வியாழன், 12 அக்டோபர், 2017

டிசம்பர் 31க்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

நக்கீரன் : டிசம்பர் 31க்குள் சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஜெயலலிதா. அவரது மறைவை அடுத்து அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்திருந்த சூழ்நிலையில் இந்தத் தொகுதிக்கு ஏப்ரல் 12 தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதிமுக அம்மா அணியின் சார்பில் டிடிவி தினகரன், அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், பாஜக சார்பில் திரைப்பட பின்னணிப் பாடகர் கங்கை அமரன், தேமுதிக சார்பில் மதிவாணன், மார்க்சிஸ் கட்சி சார்பில் லோகநாதன் உள்பட 62 பேர் போட்டியிட்டனர். ஏப்ரல் 12 தேதி நடைபெறவிருந்த இடைத்தேர்தலை ரத்து செய்து தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. மேலும், பணம் கொடுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் பெருமளவில் கிடைக்கப் பெற்றது. இதன் அடிப்படையில் ஆர்.கே.நகர் தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் சுட்டிக் காட்டியது. மேலும், உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. இந்த நிலையில் டிசம்பர் 31க்குள் சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: