடு பள்ளியில் நடந்துவரும் அடாவடிகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார்.
நரேந்தரின் தாத்தா பாலமணியிடம் பேசினோம். "என்னுடைய பேரன் நரேந்தர், சரியான நேரத்துக்குத்தான் ஸ்கூலுக்குச் செல்வான். சம்பவத்தன்று 5 நிமிடம் தாமதமாகியிருக்கிறது. நரேந்தரைப் போல 6 மாணவர்களுக்கு உடற்கல்வி ஆசிரியர், டக்வாக் தண்டனை கொடுத்துள்ளார். அதில், மூச்சுத்திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே நரேந்தர் இறந்துவிட்டார். நரேந்தர் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று மக்கள் போராடிவருகின்றனர். உடற்கல்வி ஆசிரியரை கைது செய்தால் என்னுடைய பேரன் உயிரோடு வந்துவிடுவானா" என்றார் கண்ணீருடன்
சி.சி.டி.வி. காட்சிகள் அழிப்பு?
மாணவன் நரேந்தர் இறந்ததும், பள்ளியில் உள்ள சிசிடிவி. கேமரா காட்சிகளில் முக்கியமானவை அழிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், மாணவன் நரேந்தர் தொடர்பான சில வீடியோ காட்சிகள் போலீஸாரிடம் சிக்கியுள்ளன. அதன்அடிப்படையிலேயே பள்ளி முதல்வர் மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். நரேந்தர் மரணத்தில் போலீஸார் நடவடிக்கை எடுக்க முதலில் தயங்கியதும் மக்கள் காவல் நிலையத்தை நேற்றிரவு முற்றுகையிட்டனர். அதன்பிறகே, உடற்கல்வி ஆசிரியர் ஜெய்சிங் கைதுசெய்யப்பட்டுள்ளார். மாணவன் நரேந்தரின் இறுதிச்சடங்கு இன்று மாலை நடப்பதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக