செவ்வாய், 6 செப்டம்பர், 2016

குழந்தைகள் காப்பாளரான குற்றவாளி: பதவியின் விலை 8 கோடி .

mathivananசி.மதிவாணன் தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராக கல்யாணி மதிவாணனை நியமனம் செய்ததை நீதிமன்றம் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
கல்யாணியைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்பு மேற்படி ஆணையம் பற்றி கொஞ்சம் பார்க்க வேண்டும். கல்வி உரிமைச் சட்டத்தின் படி உருவாக்கப்பட்டதுதான் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம். அது சட்டத்தின்படி உருவான ஆணையம். Commissions for Protection of Child Rights Act என்ற 2005 ஆம் ஆண்டு மத்திய சட்டத்தின்படி மாநில சட்டத்தை உருவாக்கி, பின்னர் அதற்கான விதிகளை உருவாக்கி ஆணையத்தை தமிழ்நாட்டில் அமைத்தது 2012வது ஆண்டில்தான். அதாவது ஆணையத்தை உருவாக்க 7 ஆண்டுகள் ஆகிப்போகின.
கல்வி உரிமைச் சட்டத்தின் அமுலாக்கத்தைக் கண்காணிக்கவும் சட்டம் தொடர்பாக எழும் பிரச்சனைகளை கையாளவும்தான் இந்த ஆணையம் உருவாக்கப்பட்டது. உதாரணமாக, தனியார் பள்ளியில் சட்டத்தின்படி ஏழை மாணவர் சேர்க்கை நடக்கவில்லை என்றால் இந்த ஆணையத்திடம்தான் புகார் கொடுக்க வேண்டும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆணையத்தை உருவாக்க 7 ஆண்டுகள் ஆகின.

இப்போது கல்யாணி மதிவாணன் என்பவரை அதன் தலைவராக நியமனம் செய்துள்ளனர். அதுவும், அந்த பதவி காலியாக இருந்தது பற்றி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்ட பின்னர்தான் அவசர அவசரமாக நியமனம் நடந்தது. அம்மாவுக்கு மக்கள் மேல் உள்ள பாசம் நீங்கள் அறிந்ததுதானே? அதனால், ஒரு சமூக விரோதியை குழந்தைகள் காப்பாளராக நியமனம் செய்துள்ளார்.

கல்யாணி மதிவாணன் என்பவர் யார் என்று பார்ப்போம். அவர் நடமாடும் பல்கலைக்கழகமாக இருந்து, பின்னர் திண்ணைப் பள்ளிக்கூடம் ஆகி, அதன் பின் உதிர்ந்த மயிர் என்று ஜெயலலிதாவால் வர்ணனை செய்யப்பட்ட ‘திராவிட இயக்கத் தூண்‘ நெடுஞ்செழியனின் மருமகள். கடந்த சில ஆண்டுகளாக அதிமுக பிரமுகர். அம்மாவிற்கு மிக வேண்டப்பட்டவர். அதனால், அம்மாவிற்கு 8 கோடி கமிஷன் கொடுத்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவியை வாங்கியவர். கல்வித் தகுதி? விதிகளின் படியான தகுதி அவருக்கு இல்லை. இருந்தபோதும் பல்கலைக்கழகத்தைக் கொள்ளையடிப்பதற்கும், ஓபி, அம்மா, உயர் கல்வி அமைச்சர் என்று பிரித்துக்கொடுத்து லாபக் கணக்குப் பார்க்கவும் அவருக்கு ஆற்றல் இருந்தது.
அதுமட்டுமல்ல, தலித்துகளின் மீது வன்கொடுமை புரிந்ததாக அவர் மீது வழக்கு உள்ளது. அவர் காலத்தில் பல்கலைக்கழகம் சீரழிவதை எதிர்த்துப் போராடிய ‘Save MKU’இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சீனிவாசன் மீதான கொலை முயற்சி குற்றத்தில் முதல் குற்றவாளி அவர். இருந்தபோதும் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவியில் இருந்த அவரை ‘தமிழக காவல் தெய்வ‘த்தின் கட்டுப்பாட்டில் இருந்த காவல்துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதற்கிடையில், சட்டப்படியான தகுதி பற்றி கேள்வி எழுப்பிய சிலர் மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் வழக்கு தொடுக்க அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். பின்னர், உச்சநீதிமன்றம் சென்று ‘சட்டம் ஒரு இருட்டறை‘ என்ற அண்ணாவின் கூற்றை நிரூபித்த அம்மாவுக்கு அடுத்த அதிமுக பிரமுகர்களில் ஒருவாராகி, பதவியை மீண்டும் கைப்பற்றினார். ஜூலை 7, 2014 அன்று பல்கலைக்கழகம் திரும்பினார்.
kalyani
பல்கலைக்கழகத்தின் பள்ளி மாணவர்கள் வெய்யிலில் வாடி வதங்கியபடி ‘சின்ன‘ அம்மாவின் வருகைக்காகக் காத்திருந்தனர். அதனால், கல்யாணி மதிவாணன் மீது தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. குழந்தைகளின் மீது நடத்தப்பட்ட இந்த சித்திரவதையின் நாயகிதான் தற்போது ‘குழந்தைகளின் உரிமையைக் காப்பதற்கான ஆணையர்‘. அதன் பின் பள்ளிக் குழந்தைகளை வரவேற்புக்குப் பயன்படுத்தக் கூடாது என்று பள்ளிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை வெளியிட வேண்டியதாகியது.
இப்படியான, குற்றவாளி, தலித் விரோதி, குழந்தைகள் உரிமை மீறலுக்காக புகார் செய்யப்பட்டவர், ஊழல் பேர்வழி, போலிச் சான்றிதழ் கொடுத்த பிராடு பார்ட்டி என்ற தகுதிகள் உடைய கல்யாணி மதிவாணனை குழந்தைகள் உரிமை காக்கும் ஆணையர் ஆக்கினார் ஜெயலலிதா என்றால், ஒரு கேள்விதான் பாக்கியிருக்கிறது… பதவியின் விலை எத்தனை கோடி?
அதைவிட முக்கியமான கேள்வி.. தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா? குழந்தைகள் வாழ்க்கையைக் கூட வணிகமாக்கும் அம்மாவின் ஆட்சி பற்றிய விவரங்களை ஊடகங்கள் வெளிப்படுத்தாது ஏன்? கல்வியாளர்கள், குழந்தை உரிமை வீரர்கள், என்று பலரும் வாய் மூடியிருப்பதேன்?
சி.மதிவாணன், சமூக-அரசியல் செயல்பாட்டாளர்.   thetimestamil.com

கருத்துகள் இல்லை: