புதன், 7 செப்டம்பர், 2016

காவிரிப் பிரச்சினையை இனவாத அரசியல் தீர்க்குமா ?

வேறு வழியின்றி விநாடிக்கு 15,000 கன அடி காவிரி நீரை திறந்து விடுகிறது, கர்நாடக அரசு. மாண்டியா, மைசூரூவில் நடக்கும் எதிர்ப்பு போராட்டங்கள், அனைத்துக் கட்சி கூட்டம் எல்லாவற்றையும் தாண்டி உச்சநீதிமன்றத்தின் உத்தரவிற்கு ஏற்ப கர்நாடக காங்கிரசு அரசு திறந்து விடுகிறது. இருப்பினும் இந்த நீர் கூட தமிழகத்தின் குறுவை சாகுபடிக்கு போதுமானதல்ல என்று விவசாயிகள் கூறுகின்றனர். தமிழக தரப்பில் விநாடிக்கு 26,000 கன அடி நீர் கேட்கப்பட்டது. கர்நாடகம் 10,000 அடி என்று சொன்னது. இறுதியில் இரண்டும் நடுவில் உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம்.
அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க, மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் நீர் திறப்பதை எதிர்த்தன. ஆனால் 2012-ம் ஆண்டில் இதே போன்றொரு முடிவைத்தான் அப்போதைய பா.ஜ.க அரசு எடுத்ததாக முதல்வர் சித்தராமையா நினைவுபடுத்துகிறார். உண்மைதான், அதே போன்று அப்போது அந்த முடிவை எதிர்த்து காங்கிரசு போராடியதும் உண்மைதான்.
காவிரியை வைத்து கர்நாடக கட்சிகள் நடத்தும் இந்த போங்காட்டம் ஒருபுறமிருக்க இந்த பிரச்சினை குறித்து அவர்கள் தரப்பில் முன்வைக்கும் வாதம் என்ன?

ஒராண்டின் சராசரியான பருவமழையை அதாவது ஜூன் முதல் மே வரை கணக்கிட்டால் கர்நாடக அணைகளில் வரும் நீரின் அளவு 242 ஆயிரம் மில்லியன் கன அடி. அதன்படி 2007 நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு படி ஒராண்டில் கர்நாடக அரசு 192 டி.எம்.சி நீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும்.
ஆனால் தற்போது போதுமான நீர் வரத்து இல்லை, தங்களிடம் 51 டி.எம்.சி நீர் மட்டுமே உள்ளது என வாதிடும் கர்நாடக அரசு, அதுவும் தென் கர்நாடக மக்களின் குடிநீர் தேவைக்கு மட்டுமே போதுமானது என்கிறது. சென்ற ஆண்டு கிருஷ்ணராஜ சாகர் அணையில் 25 டி.எம்.சி நீர் இருந்தாலும் இந்த ஆண்டு 18 டி.எம்.சி மட்டுமே உள்ளது என்றும் வாதிடுகிறது.
இதை இன்னும் அடுத்த கட்டமாக விரிக்கும் சில அறிஞர்கள், நடுவர் மன்றம் நீர் அதிகம் உள்ள காலத்தை கணக்கிடுவது போல நீர் வறண்ட வருடங்களை கணக்கிடவில்லை என்கிறார்கள். இதுதான் காவிரி முரண்பாட்டிற்கு காரணம் என்று மேதாவித்தனமாகவும் பேசுகிறார்கள். கர்நாடகத்தைப் பொறுத்தவரை காவிரி தனது சொந்தம், தமிழகத்திற்கு தருவது தானம் என்ற மனநிலையை மக்களிடம் உருவாக்குகிறார்கள்.
காவிரி என்பது கர்நாடகத்திற்கு மட்டும் சொந்தமான நதியல்ல. சரியாகச் சொன்னால் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் சொந்தம். காவிரியின் அமைவிடம், ஆற்றின் ஓட்டம், வரலாற்று ரீதியான அதன் பயன்பாடு ஆகியவற்றை கணக்கில் கொண்டுதான் இந்த நான்கு மாநிலங்களின் காவரி நீர்ப் பகிர்வை முடிவு செய்ய முடியும்.
காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பின் படி பற்றாக்குறை இல்லாத ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு 419 டிஎம்சி, கர்நாடகாவுக்கு 270 டிஎம்சி கேரளாவுக்கு 30 டிஎம்சி, புதுச்சேரிக்கு 7 டிஎம்சி என்று காவிரியில் ஓடும் சராசரி அளவான 740 டிஎம்சி தண்ணீர் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்; பற்றாக்குறை ஆண்டுகளில் எவ்வளவு தண்ணீர் குறைகிறதோ அந்த பற்றாக்குறை இதே வீதத்தில் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்.
அதன்படி பார்த்தால் நீர் அதிகம் வந்தாலும் சரி, குறைவாக வந்தாலும் சரி தமிழகத்தின் பங்கு 58%, கர்நாடகவின் பங்கு 37%, கேரளாவின் பங்கு 4%, புதுச்சேரியின் பங்கு 1% தரப்படவேண்டும். ஆனால் கர்நாடக ஓட்டுப் பொறுக்கிகள் அனைவரும் இந்த உண்மையை மறுத்து ஏதோ காவிரியில் பஞ்சம், நீரில்லை, குடிநீருக்கு மட்டும்தான் இருக்கிறது என்று அயோக்கியத்தனமாக பேசுகிறார்கள், நியாயத்தை திரிக்கிறார்கள்.
ஒரு நதியின் தாழ்வாராப் பகுதியின் உரிமையை மறுக்கக் கூடாது என்பது உலகெங்கும் நதிப் பகிர்விற்காக உருவாக்கப்பட்டுள்ள பொது விதி. அதை கர்நாடகம் மறுப்பதே இந்த முரண்பாட்டின் அடிப்படையே அன்றி வறண்டு போன காவிரி அல்ல.
மேலும் முழு கர்நாடகமும் இதற்காக வீறு கொண்டு போராடவில்லை. மாண்டியா, மைசூரூ போன்ற காவிரிப் பாசன பகுதிகள் மட்டுமே போராடுகின்றன. அமைதிக் காலங்களில் 20 “பைட்டர்களோடு” உலா வரும் வாட்டாள் நாகராஜ் போன்ற இனவெறியர்கள் இத்தகைய காவிரி சீஸனில் அந்த இருபதை இருநூறாக்கலாமா என்று புடைக்கிறார்கள். இவர்களைப் போன்றவர்கள் தமது இனவெறி அரசியலுக்கு காவிரி வறண்டு போவதையே பெரிதும் நம்பியிருக்கிறார்கள்.
இந்த முரண்பாட்டை நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையில் தீர்ப்பதற்கு வக்கற்ற மத்திய அரசு மற்றும் உச்சநீதிமன்றம் தொடர்ந்து தற்காலிக உத்தரவுகளை போட்டு தீர்வை தள்ளிப் போகின்றன. ஒரு வகையில் இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு இத்தகைய நீர் தொடர்பான தேசிய இன முரண்பாடு அவர்களுடைய அனைத்தும் தழுவிய அடக்கு முறை மற்றும் சுரண்டல்களுக்கு வரம்பிற்குட்பட்ட அளவில் வலு சேர்க்கும். இது ஒரு துணைக் காரணம்.
தமிழகத்தைப் பொறுத்தவரை இதை தீர்க்காமல் வெட்டி நியாயத்தோடு இந்திய தேசியம் பேசும் கட்சிகளையும், அரசு, நீதி அமைப்புக்களையும் எதிர்த்துப் போராடுவதோடு தேவைப்பட்டால் பொருளாதார முற்றுகையும் கூட செய்ய வேண்டியிருக்கும். எனினும் இத்தோடு மட்டுமே இந்தப் பிரச்சினை முடிந்து விடாது. கர்நாடக மக்களிடம் தமிழகத்தின் நியாயம் குறித்து பிரச்சாரம் செய்வதையும் அதற்குரிய கருத்துப் போராட்டத்தை நடத்துவதும்தான் இறுதியில் நமது நியாயத்தை வெற்றிபெறச் செய்யும். ஏனெனில் ஒரு படை நடத்தி இந்த பிரச்சினையை தீர்க்க முடியாது. அதே நேரம் இந்திய தேசியத்திற்கு அத்தாரிட்டியாக இருக்கும் மத்திய அரசு சட்டப்படி நடக்க முடியவில்லை என்றால் அந்த வெட்டியான சட்ட அமைப்பை கலைப்பதுதான் சரி.
இதைத் தாண்டி தமிழின இனவாதிகள் பலர் காவிரி பிரச்சினையின் போது தமது இருப்பை காட்டிக் கொள்ள அதிக ஒலி கொடுக்கின்றனர். அத்தகைய நீர்த்துப் போன ஒலிகளில் ஒன்று “இனியாவது திராவிடம், இந்தியம் பேசுபவர்கள் திருந்தட்டும்” என்பது. மாண்டியா விவசாயிகளின் வாழ்வாதரப் பிரச்சினையாக காவிரி இருப்பதை இவர்கள் கன்னட மக்களின் இனப்பெருமை சார்ந்த முரண்பாடாக மாற்றுகிறார்கள். மேலும் மாண்டியா விவசாயிகளுக்கு காவிரி மட்டுமல்ல, மறுகாலனியாக்க நடவடிக்கைகளும் மிகப்பெரிய வில்லனாக அச்சுறுத்துகின்றது. அங்கேயும் விவசாயிகள் தற்கொலை நடக்கிறது.
640px-Kaviri_at_Thiruvaiyaruதமிழகத்திலேயே இத்தகைய நீர் பிரிக்கும் பிரச்சினைகள் கிராமம், மாவட்ட அளவில் இருக்கத்தான் செய்கின்றன. காவிரியின் கடைமடைப் பகுதிக்கு வந்து சேர வேண்டிய நீர் சமீப ஆண்டுகளாக வருவதில்லை, மேட்டூர் முதல் திருச்சி வரையிலான பகுதிகளிலேயே எடுத்துக் கொள்ளப்படுகிறது என்று தஞ்சை பகுதி விவசாயிகள் கருதுவதும் இருக்கத்தான் செய்கிறது.
ஒரு பொது நோக்கத்திற்காக தனது நுகர்வை சுருக்கியோ, ரத்து செய்தோ தேவைப்படும் மக்களுக்கு கொடுப்பது என்பது இரு தேசிய இனங்களுக்கு மட்டுமல்ல, ஒரு தேசிய இனத்திற்குள்ளேயே வந்தாக வேண்டிய பண்பாட்டு மாற்றமாகும். அதன்படி பார்த்தால் இனவாதமோ இனவெறியோ இதை ஒருபோதும் கொண்டு வராது.
சென்னை மழை வெள்ள நாட்களில் சீமானும் அவரது தம்பிகளும் ஒரு மொட்டை மாடியில் மூன்றுநாட்களாக சிக்கிக் கொள்கிறார்கள் என்று வைப்போம். அக்கூட்டத்தில் இரண்டு வட இந்திய குழந்தைகளும், மூன்று வயதான மலையாளிகளும், ஐந்து கன்னடத் தொழிலாளிகளான பெண்களும் உள்ளனர். மீதி இருபது பேர் ‘சுத்தமான’ தமிழர்கள், இளைஞர்கள் மற்றும் ஆண்கள். மூன்று நாட்களாக உதவிகள் வரப்போவதில்லை. இருப்பது ஐந்து கிலோ அரிசி மட்டுமே.
அதை யார் சமைத்து உண்ணுவது? தமிழகத்தை தமிழன் ஆண்டால்தான் விடுதலை எனவே இதை நானும், நாமும் மட்டுமே உண்ணுவோம் என்று சீமான் கூறினால் தம்பிகளே ஒத்துக் கொள்ளமாட்டார்கள். காரணம் குறிப்பிட்ட அவசர நிலையில் யாருக்கு பாதிப்பு யாருக்குத் தேவை என்பதை வைத்தே அத்தியவாசிய தேவைகளை அளிப்பது குறித்து முடிவு செய்ய முடியும். இதுதான் மனித குலம் தனது பரிணாம மற்றும் நாகரீக வளர்ச்சியில் கண்டடைந்த வரலாற்று முன்னேற்றம். இல்லையேல் கிழவிகள் வேட்டைக்கு பயன்படுவதில்லை என்று வேட்டை நாய்களுக்கு உணவாக போட்ட காட்டுமிராண்டி நிலையிலேயே நாம் இருந்திருப்போம்.
ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகள் 90-களில் நடத்திய இறால் பண்ணை அழிப்பு போராட்டத்தின் போது 1000-த்திற்கும் மேற்பட்ட தோழர்கள், மக்கள் இரு வார காலமாக திருச்சி சிறையில் இருந்தனர். சிறையில் தோழர்கள் ஒரு கமிட்டியை தெரிவு செய்து தமது சிறை வாழ்க்கையை நிர்வகித்தனர். அரசியல் ரீதியான உரை, கலைநிகழ்ச்சி மட்டும் அவர்களது நிர்வாக நடவடிக்கை அல்ல. சிறைவாசம் செய்யும் தோழர்களை பார்க்க வரும் உறவினர்கள் கொண்டு வரும் ரொட்டி, பழம், பிஸ்கெட்டு, பீடி, சிகரெட்டு அனைத்தையும் அந்தந்த தோழர்கள் மட்டுமே எடுத்துக் கொள்ள முடியாது. புகை வஸ்துக்கள் மட்டும் அப்படியே  சமமாக பிரிக்கப்பட்டு புகை பிடிப்போருக்கு கொடுக்கப்படும். ஒரு தோழருக்கு ஐந்து பீடிக்கட்டுக்கள் வந்தால் பிரித்த பிறகு அவருக்கு ஐந்து பீடிகள் மட்டுமே கிடைக்கும். உணவு வகைகளை அப்படி பிரிக்க முடியாது.
காரணம் சிறைக்கமிட்டி அந்த உணவு வகைகளை பிரித்து நோயுற்றோர், குழந்தைகள், முதியோர் என்று வரிசைப்படி விநியோகிக்கும். இலாபத்தை வைத்து மட்டும் சந்தையை நடத்தம் முதலாளித்துவத்திற்கு மாற்றான சோசலிச சமூகத்தின் பண்பாடு இது. ஆரம்பத்தில் இந்த முறை புதிதாக வந்த சில தோழர்களுக்கு உடன்பாடில்லை. நமது குழந்தைகளுக்கு வரும் பிஸ்கெட்டை வேறு நபர்கள் உண்ணலாமா என்று வெளியே தெரியாத ஏக்கமும், அவஸ்தையும் இருந்தது உண்மை. பிறகு நாட்பட அவர்கள் இதை உணர்ந்து ஏற்கிறார்கள். சிறை அனுபவம் குறித்து பேசும் போது சில புதிய பெண் தோழர்கள் தமது அனுபவமாக இதை பேசினர்.
தமிழகத்தில் வறண்ட மாவட்டங்கள் உள்ளது போலவே வளமான மாவட்டங்கள் உள்ளன. அனைத்து வசதிகளும் உள்ள நகரங்களைப் போலவே அடிப்படை வசதிகளே இல்லாத சிறுநகரங்கள் பல உள்ளன. வழுக்கிச் செல்லும் சாலைகளுக்கு இணையாகவே, கரடு முரடான சாலைகளும் உள்ளன. ஓட்டைக் கூரை பேருந்துகளோடு உல்லாச பேருந்துகளும் இங்கே ஓடுகின்றன. ஆக இதை சரியாக்குவது என்பது கிட்டத்தட்ட காவிரி நீரை பிரிப்பது மாதிரிதான்.
தேசிய இன விடுதலையோ இல்லை சமூத்தை அடியோடு மாற்றும் புரட்சிகளோ இத்தகைய சுயநலமறுப்பை நடைமுறையில் மக்களிடம் சாதிக்கும் போதே தமது நோக்கத்தில் வெற்றிபெறுகின்றன.
ஆகவே இனவெறியால் இருதரப்பு மக்களிடமும் பகை முரண்பாட்டைத்தான் தோற்றுவிக்க முடியும். அதே நேரம் தேசிய இனங்களின் சிறைக்கூடமாக இந்தியாவை வைத்திருக்கும் இந்திய அரசை எதிர்த்தும், இந்திய அரசின் உதவியோடு காவிரி நீரை மறுக்கும் கர்நாடக அரசை எதிர்த்தும் நாம் போர்க்குணமிக்க போராட்டங்களை நடத்த வேண்டும். மறுபுறம் கர்நாடக மக்களிடமும் பிரச்சாரம் செய்ய வேண்டும். இனவெறியர்களைத் தனிமைப்படுத்த வேண்டும்.வினவு.com

கருத்துகள் இல்லை: