வெள்ளி, 13 அக்டோபர், 2017

ஜப்பான் தமிழன் !!! தவில் வித்வான், தமிழக மாப்பிள்ளை...Thavil and Tamil: the twin passions of a Japanese

நக்கீரன் :உலகமே அவரவர் அடையாளங்களைத் தேடி அணிந்துகொண்டிருக்கும்
காலமிது. மொழி, இனம், தேசம்  என பற்றுகள் அளவுக்கு மீறித்  தூண்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இப்படியிருக்கும்போது, பிறப்படையாளத்தை  மறந்து, தேசம் கடந்து, தனக்குப் பிடித்த இன்னொரு மொழி கற்று, கலை கற்று, திருமணம் செய்துகொண்டு  அங்கேயே வாழும் மனம் அரிதானதே.
ஜப்பான் தமிழன்" ஹிடனோரி இஷி... இவரை நான், எனது  பள்ளிப்பருவத்தில் தஞ்சையில்  இருந்த பொழுது,  தவில் வித்துவான் கோவிந்தராஜன் அவர்களின் வீட்டு வாசலில் தான்  சந்தித்தேன். அவரது  முகவரி தேடி அங்கு  நின்று கொண்டிருந்தார். நான் பள்ளி முடித்துவிட்டு வீடு திரும்பியபோது  தவில் வித்துவானின் வீடு எங்கே என்று  என்னிடம் ஆங்கிலத்தில் விசாரித்தார்.  ஆச்சரியமடைந்த நான், சிரிப்பை அடுக்கிக்கொண்டே   நானும் பின்னால் தான் என்று ஒரு தடுமாற்றத்துடன் சொன்னேன்.


 'தேங்க்  யூ'னு  சொல்வார் என்று  பார்த்தால்,  'நன்றி நண்பா' என்று   சொல்லிவிட்டுப் போய்விட்டார்.  ஆச்சரியத்துடன்  அங்கிருந்து நானும் சென்றுவிட்டேன். பின்னர் அவருடனான நட்பு கிடைத்தது. அதன் பின்னர் அவரும்  சங்கீதம், கச்சேரினு போய்ட்டாரு நானும் பல  ஆண்டுகள் பார்க்கல. மீண்டும் பத்து ஆண்டுகள்  கழித்து  ஒரு தவில் வித்வானாகவும், தமிழ்நாட்டின் மாப்பிள்ளையாகவும் அவரை சந்தித்தேன். ஆம், இரண்டு மாதங்களுக்கு முன் சரண்யா என்ற தமிழ்ப் பெண்ணைத் திருமணம்  செய்துகொண்டார். சென்னையில், ஒரு ஜப்பானிய நிறுவனத்தில் வாடிக்கையாளர் சேவைப் பிரிவில் பணிபுரிகிறார்.

ஒரு விடுமுறை நாளின்  மதிய வேளையில் அவரின் வீட்டிற்கு நானும் என் நண்பனும் சென்றோம். முதல் சந்திப்பைப்  போலவே அதே வணக்கத்துடன், அதை விட  நட்பான சிரிப்புடன்  வரவேற்றார்.  'பத்மஸ்ரீ'  தவில் வித்வான் வலயப்பட்டி சுப்ரமணியத்தின்  இசை வீட்டினுள் ஒலித்துக்  கொண்டிருந்தது. தன் மனைவியிடம் அறிமுகம் செய்துவைத்தார். அவர் பேசிய தமிழை  என் நண்பன் சற்று ஆச்சரியத்துடன் ஆசையுடனும்    பார்த்துக்கொண்டிருந்தான். நான்  அவரிடம் கேள்விகளை கேட்கத்  தொடங்கினேன்.




ஹிடனோரி... நீங்க எப்ப இந்தியாவுக்கு வந்தீங்க... இந்திய இசை மீது ஆர்வம் எப்படி வந்துச்சு?

சிறு புன்னகையுடன் பேசத்தொடங்கினார்.... என் பெயர் ஹிட்டனோரி இஷி. ஜப்பான்ல 'கமக்குறா'  என் ஊரு. டோக்கியோல இருந்து  ஐம்பது கீ.மீ  தூரத்துல இருக்கு.  எங்க ஊருல என் நண்பர்கள்  ஒரு இசை குழு வச்சிருந்தாங்க அதுல எனக்கு வாசிக்கனுன்னு ஆசை. ஆனா எனக்கு அப்ப எந்த இன்ஸ்ட்ருமெண்டும்  வாசிக்கத் தெரியாது  (சிரிக்கிறார்).  நானும் என்
நண்பணும்  ஜப்பான்ல நடந்த தபேளா வித்வான்  ஜாஹீர் உசைனோட இசை நிகழ்ச்சிக்குப்  போனோம். அப்ப தான் இசை மேல இருந்த ஆர்வம் இன்னும் அதிகமாயிடுச்சு. அப்புறம் இந்தியாவுக்கு நானும் என் நண்பன் கோகேவும் சுற்றுலா வந்தோம். அப்ப கோகே  'நீ தபேளா
கத்துக்கனு' சொன்னாரு. நானும் முயற்சி பண்ணுவோம்னு ஜப்பான் போயிட்டு திரும்ப இசை படிக்க  சென்னைக்கு வந்துட்டேன்.  நான் முதலில்   கஞ்சிரா வாசிக்கக்  கத்துக்கிட்டேன். என்னோட முதல் குரு திருவல்லிக்கேணி சேகர் அவர்கள் தான்.

உங்களுக்குத்  தமிழ் பேச யாரு சொல்லித்தந்தது?

தமிழ் பேச எனக்கு சொல்லித்தந்து தைரிய நாதன். என் கூட சங்கீதம் படிச்சவரு. அப்புறம் உங்க கூடலாம் பேசிப்  பேசி  தமிழ் கத்துக்கிட்டேன். கொஞ்சம் கொஞ்சம் தமிழ் படிக்கவும் செய்வேன். இன்னும் நல்லா பேசணும்ங்குற ஆசை இருக்கு. கண்டிப்பா  நல்லா  கத்துக்குவேன்.

தவில் வித்துவான் ஆகணும்னு எப்போ முடிவு பண்ணீங்க?

சென்னையில கஞ்சிரா படிக்கும்போதே தவில் வாசிக்க கத்துக்கணும்ங்குற எண்ணம்  இருந்துச்சு. அந்த நேரத்துல தான் அடையார்ல உள்ள யூத் ஹாஸ்டல்ல வருஷா  வருஷம் 'ஹம்சத்துவானி இசை நிகழ்ச்சி' நடக்கும். அதுல தான் கோவிந்தராஜன் சார் தவில் கச்சேரி நடந்துச்சு. அதுக்கு நான் போயிருந்தேன்.  அப்ப சார் வாசிச்சத கேட்டோன இவுங்கள்ட்ட தான் நாம தவில் கத்துக்கணும் அப்டினு முடிவு பண்ண. அப்புறம்  சார் பத்தி விசாரிச்சு அட்ரஸ்  வாங்கிட்டு, சார பாக்க தஞ்சாவூர் வந்தேன்.  அப்ப சார் சொன்னாங்க 'நான்   திருவையாறு மியூசிக் காலேஜ்ல ஆசிரியரா  இருக்கேன்,  நீ அங்க சேர்ந்து படி'னு.  நானும் சென்னைக்குப்  போய்ட்டு திரும்பி   தஞ்சாவூர் வந்து  சார் வீட்ல தங்கி தவில் கத்துக்கிட்டேன். அப்புறம்  திருவையாறு மியூசிக் காலேஜ்ல 3 வருஷம் டிப்ளமா முடிச்சேன்.  சிதம்பரம் மியூசிக் காலேஜ்ல பி .ஏ மியூசிக் முடிச்சிருக்கேன்.>உங்களோட முதல் கச்சேரி எது ?என்னோட முதல் கச்சேரி, ஒரு திருமணத்துல வாசிச்சேன்.  அப்புறம்  நிறைய கோவில்கள்ல வாசிச்சிருக்கேன். தஞ்சை பெரிய கோவில், சமயபுர மாரியம்மன் கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில்... இந்த கோவில்களிலெல்லாம் வாசிச்சிருக்கேன்.


தமிழ் மக்கள் எப்படி உங்களிடம் பழகுறாங்க  ?

தமிழ் மக்கள் ரொம்ப பாசமானவங்க. வீட்டுக்குப்  போனா 'வாங்க வாங்க'னு சொல்லி வரவேற்பாங்க. அது மட்டுமல்லாமல் நல்லா  நட்பா இருப்பாங்க. தமிழ்நாட்டு  மக்களும்  பிடிக்கும், அவர்களின் உணவும் ரொம்ப பிடிக்கும்.  இட்லி, மீன் குழம்பு, உப்புமா, உருண்டைக் குழம்பு இதெல்லாம் நல்லா இருக்கும்.

தமிழ் பொண்ண கல்யாணம் பண்ணியிருக்கீங்க...  அதைப்  பத்தி சொல்லுங்க ?

நான் தஞ்சாவூர், சிதம்பரம், இந்த இரண்டு  ஊர்லயும்  இருந்தப்ப பொண்ணுங்க
காலையில எழுந்து தண்ணி ஊத்தி கோலம் போட்டு சாமி கும்பிடுவாங்க. அந்தப் பழக்கம் எனக்கு எதுனாலயோ பிடித்தது. அப்புறம்  நல்லா சமைப்பாங்க.  அதனால தான் கல்யாணம் பண்ணா தமிழ் பொண்ண கல்யாணம் பண்ணனும்னு முடிவு பண்ணி  'மேட்ரிமோனி'ல  கொடுத்தேன். அதுல பாத்துட்டு பொண்ணோட  அம்மா தான் முதல பேசுனாங்க. அப்புறம் நாங்க இரண்டு பேரும்  மீட் பண்ணோம். இவுங்க என்னை   ஓகே சொன்னாங்க. எங்க வீட்ல சொன்னப்ப,  'உன் இஷ்டம்'னு  சொல்லிட்டாங்க. என் குரு  கோவிந்தராஜன் சார் குடும்பமும்  இவுங்க குடும்பமும் பேசி கல்யாணம் முடிவு பண்ணாங்க. அப்புறம், கடந்த  ஆகஸ்ட் 31ஆம் தேதி  கல்யாணம் முடிச்சு தமிழ்நாட்டு மாப்பிள்ளை ஆயாச்சு.

தமிழ் நாட்ல பொண்ணு எடுத்தவர்கிட்ட  பேசுனா போதுமா? ஜப்பான் மருமகள்ட்டயும் பேசனும் என்று  அவர் மனைவியிடம்,  ஹிடனோரி பற்றியும் அவருடனான வாழ்க்கை பற்றியும் சொல்லும்படி கேட்டேன்.

என் பெயர் சரண்யா அருணாச்சலம், ஆனால் இப்ப சரண்யா இஷி.  முதல்ல போன்ல அம்மாகிட்ட  பேசுனாங்க. அவுங்க சொன்ன மாதிரி  மீட் பண்ணி பேசுனோம்.  நம்ம கலாசாரத்த நம்மல விட அதிகமா  மதிப்பாரு. வெளிப்படையான  பேசுவாரு, 'நாம எல்லாருக்கும் நன்றியோட இருக்கனும்'னு அடிக்கடி  சொல்லுவாரு. இதெல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சது. அவர கல்யாணம் பண்ண காரணமா இருந்தது. ஆனாலும், இவருக்கு கல்யாணம் பண்ணி தர எங்க வீட்ல கொஞ்சம் பயந்தாங்க, தயங்குனாங்க. ஆனா  நான் சம்மதிக்கவச்சுட்டேன். வீட்ல இவருக்கும் எனக்கும் ஜாதகம் பாத்தாங்க. அவரு பிறந்தநாள், நேரம் வச்சு பார்த்தப்ப, ரெண்டு பேருக்கும் பத்து பொருத்தம் இருந்தது. அவுங்களும் ஒத்துக்கிட்டாங்க.  கல்யாணம் ஆகி அவரு தமிழ்நாட்டு மாப்பிள்ளை ஆகிட்டாரு, நான் ஜப்பான் மருமகள் ஆகிட்டேன்.

நேர்காணல் முடிந்ததும் ஹிடனோரியை  ஒரு சில புகைப்படங்கள் எடுத்தோம். கூச்சப்பட்டார்...  பின்னர் நம் கலாச்சாரப்படி,  நானும் என் நண்பனும் செல்பி எடுத்துக்கொண்டோம். தனது வேர்களை முழுதாக  விட்டு வந்ததைப் பற்றிக் கேட்டபொழுது, தனக்குப் பிடித்த வகையில், பிடித்த வழியில், மொழியில்  உடன் வாழ்பவர்கள் மீது  அன்பு செலுத்தி வாழ்கிறேனென்றும் அதற்கு மேல் பெரிய சிந்தனையெதுவுமில்லையென்றும் தெரிவித்தார். விடைபெறும்போது தோன்றியது, ஹிடனோரி இஷி, எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய  'ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்' நாவலின் புகழ் பெற்ற பாத்திரமான 'ஹென்றி'யின் வாழும் வடிவமென்று.

ஹரிஹரசுதன்

கருத்துகள் இல்லை: