ஞாயிறு, 16 அக்டோபர், 2016

48 மணி நேர ரயில் மறியல்: திமுக-வோடு களமிறங்கும் மாணவர் அணி!

மின்னம்பலம்.காம்: தமிழ்நாடு விவசாய சங்க கூட்டு இயக்கத்தின் சார்பில் நாளை நடைபெறவிருக்கும் 48 மணி நேர தொடர் ரயில் மறியலில் திமுக பங்கேற்கும் என்று திமுக தலைவர் கருணாநிதி ஏற்கெனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் திமுக மாணவர் அணியும் இந்த போராட்டத்தில் களமிறங்க தயாராகியுள்ளது. இதுகுறித்து கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், ‘காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக மத்திய அரசு அமைக்க வேண்டுமென்று வலியுறுத்துவதற்காக, தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் சார்பில் வரும் அக்டோபர் மாதம் 17, 18 ஆகிய நாட்களில் 48 மணி நேரம் தொடர் ரயில் பாதை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. அதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவும், பங்கேற்பும் கேட்டு கொடுத்துள்ள கடிதத்தினை ஏற்று, அவர்கள் நடத்தும் ரெயில் பாதை மறியல் போராட்டத்தில் திமுக கலந்து கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கழகத் தோழர்களும், மாவட்டக் கழகச் செயலாளர்களும் ஆங்காங்கு இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரிக்க வேண்டும்’ என்று கலைஞர்  கருணாநிதி கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து திமுக மாணவர் அணி செயலாளர் இள புகழேந்தியும் அறிக்கை வெளியிட்டுள்ளார். ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் 48 மணி நேர தொடர் ரயில் பாதை மறியல் போராட்டம் நடைபெறுகிறது. இதில் திமுக கலந்து கொள்ளும் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த விவசாய அமைப்புகள் கலந்துரையாடல் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்போராட்டத்தில் மாணவர் அணி நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும். எனவே, டெல்டா மாவட்டங்களில் உள்ள மாணவர் அணி நிர்வாகிகள் மற்றும் மாணவர் அணி நண்பர்கள் பெருந்திரளாக ரயில் பாதை மறியல் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்’ என்று இள.புகழேந்தி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: