
nakkeeran : சுட்டுக்கொல்லப்பட்ட கன்னட பத்திரிகையாளர் கௌரி லங்கேஷின் பத்திரிகையை தொடர்ந்து நடத்த அவருடைய நண்பர்களும் ஊழியர்களும் உறுதி எடுத்திருக்கிறார்கள்.
கடந்த செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி பெங்களூருவில் தனது வீட்டின் முன் அடையாளம் தெரியாத நபர்களால் கௌரி சுட்டுக் கொல்லப்பட்டார். புரட்சிகரமான பத்திரிகையை நடத்தி வந்த அவர் மதவெறியர்களால் பலமுறை அச்சுறுத்தப்பட்டு அதன் தொடர்ச்சியாக சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவர் நடத்தி வந்த கௌரி லங்கேஷ் என்ற வார பத்திரிகை மறுநாள் வந்தது. அதன்பிறகு அவருடைய மரணச் செய்தியோடு செப்டம்பர் 12 ஆம் தேதி வெளிவந்தது. அதன்பிறகு இதழ்கள் வெளிவரவில்லை. இந்நிலையில் இம்மாத தொடக்கத்தில் கௌரிக்கு அன்னா பொலிட்கோவ்ஸ்கயா விருது வழங்கப்பட்டது.
கௌரியின் பத்திரிகை அலுவலகத்தில் நிருபர்கள் மற்றும் ஊழியர்கள் என்று மொத்தம் 35 பேர் வேலை செய்தனர். ஆனால், பத்திரிகையின் பெரும்பாலான வேலைகளை கௌரியே முடிவு செய்வார்.
இந்நிலையில் அவர் இல்லாத சூழலில் பத்திரிகையை தொடர்ந்து நடத்துவது குறித்து அவருடைய நண்பர்களும், ஊழியர்களும் ஆலோசனை நடத்தினர்.
கௌரியின் லட்சியத்தை நிறைவேற்றவும் அச்சுறுத்தலுக்கு அஞ்சவில்லை என்பதை நிரூபிக்கவும் அந்த பத்திரிகையை தொடர்ந்து நடத்த முடிவு செய்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
நவம்பர் மாதம் மத்தியிலிருந்து மீண்டும் கௌரி லங்கேஷ் பத்திரிகை வெளிவரும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக