ஞாயிறு, 27 டிசம்பர், 2015

தொழிலதிபர் ஜிண்டாளுக்காக பிரதமர் மோடி பாகிஸ்தான் சென்றாரா....சர்ச்சை கிளம்பியுள்ளது


டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் திடீர் பாகிஸ்தான் பயணத்துக்கு ஏற்பாடு செய்ததே தொழிலதிபர் சஜ்ஜன் ஜிண்டால்தான் என தகவல்கள் வெளியாகியிருப்பது புது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ரஷ்யா, ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார் பிரதமர் மோடி. ஆப்கானிஸ்தான் பயணத்தை முடிக்கும் நிலையில் திடீரென ட்விட்டர் பக்கத்தில் தாம் பாகிஸ்தானுக்குப் போய்விட்டு நாடு திரும்புவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் மோடி. பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மிகச் சிறந்த ராஜதந்திரியாக மோடி திகழ்கிறார் என வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் புகழாரம் சூட்டினார். ஆனால் பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான சிவசேனா மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த திடீர் பயணத்தை மிகக் கடுமையாக விமர்சித்து வந்தன. Sajjan Jindal play secret Santa to Modi-Sharif? இந்த நிலையில்தான் மும்பையைச் சேர்ந்த இந்திய தொழிலதிபர் சஜ்ஜன் ஜிண்டால் தாம் நவாஸ் ஷெரீப்புக்கு பிறந்த நாள் வாழ்த்து கூற லாகூரில் முகாமிட்டிருப்பதாக ட்விட்டரில் பதிவிட்டதுடன் மனைவியுடன் செல்பி எடுத்தும் போட்டிருந்தார்... அவ்வளவுதான் வெடித்தது பஞ்சாயத்து... 
 
அண்மையில்தான் வட இந்திய ஊடகவியலாளர் பர்கா தத், நேபாளத்தில் நடைபெற்ற சார்க் மாநாட்டின் போது பிரதமர் மோடி- நவாஸ் ஷெரீப் இடையே ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்றது; இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றதே காத்மண்டுவில் உள்ள சஜ்ஜன் ஜிண்டாலுக்கு சொந்தமான நட்சத்திர விடுதியில்தான்... 
 
இப்பேச்சுவார்த்தைக்கும் சஜ்ஜன் ஜிண்டால்தான் ஏற்பாடு செய்திருந்தார் என தம்முடைய புத்தகம் ஒன்றில் பதிவிட்டிருந்தார். இதற்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்திருந்தது. தற்போது திடீரென பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ளும் நிலையில் சஜ்ஜன் ஜிண்டால் தாமும் லாகூரில் இருப்பதாக ட்வீட் போட பர்கா தத் சும்மா விடுவாரா? காத்மண்டுவில் பிரதமர் மோடியும் நவாஸ் ஷெரீப்பும் ரகசிய பேச்சுவார்த்தை நடத்த சஜ்ஜன் ஜிண்டால் காரணம் என நான் கூறியிருந்தேன்..அன்று வெளியுறவுத் துறை மறுத்தது.. இப்போது சஜ்ஜன் ஜிண்டால் லாகூரில் இருக்கிறார் என ட்விட்டரில் கொளுத்திப் போட்டார். அவ்வளவுதான், 
 
பாகிஸ்தானுக்கு அதிரடியாக போய் சிறந்த ராஜதந்திரியாக திகழ்கிறார் என்ற மோடிக்கு சூட்டப்பட்ட புகழ்மாலைகள் விமர்சனத்துக்குரியதாக மாறின... ஏற்கனவே அதானி குழுமத்தின் ஆதாயத்துக்காகத்தான் ஆஸ்திரேலியா பயணத்தையே மேற்கொண்டார் மோடி என்ற குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் தற்போது சஜ்ஜன் ஜிண்டால் என்ற தொழிலதிபருக்காக அபாயகரமான பாகிஸ்தான் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார் என எதிர்க்கட்சிகள் சாடத் தொடங்கின. 
 
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் ஷர்மா கூறுகையில், நவாஸ் ஷெரீப்புடன் டெல்லி, உஃபா, பாரீஸ் நகரங்களில் பேச்சுவார்த்தைகளை ரத்து செய்த மோடி இப்போது யூ டர்ன் அடித்திருக்கிறார். இந்த பாகிஸ்தான் பயணத்தில் சஜ்ஜன் ஜிண்டாலின் பங்கு என்ன? 
மிகத் தெளிவாகவே தெரிகிறது ஒரு தொழிபதிருக்காக பயணம்தான் இது.. நாட்டின் நலன் கருதி மேற்கொண்ட பயணம் இதுவல்ல என்பது.. 
 
வாஜ்பாய் லாகூர் பேச்சுவார்த்தையை நடத்திய பின்னரே கார்கில் போர் நிகழ்ந்தது.. மீண்டும் அப்படியான ஒன்றை கொண்டுவரப்போகிறாரா மோடி? 
 
கடந்த 67 ஆண்டு கால இந்திய வரலாற்றில் எந்த ஒரு பிரதமராவது இப்படி எந்த ஒரு அன்னிய நாட்டுக்கும் திடீரென போயுள்ளனரா? இப்படியான பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனரா? என கேள்வி எழுப்பியுள்ளார். யார் ஜிண்டால்? இப்படி மோடி- ஷெரீப் சந்திப்புக்கு காரணமாக இருந்த சஜ்ஜன் ஜிண்டால் யார்? இரும்புத் தொழிற்சாலைகளை நடத்திவரும் இந்திய தொழிலதிபர் சஜ்ஜன் ஜிண்டால், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான நவீன் ஜிண்டாலின் சகோதரர்தான். 
 
சஜ்ஜன் ஜிண்டால், நவாஸ் ஷெரீப் குடும்பங்கள் தலைமுறைகளாக தொழில்சார்ந்த நட்பு குடும்பங்கள். சஜ்ஜன் ஜிண்டால் தந்தையும் நவாஸ் ஷெரீப்பின் தந்தையும் நாடு விடுதலை அடைவதற்கு முன்பிருந்தே நல்ல நண்பர்களாக இருந்தவர்கள். ஷெரீப்பின் தந்தை தொடக்கத்தில் இரும்பு தொழிற்சாலை தொழிலில்தான் இறங்கினார்.. ஆகையால் தலைமுறைகளாக தொடர்ந்து வருகிறது ஜிண்டால்- ஷெரீப் குடும்ப உறவு. பிரதமர் மோடி பதவியேற்பு விழாவுக்காக டெல்லி வந்திருந்த நவாஸ் ஷெரீப்புக்கு தம்முடைய வீட்டில் தேநீர் விருந்தளித்தவர் ஜிண்டால். 
 
இதனை அப்போது இம்ரான்கான் கடுமையாக விசாரித்திருந்தார். ஒருதொழிலதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தியதற்கு குரியத் மாநாட்டு கட்சியினருக்கு நேரத்தை ஒதுக்கியிருக்கலாம் என கூறியிருந்தார். என்ன ஆதாயம்? இந்திய அரசு இரும்பு தொழிற்சாலையான செயில் (SAIL), தனியார் இரும்பு நிறுவனங்களாக ஜேஎஸ்டபிள்யூ, ஜேஎஸ்பிஎல், மொன்னெட் இஸ்பாட் அண்ட் எனர்ஜி ஆகிய தனியார் நிறுவனங்களுடன் இணைந்து Afisco என்ற கூட்டு நிறுவனத்தை நடத்தி வருகின்றன. 
 
இந்த நிறுவனம், ஆப்கானிஸ்தானின் பாமியான் மாகாணத்தில் இருந்து உயர் ரக இரும்புதாதுகளை வெட்டி எடுத்து ரஷ்யாவின் துறைமுகங்கள் வழியாக மேற்கு மற்றும் தென்னிந்திய துறைமுகங்களுக்கு கொண்டு வரப்படுகின்றன. இதில் ஜேஎஸ்பிஎல் நிறுவனமானது 16% பங்குகளைக் கொண்டது. இதை நடத்தி வருவது சஜ்ஜன் ஜிண்டாலின் தம்பி நவீன் ஜிண்டால்தான். மற்றொரு நிறுவனமான மொன்னெட் இஸ்பாட் அண்ட் எனர்ஜி 4% பங்குகளைக் கொண்டது. இதை ஜிண்டாலின் உறவினர் சந்தீப் ஜஜோடியா நடத்தி வருகிறார். 
 
இப்படி ரஷ்யா துறைமுகங்களுக்கு கொண்டு போய் அங்கிருந்து இந்தியாவுக்குக் கொண்டு வருவதால் ஆகும் செலவைவிட ஆப்கானில் இருந்து பாகிஸ்தானின் கராச்சிக்கு தரைவழியாக இரும்புத்தாதுவை கொண்டு வந்து பின் கராச்சி துறைமுகத்தில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுவருவது என்பதன் மூலம் பெருமளவு செலவு குறையும் என்பது ஜிண்டால் குழுமங்களின் கணக்கு. ஆனால் இதை நடைமுறைப்படுத்துவதற்கு இந்தியா- பாகிஸ்தான் இடையே ஒரு அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் தேவை. 
 
இந்த ஒப்பந்தத்தை உருவாக்கும் முயற்சியாகத்தான் நவாஸ் ஷெரீப்- மோடி பேச்சுவார்த்தைக்கு மெனக்கெடுகிறார் ஜிண்டால் என்பது குற்றச்சாட்டு. இதற்காக குடும்ப நண்பரான நவாஸ் ஷெரீப் மூலம் ஆகக் கூடுமானவரையிலான ஜிண்டால் மேற்கொள்ளும் முயற்சிக்கு பிரதமர் மோடியும் தற்போது கை கொடுத்திருப்பதுதான் பெரும் சர்ச்சையாக உருவெடுத்திருக்கிறது!! இன்னும் எத்தனை பிரளயம் வெடிக்குமோ(!) ://tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: